பதில்: கிறிஸ்தவர்களிடையே இருக்கும் சாதியம் என்னும் ஒற்றைக் காரணத்தால்தான் கிறிஸ்தவம் புறக்கணிக்கப்படுகிறது என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் சாதியமே கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு முதன்மையான தடையாக இருக்கிறது என்று கூறுகிறோம்.
கிறிஸ்தவர்கள் செய்யும் எல்லா மீறுதல்களாலும் கிறிஸ்தவம் வெறுக்கப்படுகிறது. ஆனால், கிறிஸ்தவர்கள் செய்யும் எல்லா பாவங்களிலும் மிகப்பெரிய பாவம் பிறரை கீழ்சாதி என்று இழிவுபடுத்துவதாகும். எல்லா நோய்களும் நோய்கள்தான். ஆனால், சமீப காலத்தில் கொரோனா நம்மை அச்சுறுத்தியதைப்போல, வேறு எந்த நோயும் நம்மை பயமுறுத்தவில்லை. அதுபோலத்தான் சாதியும் உள்ளது. இந்த பாவம்தான் ஒடுக்கப்பட்டவர்களே இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்வதற்கு பெரும் தடையாக இருக்கிறது. ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வை உறுதி செய்ய வந்த மேசியாவை (லூக்.4:18) அந்த ஒடுக்கப்பட்டவர்களே புறக்கணிப்பது நம்மை தீவிரமாக சிந்திக்க வைக்கவேண்டும் அல்லவா!
சாதியம் இந்திய கிறிஸ்தவ மக்களுக்குள் இருக்கும் உளவியல் நோய் என்றால், இனவாதம் வெளிநாடுகளில் இருக்கும் உளவியல் நோய். கிறிஸ்தவர்களுக்கிடையே நிலவும் இனவெறியால் பல கோடிபேர் கிறிஸ்தவத்தை புறக்கணித்துவிட்டனர் என்பது வரலாறு நமக்கு கற்றுக்கொடுத்திருக்கும் கசப்பான பாடம்.
சாதியத்துக்கு எதிராக மட்டும்தான் நாங்கள் நிற்கிறோம் என்றால், “வரதட்சணை கேட்டு கொடுமை செய்யாதே நண்பா! பண ஆசை எல்லா தீங்குக்கும் காரணமாய் இருக்கின்றது” என்றும், “லஞ்சம் வாங்கி சம்பாதிக்கவேண்டாம்” என்றும், “கிறிஸ்தவரே, நாம் ஒன்றுபட்டால் வாழ்வும் செழிப்பும் நமக்கு வரும்” என்றும் நாங்கள் பாடல்கள் எழுதி பாடியிருக்கமாட்டோமே!
உலக அளவில் கிறிஸ்தவம் புறக்கணிக்கப்படுவதற்கு காரணம் கிறிஸ்தவர்களின் சமூக விரோத பண்பாடேயாகும். பாவம் மன்னிக்கப்பட்டவனுக்கும் மன்னிக்கப்படாதவனுக்கும் வாழ்க்கையில் வித்தியாசம் இல்லாமல் வாழும்போது பிறர் கிறிஸ்தவத்தை எதிர்க்கத்தானே செய்வார்கள்! தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் குற்றங்கள் குறைக்கப்படும் என்றுதானே மக்கள் சிந்திக்கிறார்கள்!
எந்த பாவத்தையும் துணிகரமாக செய்துவிட்டு, “கடவுளே என் பாவத்தை மன்னியும்” என்று கடவுளிடம் மன்னிப்பு கோருவதை வாடிக்கையாக வைத்திருப்பதுதான் குற்றம் செய்வதை கட்டுப்படுத்தமுடியாத நிலைக்கு சமூகத்தை நகர்த்துகிறது என்பதே உண்மை. இந்தநிலையில், என்ன குற்றம் செய்தாலும் கடவுள் தண்டிக்கமாட்டார் என்னும் ஆன்மீகத்தை மக்கள் எதிர்க்கத்தானே செய்வார்கள்!
அந்த வாழ்வியல் அரசினருக்கு ஒரு அரசியல் சிக்கலாக மாறுகிறதே.! “பாவமன்னிப்பு என்பது குற்றங்களை தயக்கமின்றி செய்யும் தைரியத்தை கொடுக்கிறது” என்றும், “துன்மார்க்கர்கள் உருவாவதற்கு கிறிஸ்தவம் துணை போகிறது” என்றும் கிறிஸ்தவரல்லாதோர் சிந்திக்கிறார்களே! கிறிஸ்தவர்களின் இந்த நிலை கிறிஸ்தவத்தின்மீதான வெறுப்பை பிறருக்குள் உருவாக்குகிறதே! உண்மையை சொல்லவேண்டுமானால், கடவுள் நம் பாவங்களை இயேசுவின் மரணத்தின்மூலம் மன்னித்ததே அவருடைய அன்பின் உயர்ந்த நிலையை நமக்கு வெளிப்படுத்தி, நாம் திரும்பவும் பாவம் செய்யாமல் இருக்கும் வலிமையை நமக்குத் தருவதற்காகத்தான். ஆனால், கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பாவமன்னிப்பை பாவம் செய்யும் உரிமச் சீட்டாக நினைக்கிறார்கள் என்பதே ஒரு கசப்பான உண்மையாகும். இப்படித்தான் கிறிஸ்தவம் பெரும்பான்மையானோரால் வெறுக்கப்படுகிறது.