040) சகோ. அகத்தியன் இஸ்லாத்துக்குப் போவதாகச் சொன்னது ஏன்?

பதில்: நான் பொறியியல் படித்து தேர்ச்சியடைந்தபின், *ஐக்கிய அரேபிய அமீரகத்திலுள்ள துபாயில்* வேலை செய்துகொண்டிருந்தேன். ஒரு நாள் கடவுளின் அழைப்புப் பெற்று, இயேசு கிறிஸ்து தரும் பாவமன்னிப்பின் நற்செய்தி பரப்புரைப் பணி செய்ய இந்தியாவுக்கு வந்தேன். கிறிஸ்துவின் நற்செய்தியை பிறருக்கு பரப்பி, அவர்களை கடவுள் தரும் ஆன்ம மீட்புக்கு திருப்புவதையே என் இலக்காக இறைத்தூண்டலால் உறுதி செய்தேன். குறிப்பாக இந்துத்துவத்தின் ஆணிவேராக இருக்கும் பிராமணர்களுக்கு கிறிஸ்து தரும் பாவமன்னிப்பின் நற்செய்தியைப் பரப்ப வேண்டும் என்று விரும்பினேன்.
ஆரம்ப நாட்களில், “ஒரு ஆன்மாவையாவது (மனிதரையாவது) தாரும் ஆண்டவரே!” என்று நான் கடவுளிடம் கெஞ்சி மன்றாடினேன். ஒரு நாள் டாக்டர் அம்பேத்கர் ஆறு லட்சம் மக்களோடு இந்துத்துவத்தைப் புறக்கணித்து, புத்தத்துக்கு மாறியச் செய்தியை ஒரு புத்தகத்தில் படித்தேன். அந்த செய்தி என்னை வெகுவாக கவர்ந்தது. அதன்பின் டாக்டர் அம்பேத்கருடைய வாழ்க்கை வரலாறு மற்றும் அவருடைய தத்துவச் சிந்தனைகளை படிக்க மேலும் பல புத்தகங்களைப் படித்து ஆய்வு செய்யத் தொடங்கினேன்.
அம்பேத்கர் இந்தியாவிலுள்ள மகாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள இந்து ‘தலித்’ குடும்பம் ஒன்றில் பிறந்தவர். அவர் இந்துத்துவ ஆதிக்க சாதியினரால் சாதி அடிப்படையில் இழிவாக நடத்தப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டவர். எனவே, இந்துத்துவ சாதி கொடுமைகளிலிருந்து விடுதலை அடைய விரும்பினார். அதை அறிந்த அரசியல்வாதிகளும் ஆன்மீகவாதிகளும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அம்பேத்கர் அவற்றை பொருட்படுத்தாமல், சமூக விடுதலையைத் தேடி, ஒரு நாள் 6 லட்சம் ஒடுக்கப்பட்ட இந்து மக்களோடு இந்துத்துவத்தைவிட்டு வெளியேறி புத்தமதத்துக்கு மாறினார்.
ஒரு நற்செய்தி அறிவிப்பாளன் என்ற வகையில் அந்த மாபெரும் மதமாற்றச் செய்தி எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அடிமைத்துவத்திலிருந்து கிறிஸ்து தரும் மாட்சிமிகு விடுதலையின் மார்க்கமாக கிறிஸ்தவம் தன்னை அறிவிக்கிறதே! அப்படியிருக்க, “அம்பேத்கர் தன் விடுதலைக்காக விடுதலை நாயகன் இயேசு அருளிய அன்பின் மார்க்கமாகிய கிறிஸ்தவத்தை ஏன் தேர்வு செய்யவில்லை? என்ற நெருடலான கேள்வி என்னை மிகவும் ஆழமாக துளைத்தெடுத்தது.
இந்து சனாதனவாத சங்கராச்சாரியோ மற்ற பிராமணர்களோ இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளாததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அவர்கள் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டால் அவர்களுடைய உயர்சாதி உறவினர்கள், “நீ கீழ்சாதியினரின் கடவுளை வணங்கச் சென்றுவிட்டாயே!” என்று புறக்கணிப்பார்கள் என்று கருதி கிறிஸ்தவத்தை நிராகரித்திருக்கலாம். ஏனென்றால், கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையானோர் இன்னாள் தாழ்த்தப்பட்டவர்களும், முன்னாள் தாழ்த்தப்பட்டவர்களும்தான். ஆக, மனிதனிடமிருந்து வரும் புகழ்ச்சியை விரும்பும் ஆதிக்க சாதியினர் கிறிஸ்தவத்தை புறக்கணிப்பது ஏன் என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம். ஆனால், ஆதிக்க சாதியினரால் இழிவுபடுத்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்ட அம்பேத்கர் இந்துத்துவ சாதி இழிவிலிருந்து விடுதலை அடைவதற்காக இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்தது ஏன் என்பது எனக்கு புரியாத புதிராகவே இருந்தது.
அப்படி நான் ஒரு ஆழமான தேடலில் இருக்கும்போது, என் நண்பர்கள் பலரிடம் இதைப் பற்றி பேசினேன். அவர்களில் பலர் கிறிஸ்தவர்கள் ஒருவரை ஒருவர் சாதியின் அடிப்படையில் புறக்கணிப்பதைப் பற்றிக் கூறினர். அது என்னை சிந்திக்க வைத்தது. அதன்பின், 1981-ம் ஆண்டு தென்காசி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் 900 இந்து தலித் மக்கள் இந்துத்துவ சாதி இழிவிலிருந்து விடுதலை அடைய இஸ்லாத்துக்கு மாறிய வரலாற்றை ஒரு புத்தகத்தில் வாசித்தேன். அவர்கள் ஏன் அவர்கள் பிரச்சனைக்குத் தீர்வுகாண கிறிஸ்துவிடம் வரவில்லை என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.
2020-ல் கோவை மேட்டுப்பாளையத்திலுள்ள 430 இந்து தலித் மக்கள் இந்துத்துவ சாதி இழிவிலிருந்து விடுதலை அடைய இஸ்லாத்துக்கு நகர்ந்த செய்தியை காணொளியில் பார்த்தேன். ஒரு ஆத்துமாவையாவது தாரும் ஆண்டவரே என்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்த எனக்கு இந்த நிகழ்ச்சிகள் மனவலியையும், பேராச்சரியத்தையும் தந்தன. தன்னிடம் வரும் எவரையும் ஏற்றுக்கொண்டு (யோவா. 6:37) அவர்களை புதுப் படைப்பாக மாற்றி (2கொரி. 5:17) அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளியாகிய (யோவா. 1:9) கிறிஸ்து என்ற இந்த உண்மை தெய்வத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள எது தடையாக இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்தேன். பல கிறிஸ்தவ ஊழியர்களோடு அதைப் பற்றி பேசியபோது, இந்துக்கள் பின்பற்றும் சாதிய பாகுபாடுகள் கிறிஸ்தவர்களிடையே இருப்பதுதான் என்று கண்டுபிடித்து உறுதி செய்தேன்.
அதன்பின், கிறிஸ்துவின் சத்தியத்தை போதிக்க சபைகளுக்கு போகும்போது கிறிஸ்தவர்கள் சாதி பாகுபாட்டைக் கடைபிடிக்கக்கூடாது என்றும், சாதியமே இறையரசின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கிறது என்றும் போதித்தேன். ஆனால், ஆச்சரியமான சங்கதி என்னவென்றால் பெரும்பான்மையான போதகர்களே என்னை வன்மையாக எதிர்த்தனர். நான் எழுதிய, “அன்புள்ளவர்கள் பிறரை சாதி அடிப்படையில் புறக்கணிக்கமுடியுமா?” என்ற புத்தகத்தை யாரும் வாங்கக்கூடாது என்று சாதிவெறிப் பாஸ்டர்கள் பலர் பகிரங்கமாக சபையில் அறிவித்தனர். முன்பு நான், “இந்து சகோதரர்களின் 100 கேள்விகளுக்கு பதில்கள்” என்று எழுதி வெளியிட்ட புத்தகத்தை ஆர்வமாக வாங்கிப் படித்த கிறிஸ்தவர்கள் இப்போது என்னை பரம எதிரியைப் போல பார்த்தனர். குறிப்பாக கிறிஸ்தவ நாடார்கள் என்று தங்களை அழைத்துக்கொள்வோர் எனக்குக் கொலைமிரட்டல் விடுத்தனர். “ஆபிரகாம் சாதி பார்த்தார்” என்று சொல்லி அவர்கள் தங்கள் சாதி உணர்வை நியாயப்படுத்த முயன்றனர்.
அதன்பின், கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம் என்ற ஒரு ஊழியத்தை தொடங்கி நடத்தத் தொடங்கினோம். அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். சாதி உணர்வு உடையவராக இருந்த கிறிஸ்தவர்கள் பல்லாயிரக்கணக்கானோரை இந்த இயக்கம் விடுவித்துள்ளது. ஆனால், சாதிப் பாஸ்டர்களிடமிருந்து மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் நாளுக்குநாள் வலுத்தது. இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், நான் போதித்த சாதிமறுப்பை சாதியால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களே எதிர்த்தனர். ஏனென்றால், நடைமுறையில் ஒடுக்கப்பட்டோரிலும் கிட்டத்தட்ட எல்லோருமே சாதி உணர்வு உடையவர்கள்தான். ஒடுக்கப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் மற்ற பிரிவினரை ஒடுக்குகிறார்கள். அவர்களால் என் கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அந்த கொடுமைதான் என்னை மிகவும் வியக்கவைத்தது.
அதன்பின், சாதி உணர்வுள்ள கிறிஸ்தவ சமூகத்துக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவேண்டும் என்று தீர்மானித்தேன். நான் 2000 கிறிஸ்தவர்களை அழைத்துக்கொண்டு இஸ்லாத்தை தழுவப் போவதாக அறிவித்தேன். அதுவரை என்னைக் கண்டுகொள்ளாத கிறிஸ்தவர்களும், கடுமையாக எதிர்த்த போதகர்களும் பேரதிர்ச்சியோடு என்னைத் திரும்பிப் பார்த்தனர். உலகெங்கும் வாழும் தமிழ் கிறிஸ்தவர்களுக்குள் சாதியத்தின் தீமையைப் பற்றிய விழிப்புணர்வு சில நாட்களிலேயே சென்றடைந்தது. ஆனால், அதன்பின் அப்படி செய்தது தவறு என்று கடவுள் என்னை உணர்த்தினர். ஆகவே, என் பிரார்த்தனையில் கடவுளிடம் மட்டுமல்ல, ஊடகங்களில் என்னால் குழப்பமடைந்த பொதுமக்களிடமும் மன்னிப்பு கேட்டேன்.
நான் இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பை அன்று நம்பியதுபோல இன்றும் நம்புகிறேன். அவர் அடைந்த மரணத்தின்மூலம் நான் நித்தியஜீவனைப் பெற்றுக்கொண்ட நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். பெரிய பெரிய போதகர்களின் எதிர்ப்புகளையும் தாண்டி ஊழியம் வெற்றி நடை போடுகிறது. ஆயிரக்கணக்கானோர் இயக்கத்தில் இணைந்துள்ளனர். இயேசுவின் பெயரில் கடவுளுக்கே புகழ்ச்சி.