036) நீங்கள் பேசும் ஜாதி மறுப்பு கொள்கை நாத்திக கொள்கைபோல உள்ளதே!

பதில்: ஒருமுறை நான் ஒரு நாத்திகரிடம் (கடவுள் நம்பிக்கை அற்றவர்), “ஐயா, நீங்கள் ஏன் கடவுளை நம்புவதில்லை? என்று கேட்டேன். அதற்கு அவர், “ஐயா, நான் கடவுள் உண்டென்று நம்பினால், கூடவே சாதி பாகுபாட்டுக் கொள்கையையும் நம்பவேண்டுமே! சாதிப் பாகுபாடு இல்லாத ஆன்மீகவாதிகளைக் காட்டுங்கள். எல்லா மனிதர்களையும் என் சகோதரர்களாக சமத்துவ சிந்தையோடு பார்ப்பதற்கு கடவுள் கொள்கை தடையாக இருப்பதால் கடவுளை நான் நம்பமுடியவில்லை”_ என்று சொன்னார். எனக்குக் கதறி அழவேண்டுமென்று தோன்றியது. கிறிஸ்தவர்களும் சாதி பார்ப்பதால்தான் அவர் கடைசியாக இயேசு கிறிஸ்து தரும் விலையேறப் பெற்ற மீட்பையே புறக்கணித்துவிட்டார். சகோதரத்துவத்தை விரும்பும் ஒரு அன்புள்ள மனிதன்கூட கிறிஸ்துவிடம் வருவதற்கு கிறிஸ்தவர்களின் இந்த துர்நாற்ற சாதிப் பாகுபாடு தடையாக இருக்கிறதே என்று மனம் வருந்தினேன்.
ஆக்கபூர்வமான ஒரு தத்துவத்தை யார் சொன்னாலும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நமக்கு வேண்டும். சாதி மறுப்பை, சகோதரத்துவத்தை, சமத்துவத்தை நாம் பேசுவதற்குமுன்பே நாத்திகர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக நாம் அதை ஏன் நிராகரிக்கவேண்டும்? பெரும்பான்மையான கிறிஸ்தவ போதகர்கள் சாதியத்தை எதிர்த்து போதிக்காமல் சுயநலத்தோடு மறைத்துவிடுவதால் உங்களுக்கு இந்த போதனை இன்னும் வந்துசேரவில்லை. அதனால்தான் இந்த மகிமையான தத்துவம் உங்களுக்குப் புதிதாக இருக்கிறது. அதனால்தான் நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். யூதனென்றும் கிரேக்கனென்றும் இல்லை (கொலோ. 3:11), யாரையும் தீட்டுள்ளவர் என்றோ தூய்மையற்றவர் என்றோ சொல்லக்கூடாது (தி.ப. 10:28) என்றெல்லாம் மறைநூலில் எழுதப்பட்டிருப்பதை நீங்கள் வாசித்ததில்லையா? சக கிறிஸ்தவரை சாதி அடிப்படையில் புறக்கணிப்பது பாவம் என்ற ஆன்மீக போதனையை பாஸ்டரிடம் கற்கும் வாய்ப்பில்லாததால் நாத்திகரிடம் கற்கும் பரிதாபமான நிலைக்கு சபை தள்ளப்பட்டுள்ளது. பாஸ்டர்கள் எவ்வளவு மோசமான வயிற்றுப்பிழைப்பு வியாபாரிகள் என்பதை இங்கே அப்பட்டமாக கண்டுபிடிக்கிறோம்.
‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற நல்ல இல்வாழ்வியல் தத்துவத்தை தமிழ் கலாச்சாரம் சொல்வதால் அதை கிறிஸ்தவர்கள் புறக்கணிக்கவேண்டுமா என்ன? அந்த கொள்கையை கிறிஸ்தவ மறைநூலும் போதிப்பது உங்களுக்குத் தெரியாதா? பெண்கள் தங்கள் உடல் முழுவதையும் மூடும் ஆடையை அணியும் கண்ணியமான கலாச்சாரத்தை இஸ்லாமியர்கள் சொல்வதால் நாம் அதை நிராகரித்தேயாக வேண்டுமா என்ன? கிறிஸ்தவ பெண்கள் தகுதியான (கண்ணியமாக) உடையணியவேண்டும் என்று மறைநூல் கூறுகிறதே!
இந்துக்கள் தங்கள் கோயில்களில் அன்னதானம் செய்கிறார்கள். அதேபோல, தென்னிந்திய திருச்சபைகளில் ஆண்டுக்கு ஒருமுறை ‘அசனப்பண்டிகை’ என்ற பெயரில் அன்னதானம் செய்கிறார்கள். இந்துக்கள் அன்னதானம் செய்வதால் கிறிஸ்தவர்கள் அசனப்பண்டிகையை நடத்தக்கூடாது என்று சொல்லமுடியுமா? இஸ்லாமியர்கள் தினமும் 5 வேளை தொழுகை செய்வதால் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையே செய்யக்கூடாது என்று கூறமுடியுமா?
கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கவேண்டிய நல்ல பல கொள்கைகளை நாத்திகர்கள் கடைபிடிக்கிறார்கள். அவர்கள் கடைபிடிக்கும் ஒரு நல்ல கொள்கையை சில கிறிஸ்தவர்கள் கடைபிடிப்பதால், அது நாத்திகக் கொள்கைபோலுள்ளதே! என்று குற்றம் சாட்டுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? மாறாக, சாதி பார்க்காமல் எவரையும் *”திருமணம் செய்யும் மனப்பக்குவம் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகருக்கே இருக்கிறதே; ஆனால், ஆன்மீகவாதிகள் நம்மிடையே இல்லையே”* என்று நாத்திகர்களை நாம் பாராட்டவேண்டுமல்லவா! நாம் வெட்கப்படவேண்டுமே! மனிதநேய விடயத்தில் யாருமே பிறவியிலேயே நாத்திகருமல்ல; கடவுள் நம்பிக்கையாளருமல்ல. கடவுள் நம்பிக்கையாளர்களிடம் இருக்கும் அன்பில்லாமையால் விரக்தியில், மக்கள்மீதுள்ள அக்கரையில் ஒருகூட்டம் மக்கள் கடவுளே இல்லை என்று தீர்மானித்துவிட்டார்கள். அதற்கு அவர்களும் பொறுப்பல்ல. கடவுளை அறியாத அவர்களிடம் இருக்கும் அடிப்படை அன்பு கிறிஸ்தவரிடம் இல்லையே! அந்த கருணாமூர்த்தி இயேசுவின் கல்வாரி அன்பைப் பற்றி போதிக்கும் கிறிஸ்தவ பாஸ்டருக்கே அடிப்படை மனித நேயமும், சகோதரத்துவமும் இல்லையே என்று நாம் வெட்கப்படவேண்டுமல்லவா!
ஆன்மீகத்தின் சாராம்சமே அன்புதான் என்பதை ஆன்மீகவாதிகள் புரிந்துகொள்ளும்போது, நாத்திகம் தானாகவே அழிந்துவிடும் என்பதே என்னுடைய நிலைப்பாடு.