பதில்: ஏன் அதோடு நிறுத்திவிட்டீர்கள்? அதன்பின் இரண்டு வருடங்களாக (2020-2022) அதே கோவையில் 4000 இந்து தலித்துகள் இஸ்லாத்துக்கு மாறியுள்ளனர். அதற்கும் அகத்தியனே பொறுப்பு என்று சொல்லுங்கள்.
இவர்களெல்லாம் இஸ்லாத்துக்கு நகர்ந்ததற்கு நான்தான் பொறுப்பென்றால், நான் இரட்சிக்கப்படுவதற்குமுன் 12-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது, தென்காசி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் 900 ஒடுக்கப்பட்ட இந்துக்கள் இஸ்லாத்துக்கு மாறினார்களே! அதற்கு யார் பொறுப்பு?
நான் பிறப்பதற்கு முன்பே 1956-ல் அம்பேத்கர் *இந்துத்துவ சாதி இழிவிலிருந்து விடுதலை அடைவதற்காக* ஆறு லட்சம் ஒடுக்கப்பட்ட இந்துக்களோடு பெளத்தத்துக்கு மாறினாரே. அதற்கு யார் பொறுப்பு?
2018 ஏப்ரல் குஜராத்திலுள்ள 300 ஒடுக்கப்பட்ட இந்துக்கள் *இந்துத்துவ சாதி இழிவிலிருந்து விடுதலை அடைவதற்காக* பெளத்தத்துக்கு மாறினார்கள். அதற்கு யார் பொறுப்பு?
2020 அக்டோபர் உ.பி-யிலுள்ள 236 ஒடுக்கப்பட்ட இந்துக்கள் இந்துத்துவ சாதி இழிவிலிருந்து விடுதலை அடைவதற்காக பெளத்தத்துக்கு மாறினார்கள். அதற்கு யார் பொறுப்பு?
“சாதிய கட்டமைப்பிலிருந்து விடுதலை அடைய வேண்டும் என்னும் நோக்கத்தில் மதம் மாறுபவர்கள் நிச்சயமாக கிறிஸ்தவத்தை தேர்வு செய்யமாட்டார்கள்; ஏனென்றால் கிறிஸ்தவம் சாதி சாக்கடையில் மூழ்கி இருக்கிறது” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறியதற்கு யார் பொறுப்பு?
கிறிஸ்தவர்கள் சாதி பார்க்கிறார்கள் என்று அகத்தியர் பேசிவிட்டார். அதனால்தான் கிறிஸ்தவர்களுக்கிடையே இருக்கும் சாதிப் பாகுபாடுகளால், கிறிஸ்தவர்கள் இஸ்லாத்துக்கு போகிறார்கள் என்றால், அதை தடுத்துநிறுத்த விரும்புகிறவர் என்ன செய்யத் தொடங்கியிருக்கவேண்டும்? சாதியத்துக்கு எதிராக வேத வார்த்தையின் அடிப்படையில் கிறிஸ்தவர்களிடத்தில் கடிந்து போதிக்கவேண்டும். அதை விட்டுவிட்டு அப்படி போதிப்பவர்கள்மீது அவதூறு பரப்புவதில் என்ன அர்த்தமிருக்கிறது?
தவறு செய்வது தவறல்ல; தவறை தவறு என்று சுட்டிக்காட்டுவதுதான் தவறு என்று கூறுவது பட்டவர்த்தமான அயோக்கியத்தனம் அல்லவா! சாதி பார்ப்பது தவறல்ல! அதை தவறு என்று சுட்டிக்காட்டுவதுதான் தவறு என்று சொல்வதுதான் தரமான ஆன்மீகமா? இதைத்தான் கிறிஸ்துவும், திருத்தூதர்களும் கற்றுக்கொடுத்தார்களா? பாவம் செய்பவர்கள்மூலம் வரும் இடறல் அதிகமா அல்லது பாவத்தைக் கடிந்து போதிப்பவர்மூலம் வரும் இடறல் அதிகமா? பகுத்தறிவோடு சிந்திக்கவேண்டாமா?
*_இறை வார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு. கண்டித்துப் பேசு; கடிந்துகொள்; அறிவுரை கூறு; மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு (2திமொ. 4:2)_* என்றல்லவா மறைநூல் கூறுகிறது!
கிறிஸ்தவ ஊழியர்கள், குறிப்பாக தங்களை நற்செய்தி அறிவிப்பாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு சாதியத்தால் திருச்சபையின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படுவது நன்றாகத் தெரியுமே! ஏன் அவர்கள் சாதியத்துக்கு எதிராகப் பேசுவதில்லை? அவர்கள் பேசமுடியாது. ஏனென்றால், பாதிரியார்கள், பாஸ்டர்கள், நற்செய்தி அறிவிப்பாளர்களுக்குள்ளேயே கடுமையான சாதி உணர்வுகள் இருக்கும்போது அவர்கள் எப்படி சாதியை எதிர்த்து போதிப்பார்கள்? பானையில் இல்லாதது எப்படி அகப்பையில் வரும்? இரட்சிப்பு, அபிஷேகம், பரிசுத்தம், கடவுளின் மனதுருக்கம் என்று நீண்ட பிரசங்கம் செய்யும் சாதி உணர்வுடைய ஆன்மீகவாதிகளின் முகத்தில் கிறிஸ்தவர்களே காறி உமிழ்கிறார்களே! காரணம் இவர்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளாக இருப்பதால் அல்லவா!
துர்நாற்றம் வீசும் நம் வீட்டை சுத்தப்படுத்தாமல் மதிப்புக்குரிய விருந்தாளிகளை விருந்துக்கு அழைப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? மனம் முழுவதும் இந்துத்துவ சாதி துர்நாற்றத்தை வைத்துக்கொண்டு இந்துக்களை மதமாற்றம் செய்ய நினைப்பது அநியாய மதமாற்றவெறியல்லவா!
கிறிஸ்துவின் சீடர்களாகிய நாம் கிறிஸ்துவின் சகோதரத்துவ, சமத்துவக் கொள்கையைக் கடைபிடிக்காமல், இந்துக்களின் சாதியத்தைக் கடைபிடித்துக்கொண்டிருக்க, கிறிஸ்தவத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென இந்துக்களை நாம் எப்படிக் கட்டாயப்படுத்தலாம்? (கலா. 2:14)
இயேசுவின் பேச்சைக் கேட்டு அவரை அதுவரை பின்பற்றிக்கொண்டிருந்த பலர் இயேசுவைவிட்டுப் பின்வாங்கிவிட்டார்கள் (யோவா. 6:66) என்பதற்காக இயேசுவுக்கு சரியாகப் பேசத் தெரியவில்லை என்றோ, ஆத்துமபாரமற்றவர் என்றோ, இவர் மக்களை இடறப்பண்ணுகிறார் என்றோ விமர்சிக்கப் போகிறீர்களா? அல்லது அதை நியாயப்படுத்தப் போகிறீர்களா?
இஸ்லாமியர்களிடம் விவாதம் செய்து அவர்களை கர்த்தரிடம் கொண்டுவந்துவிடலாம் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால், வார்த்தைஜால விவாதத்தின்மூலமல்ல, விசுவாசிகளின் நற்சாட்சியுள்ள வாழ்க்கைமூலம்தான் மாற்றங்கள் வரும் என்பது இவர்களுக்குப் புரியவில்லை. இவர்கள் என்னத்தான் குரானையும் பைபிளையும் வைத்து விவாதம் செய்தாலும், மனதுக்குள் சாதி அழுக்கை வைத்துக்கொண்டு என்ன சாதிக்கப் போகிறார்கள்? விவாதம் செய்து மக்களை கடவுளிடம் சேர்த்துவிடலாமென்றால், இயேசு கிறிஸ்து ஒரு வலிமிகுந்த மரணத்தின்மூலம் நம்மை மீட்கவேண்டிய தேவை இல்லையே! உலகிலுள்ள எல்லோரைவிடவும் கடவுள் கிறிஸ்தவர்களுக்கு அதிக விவாத வலிமையை கொடுத்தால் போதுமே! முழு உலகத்தையும் நம் அறிவு வலிமையால் வளைத்துவிடலாமே! நமது அறிவு அறைகுறையானது; அன்பே தலை சிறந்தது என்று என்று திருத்தூதர் பவுல் பதிவுசெய்கிறார். அன்பை வலியுறுத்துகிறவர்கள் சக கிறிஸ்தவரை புறசாதி, கீழ்சாதி என்று புறக்கணிக்க முடியுமா?
“ஆபிரகாம் சாதி பார்த்தார், ஈசாக்கு சாதி பார்த்தார்; அதனால் நாமும் சாதி பார்க்கவேண்டும்” என்ற கள்ள உபதேசத்தை எதிர்த்து, நான் சாதி மறுப்பை புது உடன்படிக்கையின் அடிப்படையில் பிரச்சாரம் செய்வதை தவறு என்று எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?