பதில்: நாங்கள் நாடார்களை மட்டுமே விமர்சனம் செய்கிறோமென்றால், நாடார்கள் யாருமே *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைந்திருக்கமாட்டார்களே! ஆனால், இன்று எங்களோடு இணைந்து சாதி மறுப்பைப் பேசுவோரில் பெரும்பாலானோர் முன்னாள் *’நாடார்கள்’* அல்லவா! இன்னும் சொல்லப்போனால் இயக்கத்தின் தமிழக மாநிலச் செயலாளரே ஒரு முன்னாள் நாடார்தான். கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் 20% முன்னாள் நாடார்கள்தான். கள உண்மை தெரிந்து பேசவேண்டும்.
நாடார்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டிருந்தோரில் பலர் பகுத்தறிவும், மனிதநேயமும் உடையவர்கள் என்பது அவர்கள் இயக்கத்தில் இணைவதன்மூலம் நாங்கள் தெரிந்துகொள்கிறோம். இயக்கத்தில் இணைந்த முன்னாள் நாடார்கள், தங்கள் சாதியினர் நடைமுறையில் எவ்வளவு சாதி உணர்வாளர்கள் என்பதை விபரமாக விளக்கி வருத்தப்படுகிறார்கள்.
எல்லா சாதி கிறிஸ்தவர்களிலும் சாதி உணர்வாளர்கள் உண்டு. எனவே, எல்லா சாதியினரின் சாதி உணர்வையும் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* விமர்சனம் செய்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை சாதி மறுப்பு பரப்புதலுக்கு மிகப்பெரும் தடையாக இருப்போரின் பட்டியலில் *’நாடார்’* என்று தங்களை அழைத்துக் கொள்வோரின் பெயர் முதலிடத்தில் இருக்கிறது. நாங்கள் சாதி மறுப்பைப் பற்றி போதிக்கும்போது எங்களை 100 பேர் எதிர்க்கிறார்கள் என்றால், அதில் 95% பேர் நாடார்களாக இருக்கிறார்களே! எங்கள் ஊழியத்தை இழிவுபடுத்தி, அவதூறு பரப்பி முடக்க நினைப்போரில் பெரும்பான்மையானோர் நாடார்கள்தான் என்று ஆய்வு செய்து கண்டுபிடித்தோம். ஆகவே, அவர்களுடைய சாதிவெறிக்கு எதிராக நாங்கள் உரக்க குரல்கொடுக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை முதலில் சந்துபொந்தெல்லாம் நுழைந்து கிறிஸ்தவத்தை பரப்பி, இந்துக்களாக இருந்த ஒடுக்கப்பட்டோர் ஆயிரக்கணக்கானோரை கிறிஸ்தவத்துக்கு கொண்டுவந்து, ஊசிக் கோபுரங்களைக் கட்டியது இந்த *நாடார்* என்ற அண்ணன்மார்கள்தான். அப்படி கல்வியறிவற்ற, பாமர, ஏழைகளை மதமாற்றம் செய்துவிட்டு, *”நீ எனக்கு காணிக்கை, தசமபாகம் (வருமானத்தில் பத்தில் ஒரு பாகம்) கொடுக்காவிட்டால் சாபம்!”* என்று பழைய உடன்படிக்கையின் வசனங்களைச் சொல்லி அவர்களை பயமுறுத்தி, அந்த ஏழைகளை மிரட்டி, அவர்களுடைய பணத்தை சுருட்டி வக்கணையாக தங்கள் பணப்பைகளை நிரப்புகிறார்கள். சொகுசாக, ஆடம்பரமாக, உல்லாசமாக வாழ்கிறார்கள். *காணிக்கை விஷயத்தில் மட்டும் பாஸ்டர்களுக்கு சாதி உணர்வு துளியும் இல்லை. பணத்துக்கு சாதியில்லை*
ஆனால், அந்த மக்களுக்கு திருமணம் என்று வரும்போது *”நீ புறஜாதி! நீ கீழ்ஜாதி, நீ அந்நிய நுகம்!! நாங்கள் உன்னை திருமணம் செய்யமாட்டோம்; ஆபிரகாம் சாதி பார்த்தார்; வனத்தில போனாலும் இனத்திலதான் அடையணும்; பாத்திரம் பார்த்து பிச்சை கொடுக்கணும்; கோத்திரம் பார்த்து பெண் கொடுக்கணும்”* என்று அவர்களை புறக்கணித்து அப்பட்டமாக சபையில் அவமானப்படுத்துகிறார்கள் இந்த *நாடார் வெறியர்கள்.*
சபையின் சக விசுவாசிகளிடம், _”நீங்கள் என்ன ஜாதி?”_ என்று வாய் கூசாமல் கேட்பது நாடார்களுடைய வழக்கம். நாடார் பாஸ்டர்கள் நடத்தும் பல சபைகளில் தாழ்த்தப்பட்டவர்களை கழிவறை சுத்தம் செய்வது, தரை பெருக்குவது போன்ற பணிகளை செய்ய வைக்கிறார்கள். ஆனால், புகழ் ஈட்டித் தரும் பாதுகாப்பான, மரியாதையான பணிகளை அவர்களுக்குக் கொடுப்பதில்லை. இவர்களுடைய வஞ்சக வலையை அப்பாவி மக்களுக்கு அம்பலப்படுத்தியாகவேண்டுமே! இதில் என்ன அநியாயம் இருக்கிறது? வேலியே பயிரை மேய்வதைப் பார்த்து சகிக்கமுடியுமா?
இவர்கள் தென் தமிழ்நாட்டில் இருக்கும்போது மட்டும்தான் சாதி உணர்வாளர்களாக இருப்பார்கள் என்று சொல்லமுடியவில்லை. வெளிநாடுகளுக்குச் சென்று தலைமுறைகளாக வாழ்ந்தாலும் சாதிப் பிசாசின் கோரப்பிடியிலிருந்து விடுபடமுடியாமல் வாழ்கிறார்கள். இதை வெளிநாட்டு விசுவாசிகள் சொல்லி வருத்தப்படுகிறார்கள். ஆவியானவர்தான் இவர்களைக் காப்பாற்றவேண்டும்.
கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரை தங்கள் பெயருக்குப்பின் தங்கள் சாதியின் பெயரை பெருமையாக எழுதுவோரின் பட்டியலில் *நாடார்களின்* பெயர் உச்சத்தில் நிற்கிறது என்பதையும் நாம் நுட்பமாக புரிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக மும்பை, டில்லி போன்ற பட்டணங்களில் வாழ்வோர் அதை தங்கள் சான்றிதழ்களிலேயே SUR NAME என்ற பெயரில் எழுதுகிறார்கள். அதை தவறு என்று போதகர்களும் சுட்டிக்காட்டுவதில்லை. ஏனென்றால் போதகர்களும் அப்படி எழுதுகிறார்கள். அவர்களுக்குள்ளும் சாதி உணர்வு இருக்கிறது என்பதே ஒரு கசப்பான உண்மை. ஒரு வீட்டில் மூத்த பிள்ளை தவறு செய்தால் அந்த வீட்டிலுள்ள மற்ற பிள்ளைகள், *”அண்ணனே அதை செய்யும்போது நாம் செய்தால் என்ன?”* என்று நினைத்து வழிதவறிப் போகமுடியுமல்லவா!
*இரட்டைத் திருச்சபைகள்*
ஏராளமான இடங்களில், *ஒரே ஊரில்* *நாடார்களுக்கென்று* ஒரு சபைக் கட்டடமும் *நாடார் அல்லாதவர்களுக்கென்று* வேறு சபைக் கட்டடமும் பிரித்துக் கட்டப்பட்டுள்ளது. அதில் நாடார்களின் சபையில் நாடார் அல்லாதவர்கள் உறுப்பினராக மாற முயன்றால் நாடார்கள் இவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. நாடார் அல்லாதவர்களின் சபைக்கு நாடார்கள் போகமாட்டார்கள். சபை வளர்ச்சியில் அக்கரையுடைய ஒருவர் இந்த கொடுமையை கண்டும் காணாமல் கடந்துபோகமுடியுமா?
“நீங்கள் மேல்சாதியும் அல்ல, கீழ்சாதியும் அல்ல” என்று சக விசுவாசிகளுக்கு கற்றுக்கொடுக்கவேண்டிய அண்ணன்மார், “நீங்கள் பிறசாதி, கீழ்சாதி” என்று அவர்களை இழிவுபடுத்துவதை எப்படி சகிக்கமுடியும்? சகோதரத்துவம், சமத்துவம், என்னும் திவ்யப் பண்பாடுகளைக் கற்றுக்கொடுப்பதில் பிறருக்கு முன்னோடிகளாக இருக்கவேண்டிய கிறிஸ்தவர்கள், *”நாங்கள் நாடார் கிறிஸ்தவர்கள், நீங்கள் தலித்து கிறிஸ்தவர்கள்”, நாங்கள் பறையர் கிறிஸ்தவர்கள், நீங்கள் அருந்ததியர் கிறிஸ்தவர்கள்”* என்று இந்துத்துவ சாதி அடிப்படையில் சண்டைபோட்டு சபையை நாசமாக்குவதை *அக்கரையுள்ள கிறிஸ்தவர்கள்* எப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கமுடியும்? இந்த துர்நாற்றத்தை அகற்றவேண்டுமல்லவா?
கிறிஸ்தவர்களாக மாறிய புதிய பலர் திருச்சபையிலுள்ள சாதிய பாகுபாடுகளை பார்த்து, _”கிறிஸ்தவத்தை புரிந்துகொள்ளாமல் நுழைந்துவிட்டோமோ!”_ என்று மனஸ்தாபப்படுகிறார்கள். பலர் சாதி துர்நாற்றத்தைத் தாங்கமுடியாமல் பின்வாங்கித் திரும்ப இந்துத்துவத்துக்கே சென்றுவிட்டனர். பலர் இஸ்லாத்துக்கு மாறிவிட்டனர். பலர் நாத்திகர்களாகிவிட்டனர்.
*எகிப்தின் அடிமைத்துவம்*
_எகிப்து நாட்டில் நீ அடிமையாய் இருந்ததையும், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை விடுவித்ததையும் நீ நினைவில் இருத்து! (இணை 15:15, 24:18)_ என்று எகிப்தில் முன்னாள் அடிமைகளாக இருந்த இஸ்ரயேலரிடம் கடவுள் அறிவுறுத்துகிறார். அதேபோல, நாடார்களும் முற்காலத்தில் தென் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்டோரின் பட்டியலில் இருந்தவர்கள் என்பதையும், _பார்த்தாலே தீட்டு_ என்று இழிவுபடுத்தப்பட்டு, கொடுமைகளை அனுபவித்தவர்கள் என்பதையும் நினைவில் இருத்தவேண்டும்.
1899-ல் நாடார்கள் சிவகாசியிலுள்ள ஒரு இந்து கோயிலுக்குள் நுழைய முயன்றபோது ஆதிக்க சாதியினர் நாடார்களைத் தடுத்து தாக்கினர். அதனால் மனமுடைந்த 3000 நாடார்கள் இஸ்லாத்தைத் தழுவினர். நாடார்கள் இந்து கோயிலுக்குள் நுழையக்கூடாது என்ற சட்டம் நிலவில் இருக்கும்போது, சில நாடார்கள் கமுதி கோயிலில் நுழைந்ததால் அவர்கள் கோயிலை சுத்திகரிப்பதற்காக கோயில் நிர்வாகத்திற்கு அபராதம் செலுத்தினர். இந்த தகவல்களை ‘நாடார் வரலாறு கறுப்பா? காவியா?’ என்ற புத்தகத்தில் படித்தேன். அந்த புத்தகத்தை எழுதியது ஒரு நாடார். ஆகவே, அவரை நாடார்கள் ஒன்றும் செய்யமுடியவில்லை.
முன்பு அவர்கள் தலைமுறைகளாக அனுபவித்த சாதிக் கொடுமைகளை மறந்து, இன்று பணம் வந்தவுடன் சக ஒடுக்கப்பட்டோரைப் பாகுபடுத்தி, அந்நியப்படுத்திக் கொண்டிருப்பது அநியாயமான வேடிக்கையாக இருக்கிறது. இதுதான் கிறிஸ்து கற்பித்த ஆன்மீகமா? இது ஏமாளி அடிமைகளை வைத்து செய்யும் வக்கிரத் தொழில் அல்லவா! இந்த கொடிய வஞ்சக புத்தியை மனதுக்குள் வைத்துக்கொண்டு இவர்கள் நல்லவர்களைப்போல நடிப்பதுதான் ஆத்திரத்தைக் கொண்டுவருகிறது. கெட்டவர்களைவிட நல்லவர்களைப் போல் நடிப்பவர்கள் அல்லவா மிகவும் ஆபத்தானவர்கள்!
*பரிசேயர்களை சாடிய இயேசு*
_”வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! மக்கள் நுழையாதவாறு அவர்கள் முன்பாக விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறீர்கள்; நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை (மத். 23:13,14)_ என்று இப்படிப்பட்டவர்களைப் பற்றித்தான் கிறிஸ்து பேசினார். _வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஒருவரையாவது உங்கள் சமயத்தில் சேர்ப்பதற்கு, நாடு என்றும் கடல் என்றும் பாராது சுற்றி அலைகின்றீர்கள்; அவ்வாறு சேர்த்தபின் அவரை உங்களைவிட இருமடங்கு நரகத் தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள் (மத். 23:15)_ என்று இயேசு கிறிஸ்து மதமாற்ற வெறியர்களை சாடுகிறார். புதிதாக கிறிஸ்தவத்துக்குள் நுழையும் தம்பிகளை இருமடங்கு நரகத் தண்டனைக்குத் தள்ளும் ஆபத்தான அண்ணன்களை அப்படியே விட்டுவிட முடியாதே! அவர்களுடைய அநியாயப் போக்கை கண்டித்தாக வேண்டுமே!
இயேசு கிறிஸ்து வெளிவேடப் பரிசேயர்களைப் பார்த்து கடுங்கோபம் கொந்தளிக்கப் பேசிய வார்த்தைகளை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். மத்தேயு 23-ம் அத்தியாயத்தில் _*வெளிவேட மறைநூல் அறிஞரே, பரிசேயரே உங்களுக்கு ஐயோ!*_ என்று அவர் உணர்வு பூர்வமாக பல தடவை சாடுகிறார். அப்படி அவர் பரிசேயர்களின் பிரிவுப் பெயரைக் குறிப்பாகச் சொல்லி விமர்சித்தது தவறு என்று கூறமுடியுமா? ஏன் பரிசேயர்கள் மட்டும்தான் இயேசுவின் காலத்தில் பாவம் செய்தவர்களா? பரிசேய வகுப்பினரை சாடியதுபோல தீவிரமாக சதுசேயர்களை சாடாதது ஏன்? இயேசுவுக்கும் பரிசேயர்களுக்கும் தனிப்பட்ட விதத்தில் என்ன பிரச்சனை? யாருடைய வாழ்க்கைமுறை சரியில்லையோ அவர்களை கண்டித்தார். பிறருடைய மதத்தை விமர்சனம் செய்யுமளவுக்கு இந்த சாதிவெறி கிறிஸ்தவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?
நாடார்கள் மற்ற சாதியினரைவிட ஊழியத்துக்கு அதிகமாக பணம் கொடுப்பார்களே! என்று புளங்காகிதமடைகின்றனர். தசமபாக பணத்தை ஒழுங்கக் கொடுத்த பக்திமான்களைப் பார்த்து ஆண்டவர் இயேசு சொன்னார்: “வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, சோம்பு, சிரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைக்கிறீர்கள். ஆனால் திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல் விட்டு விடுகிறீர்கள். இவற்றைக் கண்டிப்பாய்க் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றையும் விட்டுவிடக்கூடாது. குருட்டு வழிகாட்டிகளே! நீங்கள் பருகும்போது கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள். ஆனால் ஒட்டகத்தையோ விழுங்கிவிடுகிறீர்கள் (மத். 23:23-24). அதேபோலத் தான் இந்த நாடார்களும் ஊழியங்களுக்கு காணிக்கையை அள்ளிக் கொடுத்தாலும் நீதியற்றல்லவா சாதி பார்க்கிறர்கள்! நீதியுள்ள கிறிஸ்தவர் சக கிறிஸ்தவரையே புறஜாதி என்று புறக்கணிக்கமுடியுமா?
இயேசு சாட்டை எடுத்து விரட்டியதுபோல கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தினர் நாங்கள் சாதி உணர்வுடைய மக்கள் யாரையாவது ஆலயத்திலிருந்து விரட்டிவிட்டோமா? இயேசு காசுக்காரருடைய காசுகளை கீழே கொட்டியதுபோல, காணிக்கை திருடும் சபைக்குச் சென்று நாங்கள் காணிக்கை பெட்டியை கவிழ்த்துப் போட்டோமா? அல்லது சபையின் புத்தக நிலையத்திலுள்ள கல்லா பெட்டியை நாங்கள் கீழே தள்ளிப் போட்டோமா? கிறிஸ்து தேவாலயத்தில் அதிரடி நடவடிக்கையில் இறங்கியதால் அவர் அன்பற்றவர் என்று சொல்லமுடியுமா? நாங்கள் கிறிஸ்து இயேசுவைவிட அன்புடையவர்களா? நாங்கள் செய்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுதான் என்ன? நாங்கள் கருத்தியல்ரீதியாக, அறவழியில்தானே இந்த நல்ல போராட்டத்தைப் போராடுகிறோம். கிறிஸ்தவர்களின் சாதி உணர்வால் இறையரசின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படுகிறது என்ற உண்மையைத்தானே வெளிப்படுத்துகிறோம்! நாம் எல்லோரும் அன்புள்ளவர்களாக, ஒரே தந்தையின் பிள்ளைகளைப்போல ஒற்றுமையாக, சாதி வேறுபாடுகளும் பாகுபாடுகளும் இல்லாமல் வாழவேண்டும் என்று, சபையைப் பற்றிய கரிசனத்தோடு நாங்கள் வலியுறுத்துகிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது? எங்களுக்கு உதவியாக நின்று ஊக்கப்படுத்தவேண்டிய வேத பண்டிதர்களே எங்களை எதிர்க்கும்போது மனம் வலிக்கிறது.
இந்து பிராமணர்களின் சாதி உணர்வை மதசார்பற்ற முற்போக்குச் சிந்தனையாளர்கள் யாராவது சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்யும்போது *’கிறிஸ்தவ நாடார்கள்’* குஷியாகிவிடுகிறார்கள். பார்ப்பனர்களுடைய சாதிவெறியை கண்டிக்கிறோம் என்றெல்லாம் இந்த நாடார்கள் முழங்குவார்கள். ஆனால், கிறிஸ்தவ நாடார்கள் என்று அழைக்கப்படுவோரின் சாதி வக்கிர புத்தியை *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* விமர்சனம் செய்யும்போது கிறிஸ்தவ நாடார்கள் கொதித்து எழுகிறார்கள். என்ன கொடுமை சார் இது! _பிறர் நமக்கு செய்யவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதை நாம் பிறருக்கு முதலில் செய்யவேண்டுமல்லவா! (மத். 7:12)._
தமிழகம் மட்டுமல்ல, இந்தியாலில் எங்கு சென்றாலும் இந்த நாடார்கள் சந்து பொந்தெல்லாம் நுழைந்து தங்கள் மதமாற்ற பணியைச் செய்கிறார்கள். (அவை எதுவும் மனமாற்றப் பணிகள் அல்ல) இவர்கள் தங்கள் கண்ணிலுள்ள மரக்கட்டையை (இந்துத்துவ சாதி) உணராமல் பிறருடைய கண்ணிலிருக்கும் துரும்பை (பாவம்) எடுக்க முயற்சி செய்யும் வேடதாரிகள். _”பிறரில் நீ அடையவிரும்பும் மாற்றத்தை உன்னிடமிருந்தே தொடங்கு”_ என்று விவேகானந்தர் சொன்னார். நியாயமான ஒரு தத்துவம்தானே அது. நம்மைப் பிறர் மதிக்கவேண்டுமானால், நாம் பிறரை மதிக்கவேண்டுமல்லவா!
*”இயேசு நிம்மதி தருகிறார்”* என்று விளம்பரப்படுத்தி தங்கள் பணப்பைகளை நிரப்புவதில் மட்டும் குறியாக இருக்கும் பித்தலாட்டக்காரர்களுடைய தந்திர பொறியில் விழாதபடிக்கு, அப்பாவி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயமல்லவா! இதில் என்ன தவறு இருக்கிறது? குழந்தை செல்லமாக இருக்கலாம். ஆனால், குழந்தையின் மலம் (சாதி) செல்லமாக இருக்கமுடியுமா?
*அதிகமாக பெற்றவர்களிடம்….*
_முதலில் யூதருக்கும் பிறகு கிரேக்கருக்கும் அதாவது, தீமை செய்யும் எல்லா மனிதருக்குமே வேதனையும் நெருக்கடியும் உண்டாகும். அவ்வாறே, முதலில் யூதருக்கும் அடுத்துக் கிரேக்கருக்கும் அதாவது, நன்மை செய்யும் அனைவருக்குமே பெருமையும் மாண்பும் அமைதியும் கிடைக்கும். ஏனெனில் கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை (உரோ. 2:9-11)_ என்று திருத்தூதர் பவுல் பதிவு செய்கிறார். இங்கே _”யூதருக்கு முதலிலும், பிறகு கிரேக்கருக்கும்”_ என்று எழுதப்பட்டிருப்பது பாரபட்சமல்லவா? வெகுமதியானாலும் தண்டனையானாலும், நன்மை செய்பவரும், தீமைசெய்பவரும் யாராயிருந்தாலும் எல்லோருக்கும் ஒரே நேரத்திலும், அளவிலும் அல்லவா கொடுக்கவேண்டும் என்று நாம் சிந்திக்கலாம். அப்படி கொடுப்பதுதான் நீதி என்றும் நாம் நிதானிக்கலாம். ஆனால் அது கடவுளின் பார்வையில் தவறு. எப்படியென்றால், _அவருடைய (கடவுள்) விருப்பத்தை அறியாமல் அடிவாங்கவேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவார். *மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்* (லூக். 12:48)_ என்று ஆண்டவரே கூறுகிறார்.
கடவுள் தன் கட்டளைகளுக்குக் கீழ்படிய தன்னை ஒப்புக்கொடுத்த ஆபிரகாமின் சந்ததியினரை அதிகமாக நேசித்தார். அவர்களிடம் அதிக கண்டிப்பாகவும் இருந்தார். அதிக வரங்கள், வெளிப்பாடுகள் கொடுக்கப்பட்டவர்களிடம் அதிக கனிகளை கடவுள் எதிர்பார்ப்பார் அல்லவா! அன்று கடவுள் யூதர்களிடம் பேசி, திருச்சட்டத்தைக் கொடுத்ததுபோல புறவினத்தாருக்கு அவர் எதையும் போதிக்கவில்லையே! யூதர்களோடு கடவுள் ஒரு தந்தையைப் போல நெருக்கமாக வாழ்ந்து, அதிசயங்களை செய்ததால் அவர்கள் தவறு செய்தபோது கடுமையாகத் தண்டித்தார். அதிக இறைக்கல்வி கற்றவர்களிடம் கடவுள் அதிகம் எதிர்பார்க்கிறார். ஆண்டவருடைய கட்டளைப்படி நினிவேக்கு போகவேண்டிய யோனா தர்சீஷுக்கு போனதால் அந்ந கப்பலில் பயணம் செய்த அவிசுவாசிகள் பட்ட பாடுகள் நம் எல்லோருக்கும் தெரியுமே! அதனால்தான் அதிகம் பொறுப்புகள் கொடுக்கப்பட்ட நாடார்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களிடம் இப்படி அதிக கணக்கு கேட்கப்படுகிறது.