039) சாதி வேறுபாடுகளைக் கடைபிடித்துக்கொண்டே கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக இருக்கமுடியாதா?

பதில்: இயேசு கிறிஸ்து தன் தந்தையிடம் பிரார்த்தனை செய்யும்போது, “எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்” (யோவா. 17:21) என்று சொல்கிறார். அதாவது, கிறிஸ்தவர்கள் பிரிந்துகிடப்பதுவரை இயேசுதான் கிறிஸ்துவாகிய மீட்பர் என்று பிறமக்கள் நம்பமாட்டார்கள் என்று கிறிஸ்துவே கூறுகிறார். கடவுளின் மகன் மனித வடிவில் வந்து தன் தந்தையிடம் பிரார்த்தனை செய்யும்போது, கிறிஸ்தவர்களின் ஒற்றுமைக்காக வேண்டுகிறாரென்றால் நம்மிடையேயான ஒற்றுமை எவ்வளவு முக்கியமானது என்று புரிந்துகொள்ளவேண்டும்.
கிறிஸ்தவ கொள்கையோடு சற்றும் சம்பந்தமில்லாத இந்துத்துவ சாதி பாகுபாட்டுக் கொள்கையை கிறிஸ்தவர்கள் பின்பற்றிக்கொண்டிருப்பதுவரை எப்படி கிறிஸ்தவர்களுக்குள் சகோதரத்துவம் இருக்கும்? கடவுளின் சாயலாக படைக்கப்பட்டு, ஒரே கிறிஸ்துவின் பரிசுத்த இரத்தத்தால் கழுவப்பட்டு, மீட்கப்பட்ட ஒரு சக விசுவாசியைப் பார்த்து, “நீ என் சாதி அல்ல. நீ அந்நிய சாதி, உன்னை நான் திருமணம் செய்யமுடியாது” என்று புறக்கணிப்பதை ஒரு ஆரோக்கியமான ஆன்மீக வாழ்வியல் என்று எப்படி கூறமுடியும்? ஒரே ஊரில் இரண்டு சாதியினருக்கென்று இரண்டு ஜெபவீடுகள் தனித்தனியே கட்டப்பட்டுள்ளன. சாதி அடிப்படையில் நாம் இப்படி அசிங்கமாகப் பிரிந்துகிடக்கும்போது நம்மை ஒற்றுமை உள்ளவர்கள் என்று பிற மக்கள் எப்படி புரிந்துகொள்வார்கள்?
“கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒரே தகப்பனுடைய பிள்ளைகள் என்ற சகோதரத்துவ புரிதல் உடையவர்கள்; அவர்கள் சாதிப் பாகுபாடுகள் இல்லாமல், அன்போடு, ஒரே தாயின் பிள்ளைகளைப்போல ஒற்றுமையாக வாழ்பவர்கள்” என்று பிறர் சொல்லுமளவுக்கு கிறிஸ்தவர்களாகிய நாம் வாழ்ந்துகாட்டவேண்டும். கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு மிகப் பெரிய தடையாக இருப்பது கிறிஸ்தவர்கள் வரிந்து பற்றிக்கொண்டிருக்கும் பேய்த்தனமான சாதி வேறுபாட்டுக் கொள்கை என்பது கிறிஸ்தவர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, மற்றவர்கள் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.