038) எங்கள் பாஸ்டரே சாதி பார்க்கிறாரே!

பதில்: நீங்கள் சொல்வது உண்மைதான். சாதியம் ஒரு தவறான கொள்கை என்று போதிக்கவேண்டிய போதகர்களே பலர் சாதி உணர்வாளர்களாகத்தான் வாழ்கிறார்கள். இதுபோன்ற போதகர்களுடைய சாதி உணர்வுகளால் திருச்சபையில் விசுவாசிகளிடையே பிரிவினைகளும் சண்டைகளும் உருவாகின்றன. கிறிஸ்தவர்கள் பாகுபாடுகள் இல்லாமல் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் (யோவா. 17:21-23).
பல சாதிவெறி பாஸ்டர்கள் அவர்களைவிட கீழ்சாதியினர் என்று அழைக்கப்படும் விசுவாசிகளின் வீட்டுக்குச் செல்வதில்லை. சென்றாலும் தண்ணீர் கூடக் குடிப்பதில்லை. இவர்களுடைய சாதி உணர்வால் பலர் கிறிஸ்தவத்தை விட்டு வேறு மதங்களுக்கு சென்றுவிட்டார்கள். தாழ்த்தப்பட்டோரை வைத்து ஜெபவீட்டை சுத்தம் செய்யும் வேலையைச் செய்ய வைக்கிறார்கள். ஆனால், அவர்களைத் திருமணம் செய்வதில்லை. ஆபிரகாம் சாதி பார்த்தார் என்று கூறி அவர்களைப் புறக்கணிக்கிறார்கள். தங்கள் சாதி உணர்வால் அவர்கள் கெட்டது மட்டுமல்ல; தங்கள் சபை விசுவாசிகளுக்கும் சாதியம் தவறல்ல என்று போதித்து, அவர்களுக்குள் சாதி உணர்வைத் தூண்டிவிடுகிறார்கள். இதனால், புதிதாக வந்த பலருக்கு திருமணம் ஆகாமல் திரும்ப இந்துத்துவத்துக்கே போனவர்கள் உண்டு. பாஸ்டர்களின் சாதி உணர்வால் ஆயிரக்கணக்கான ஒடுக்ப்பட்டோர் சகோதரத்துவத்தைத் தேடி இஸ்லாத்துக்கும் புத்தத்துக்கும் நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
ஒருமுறை மதுரை மாநகரில் ஒரு பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் ஒரு இளைஞர் அமர்ந்திருந்தார். அவரிடம் நற்செய்தி அறிவிப்பதற்காக, “தம்பி உங்கள் பெயரை தெரிந்துகொள்ளலாமா?” என்று கேட்டேன். அதற்கு அவர் “என்னுடைய பழைய பெயர் *டேனியல்*. இப்போது *ரமனுல்லா* என்று மாற்றியிருக்கிறேன். நான் கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாத்துக்கு மாறியிருக்கிறேன்” என்றார். அவருடைய அந்த பதில் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. “நீங்கள் பிறந்ததே கிறிஸ்தவ குடும்பமா?” என்று கேட்டேன். உடனே அவர், “இல்லை ஐயா! நான் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தேன்; அதில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவன். இந்துவாக இருக்கும்போது சாதி துவேஷ கொடுமைகளை அனுபவித்திருக்கிறேன். அந்த அவமான சாக்கடையிலிருந்து எப்படி தப்பிக்கலாம் என்று சிந்தித்துக்கொண்டிருக்கும்போது கிறிஸ்தவர்கள் எங்கள் கிராமத்துக்கு ஊழியம் செய்ய வந்தார்கள். *உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்; உங்கள் கவலைகள் கண்ணீர் எல்லாம் மறைந்துவிடும்” என்று உருக்கமாகப் பாடினார்கள். இயேசு கிறிஸ்து நிம்மதியைத் தருவார்; நிந்தையை நீக்குவார்* என்று அழகாக பிரசங்கித்தார்கள். இயேசுவின் அன்பைப் பற்றி அவர்கள் விளக்கிப் பேசியபோது *இயேசுவின் கொள்கைக்கு மாறினால் என் பிரச்சனைக்கு விடிவு காலம் உண்டாகும்* என்று நம்பி அவர்களுடைய ஆலயத்துக்கு போனோம். ஆனால், நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் ஆனதால் அந்த பாஸ்டர் எங்கள் வீட்டுக்கு வருவதில்லை. ஆனால், *நாங்கள் கொடுக்கும் காணிக்கையை சந்தோஷமாக வாங்கிக்கொள்வார்.* அதில் அவருக்கு தீண்டாமையே இல்லை. ஆக, *கிறிஸ்தவத்துக்கு வந்தாலும் என் துக்கம் சந்தோஷமாக மாறவில்லையே* என்று விரக்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும்போது இஸ்லாத்தைப் பற்றியும் சமூக சமத்துவத்தைப் பற்றியும் ஒரு நண்பர் என்னிடம் பேசினார். அவர் என்னை மூத்த இஸ்லாமிய அறிஞர் ஒருவரிடம் அறிமுகப்படுத்தினார். அவர் மூலமாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். இப்போது, *அவர்கள் என் வீட்டுக்கு வருகிறார்கள்; நாங்கள் கொடுப்பதை உண்கிறார்கள். அவர்கள் தங்கள் நடுவீட்டில் என்னை அமரவைத்து உணவு பரிமாறுகின்றனர்.* இப்போது சந்தோஷமாக இருக்கிறேன்” என்றார். அந்த சம்பவம் இன்றும் என் மனதைவிட்டு மறையாமல் நிற்கிறது.
“வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! மக்கள் நுழையாதவாறு அவர்கள் முன்பாக விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறீர்கள்; நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை (மத். 23:14) என்று அன்று வாழ்ந்த ஆன்மீகவாதிகளைப் பற்றி இயேசு கிறிஸ்து கூறுகிறார். ஆனால், இந்த வார்த்தைகள் இன்றைய சாதிப் பாஸ்டர்களுக்கும் எவ்வளவு அருமையாகப் பொருந்துகிறது பாருங்கள்.
அவர்கள் கடவுளுடைய பெயரின் மகிமைக்காக *வாழமாட்டார்கள்.* மாறாக, அவர்கள் ஊழிய போர்வையில் சம்பாதிக்க வந்தவர்கள். அவர்கள் தங்கள் *வயிற்றுப் பிழைப்புக்காகவே* வாழ்வார்கள். அப்படிப்பட்டவர்கள் *தங்களுக்கு லாபமாக இருக்கும் சாதி கெளரவத்தை எப்படி விட்டுக்கொடுப்பார்கள்?* அவர்கள் சிலுவைக்குப் பகைஞர்கள். தனக்கு லாபமாயிருப்பதை நஷ்டம் என்று குப்பையில் போட அவர்கள் என்ன *கடவுளின் மகிமைக்காக* ஊழியத்திற்கு வந்தவர்களா? அப்படிப்பட்ட தியாகத்தை அவர்களிடம் எதிர்பார்ப்பதுதான் தவறு.
ஒரே ஊரில், சாதி அடிப்படையில் சபைகள் பிரித்துக் கட்டப்படுவதில் இந்த ஆயர்களுக்கும், பேராயர்களுக்கும் பெரும்பங்கு உண்டு. தங்கள் சாதி உணர்வால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கிறிஸ்துவிடம் வரமுடியாமல் இருக்கிறார்களே என்று இவர்கள் கொஞ்சமும் உணர்வதுமில்லை. வேதாகமக் கல்லூரியில் பல்லாண்டுகள் படித்து தேர்ச்சியடைந்தவர்கள் இப்படி இருப்பதுதான் மிகப்பெரிய வேதனையாக இருக்கிறது. இவர்கள் போதகர்கள் அல்ல; இறையரசின் வளர்ச்சிக்குத் தடையாக நிற்கும் பாதகர்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
உங்கள் சபைப் போதகர் சாதி உணர்வாளராக இருந்தால், அவருக்கு சாதியத்தின் கொடிய விளைவுகளைப் பற்றியும், இறையரசின் வளர்ச்சிக்கு சாதியம் எவ்வளவு பெரிய தடையாக இருக்கிறது என்றும் அவருக்கு நீங்கள் மிகுந்த மரியாதையோடு விளக்கிச் சொல்லலாம். அவர் ஏற்றுக்கொண்டால் நல்லது; ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவரைவிட்டு விலகுவதே உங்கள் ஆன்மீக வளர்ச்சிக்கு நல்லது. “சபையில் பிளவு ஏற்படக் காரணமாயிருப்போருக்கு ஒருமுறை, தேவையானால் இன்னொரு முறை அறிவு புகட்டிவிட்டுப் பின் விட்டுவிடு” (தீத். 3:10) என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார்.
“சகோதர சகோதரிகளே, நான் உங்களிடம் வேண்டுவது; நீங்கள் கற்றுக்கொண்ட போதனையை மீறிப் பிரிவினைகளையும் தடைகளையும் உண்டாக்குகிறவர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்களை விட்டு விலகுங்கள். ஏனெனில், இத்தகையோர் நம் ஆண்டவர் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்யவில்லை; தங்களுடைய வயிற்றுக்கே ஊழியம் செய்கிறார்கள்” (உரோ. 16:17,18) என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார்.
சாதியம் ஒரு பாவம் என்று நமக்குத் தெரியும். ஒரு சபையின் போதகர் கெட்டவார்த்தை பேசினாலோ, களவு செய்தாலோ, விபச்சாரம் செய்தாலோ அந்த சபைக்கு நாம் போகமாட்டோம். ஏனென்றால் அதெல்லாம் பாவம் என்று நமக்குத் தெரியும். ஆனால், ஒரு பாஸ்டர் சாதி பார்க்கிறார் என்று தெரிந்தும், அவர் தன் தவறை ஒப்புக்கொண்டு திருந்தாவிட்டாலும் நாம் அந்த சபைக்கு போகிறோம் என்றால், சாதியம் தவறு என்று நாமே நம்பவில்லை என்று தானே அர்த்தம்! கீழ்சாதி என்று அழைக்கப்படுவோர் கொடுக்கும் காணிக்கையை, மேல்சாதி என்று அழைக்கப்படும் போதகர் மகிழ்ச்சியோடு வாங்கி தன் பணப்பையை நிரப்புகிறார். சாதிப் பாகுபாடு இல்லாமல் காணிக்கை வாங்குகிறார். ஆனால், கீழ்சாதி என்று அழைக்கப்படுவோருடன் திருமணம் செய்யமாட்டார். இதுதான், ஏமாளி அடிமைகளை வைத்து செய்யும் புத்திசாலித்தனமான தொழில்.
“இந்துத்துவ சாதியத்துக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று சபைக்கு போதித்து உணர்த்தவேண்டிய இறையறிவாளர்களே அதன் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறார்களே என்று நினைக்கும்போது மனம் மிகவும் வலிக்கிறது.
_சகோதர சகோதரிகளே, ஒருவர் ஏதேனும் குற்றத்தில் அகப்பட்டுக் கொண்டால் தூய ஆவியைப் பெற்றிருக்கும் நீங்கள் *கனிந்த உள்ளத்தோடு அவரைத் திருத்துங்கள்;* அவரைப் போல் நீங்கள் சோதனைக்கு உள்ளாகாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் (கலா. 6:1)_ என்று திருத்தூதர் பவுல் அறிவுறுத்துகிறார். ஆகவே, நாம் கனிவோடு சாதி மறுப்பை பாஸ்டர்களுக்கும் அவர்கள் சபையாருக்கும் போதிக்கவேண்டும். அவர்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்யவும்வேண்டும். இவர்களும் சராசரி கிறிஸ்தவ விசுவாசிகளைப்போல அறிவுறுத்தப்படவேண்டும். பலர் நமது அன்பு கலந்த அறிவுறுத்தல்மூலம் மனம் திருந்தியிருக்கிறார்கள்.