042) ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு பண்பாடு உண்டு. எனவே, சாதி மாறி திருமணம் செய்வது பிரச்சனையில் முடியும்!

பதில்: கடவுளே மனிதனை பண்பாடு மற்றும் தொழிலின் அடிப்படையில் நான்கு வர்ணங்களாகப் பிரித்தே படைத்தார் என்பது இந்துத்துவ கொள்கை. “சாதுர் வர்ண்யம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஷஹ” (பகவத்கீதை 4:13). ஆனால், அதை கிறிஸ்தவ மறைநூல் நம்பவில்லை. மாறாக, கடவுளால் கடவுளின் சாயலாக நேரடியாக படைக்கப்பட்ட ஒற்றை மனிதன் ஆதாம், மற்றும் அவருடைய விலா எலும்பிலிருந்து உருவாக்கப்பட்ட ஏவாள் என்ற பெண்மணி என்னும் இருவரையும் தொடக்கப் புள்ளியாக வைத்தே மொத்த உலக மக்களும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அது பதிவு செய்கிறது. இறைபக்தியுள்ள சந்ததியை (பிரிவினைகளும் பாகுபாடுகளும் இல்லாத மனுக்குலம்) உருவாக்குவதற்காக ஒரே மனிதனிடமிருந்து இவ்வுலக மனிதர்கள் அனைவரையும் கடவுள் பிறப்பித்துள்ளார் (மல். 2:15, தி.ப. 17:26). ஆகவே, கிறிஸ்தவர்கள் தங்களை ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்கள் என்றும், அந்த சாதி அடிப்படையில் பண்பாடு அமையும் என்றும் ஒத்துக்கொள்ள முடியாது.
பைபிளை புனித நூலாக நம்புவோர் மட்டுமே “கடவுள் மனிதனை சாதி அடிப்படையில் படைக்கவில்லை; படைத்த கடவுளுக்குமுன் படைக்கப்பட்ட மனிதர் அனைவரும் சமம்” என்று நம்புகிறார்கள். சாதி என்ற அமைப்பை நிஜமான அந்த ஒற்றைக் கடவுள் உருவாக்கவில்லை என்பதே மிகவும் முக்கியமான உண்மை. சாதி அடிப்படையில் தனிப் பண்பாடு உண்டு என்று ஒத்துக்கொண்டால், கடவுள் மனிதனை சாதி அடிப்படையில் பிரித்தே படைத்தார் என்ற இந்துத்துவத் தத்துவத்தை நாமும் மறைமுகமாக நம்புகிறோம் என்று அர்த்தம். கிறிஸ்துவால் மீட்கப்பட்ட ஒருவர் தன்னை ஒரு குறிப்பிட்ட சாதி என்று அடையாளப்படுத்துவதே தவறல்லவா!
ஒரு பேச்சுக்கு சாதி இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். ஒரே சாதியில் திருமணம் செய்தால் மணவாழ்வில் பிரச்சனை வருவதில்லையா? ஒரே சாதியில் நடந்த திருமணங்கள் பல விவாகரத்தில் முடிந்திருக்கிறதே! சாதிமறுப்பு திருமணம் செய்தவர்கள் பலர் இணக்கமாக வாழ்கிறார்களே! சாதிமறுப்புத் திருமணம் செய்தோரின் மணஉறவில் ஏதாவது கருத்து வேறுபாடுகளோ, மனத்தாங்கல்களோ வந்தால் சாதிமறுப்பு திருமணம்தான் அதற்குக் காரணம் என்ற பகுத்தறிவுக்குப் புறம்பான முடிவுக்கு வருவதில் அர்த்தம் இல்லை. சத்தியத்தை அறிந்து, கிறிஸ்தவ இறையியலைப் புரிந்து, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, மீட்கப்பட்டவர்கள், கிறிஸ்துவுக்குள் சாதி என்ற ஒன்று இல்லை என்ற உன்னத கொள்கையை நாளாவட்டத்தில் மறைநூல்மூலம் அறிந்துகொள்கிறார்கள். பாரதியார், “சாதிகள் இல்லையடி பாப்பா” என்று சொன்னார். நாங்கள், “சாதிகள் இருக்குதடி பாப்பா; அதை ஒழிக்கவேண்டுமடி பாப்பா” என்று சொல்கிறோம்.
கிறிஸ்தவத்துக்கும் இந்துத்துவ பாகுபாட்டுக் கொள்கையாகிய சாதியத்துக்கும் சம்பந்தம் இல்லாததால், நாங்கள் கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் இந்துத்துவ சாதியத்தை ஒழிப்பதற்காக *’கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்’* என்ற ஒரு அமைப்பை தொடங்கி அரசாங்கத்தில் பதிவு செய்து நடத்திக்கொண்டிருக்கிறோம். “சாதி பார்க்கும் கிறிஸ்தவனே, நீ கிறிஸ்தவன் என்று சொல்வது நியாயமா?” என்ற பாடலை எழுதி அதை வெளியிட்டுள்ளோம்.
நாங்கள் சாதிமறுப்பு கொள்கையை எங்கும் போதிக்கிறோம். இயக்கத்தில் இருப்போரில் பெரும்பான்மையானோர் பெற்றோரின் ஆசீர்வாதத்தோடு சாதிமறுப்புத் திருமணம் செய்தவர்கள். மீதியுள்ளவர்கள் திருமணத்துக்குப் பிறகு சாதிமறுப்பைப் பற்றி கேள்விப்பட்டு அதை ஏற்றுக்கொண்டவர்கள்.
தாழ்ந்த சாதி எனப்படுவோருக்கென்று ஒரு பண்பாடும், உயர்வகுப்பினர் எனப்படுவோருக்கென்று ஒரு பண்பாடும் இல்லை என்பதே விஞ்ஞானபூர்வமான உண்மை. நிஜம் இப்படி இருந்தாலும், மனிதர்கள் தங்களை ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்களாகக் காட்டி, “நாங்கள் இன்ன சாதி, இன்னின்னவை எங்கள் சாதிக்குரிய கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம், பழக்கவழக்கம்” என்று வகுத்து வாழ்வோர், அவரவருடைய பண்பாட்டு, கலாச்சாரப்படிதான் அவர்களுடைய ஆளுமையையும் கட்டமைப்பார்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மைதான்!
“எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே; அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே” என்று ஒரு கவிஞர் பாடினார். ஆனால், “இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்; பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள்” (தி.பா. 51:5) என்று தாவீது அரசர் சொல்வதிலிருந்து, எல்லா குழந்தையும் பாவத்தோடு பிறக்கின்றன என்று அறிகிறோம்.
“ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது” (உரோ. 5:12) என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார். ஆதாமின் பிறவிப்பாவம், இன்று பிறக்கும் குழந்தையின் பெற்றோர்மூலம் அந்த குழந்தையை பாவத்தோடேயே பிறக்கவைக்கிறது. ஆக, பிறவியிலேயே யாரும் தூயவரல்ல என்று அறிகிறோம். என்றாலும் ஒரு குழந்தை வளர்க்கப்படும் விதமும் அதன் பண்பாட்டை கட்டமைக்கிறது என்பதையும் நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.
பிராமணர்கள் தலைமுறைகளாக கல்வி கற்கும் வாய்ப்பு பெற்றவர்கள். ஆகவே, அவர்களுக்கு சுயமரியாதையும், அறிவாண்மையும் அதிகமாக இருக்குமல்லவா! ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் தலைமுறைகளாக கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தவர்கள். ஆகவே, அவர்களுக்கு சுயமரியாதையும் அறிவாண்மையும் குறைவாக இருக்கலாம். ஒரு பிராமண குழந்தையை ஒரு தாழ்த்தப்பட்டவருடைய குடும்பத்தில் வளர்த்தால், அந்த குழந்தையின் கலாச்சாரமும் பண்பாடும் தாழ்த்தப்பட்டோருடையது போலவே இருக்கும். அந்த குழந்தை தாழ்த்தப்பட்டோருடைய பேச்சு, உடை, உணவு போன்றவற்றை பின்பற்றும். அதேபோல, தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்த ஒரு குழந்தை ஒரு பிராமண குடும்பத்தில் வளரும்போது அதன் கலாச்சாரமும் பண்பாடும் பிராமணருடையது போலவே இருக்கும். அந்த குழந்தை பிராமணர்களுடைய பேச்சு, உடை, உணவு போன்றவற்றை பின்பற்றும். அதற்கு அந்த குழந்தைகள் பொறுப்பேற்கமுடியாது.
நல்லவர்களோடு நட்புறவில் வாழ்பவர்கள் நல்லவர்களாக வாழ வாய்ப்புகள் அதிகம். கெட்டவர்களோடு நட்புறவில் வாழ்பவர்கள் கெட்டவர்களாக வாழ வாய்ப்புகள் அதிகம். *”பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்”, “பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும்”* என்ற பழமொழிகள் நடைமுறையில் உண்மைதானே! சாதி ஒழியவேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்பதற்காக இந்த யதார்த்த உண்மையை மறைக்கமுடியாது!
மனம் திருந்திய இளைய மைந்தன், தந்தையின் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, கடுங்கோபத்தோடு அவருடைய அண்ணன் தந்தையைப் பார்த்து, “விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!” (லூக். 15:30) தம்பியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். ஆம்; தந்தையின் வீட்டுக் கலாச்சாரத்திலிருந்து வெளியேறி பாவச் சேற்றில் உழன்று, பன்றி மேய்க்கும் கலாச்சாரத்திற்கு நகர்ந்த அம்மகனுடைய கலாச்சாரத்தில், பண்பாட்டில் சில சிதைவுகள் கண்டிப்பாக வந்திருக்கும். ஆனால், அவருடைய தந்தை உள்ளன்போடு அந்த இளைய மகனை ஏற்றுக்கொண்டு, தன் மகனுடைய மனம் திரும்புதலைக் கொண்டாடுகிறார். மூத்த மகன் தன் மனம் திருந்திய தம்பியை அன்போடு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அதேபோல கடவுள் எந்த சாதி மக்களையும் ஏற்றுக்கொள்கிறார். ஏனெனில், அவர்களையும் படைத்தது நாம் வணங்கும் ஒற்றைக் கடவுள் என்ற தந்தைதானே! ஆகவே, நாமும் அவர்களை நம் சகோதரமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். கடவுள் சபிக்காதவனை நான் எப்படிச் சபிப்பேன்? கடவுள் பழித்துரைக்காதவனை நான் எப்படிப் பழித்துரைப்பேன்? (எண்.23:8) என்று பழைய உடன்படிக்கையின் நாட்களிலேயே பிலெயாம் என்ற இறைவாக்கினர் கேள்வி கேட்டார். கடவுளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவரை புறக்கணிக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை.
“நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” (யோவா. 13:34) என்று இயேசு பெருமான் அறிவுறுத்துகிறார். “கிறிஸ்து உங்களை ஏற்றுக் கொண்டதுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள்” (உரோ. 15:7) என்று திருத்தூதர் பவுல் அறிவுறுத்துகிறார். அதாவது, கடவுளின் மாட்சிமைக்காக வாழும் நாம், கிறிஸ்து நம்மை நேசிப்பதுபோல நாமும் சக விசுவாசிகளை நேசித்து, கிறிஸ்து நம்மை ஏற்றுக் கொண்டதுபோல நாமும் சக விசுவாசிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஒருவருடைய நாகரீக வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான காரணங்களுள் ஒன்று கல்வியறிவு ஆகும். இது எல்லா சமூகவியல் அறிஞர்களுக்கும் தெரியும். இதை யாரும் எளிதில் மறுக்கமுடியாது. கல்வியறிவு வளர வளர மனிதனுக்கு தன்னைப்பற்றிய அறிவு அதிகமாகிறது. கல்வி கிடைக்கப்பெற்றவர், தான் எவ்வளவு மதிப்புயர்ந்த சமூக உயிரி என்று கண்டுபிடிக்கிறார். அதாவது, அவருக்குள் சுயமரியாதை வளர்கிறது. ஆகவே, பிறர் தன்னை மதிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கத் தொடங்குகிறார். எனவே, பிறர் தன்னை எதிர்மறையாக விமர்சிக்கக்கூடாது என்று அவர் எச்சரிப்பாக இருப்பார். ஆதலால், அவர் சுயக்கட்டுப்பாடு இல்லாமல் தவறு செய்ய நினைக்கும்போது வெளிப்படையாக செய்யாமல் அதை இரகசியமாக செய்வார். ஆக, படிப்பு மனிதனை திறமையாக நடிக்க வைக்கிறது. கல்வியறிவற்றவர், தான் தவறு செய்யும்போது பிறர் தன்னை தவறாக நினைப்பார்களே என்னும் சுயமரியாதை உணர்வு குறைவாக இருப்பதால், தான் செய்ய நினைக்கும் தவறை வெளியரங்கமாகவே செய்துவிடுகிறார்.
படிப்பறிவுடையவர் தன்னை யாரும் அநியாயமாக விமர்சித்துவிட்டாலேயே அதை சகிக்கமுடியாமல் கருத்தியல்மூலம் எதிர்வினையாற்றும் வலிமை அதிகம் உடையவராக மாறுகிறார். ஆனால், கல்வியறிவற்றவர் அந்த சவால்களை கருத்தியல் மூலம் எதிர்கொள்ளும் விவாத வலிமை குறைந்தவர். அவர் செய்யும் தவறுகளை தவறு என்று கண்டுபிடிக்கும் அறிவாற்றலும் அவருக்கு குறைவாகவே இருக்கும்.
எடுத்துக்காட்டாக, *பிறருக்கு தீங்கு இழைக்கும் மனப்பான்மை எல்லோரிடமும் இருந்தாலும், கல்வியறிவு உடையவர் சுயமரியாதை அதிகம் உடையவராதலால், நாகரீகமான முறையில் அந்த தீங்கை செய்வார்.* ஆனால் கல்வியறிவற்றவர் படித்தவரைவிட சுயமரியாதை குறைந்தவராதலால், படித்தவரைவிட அநாகரீகமாக நடந்துகொள்ள வாய்ப்புகள் அதிகம் உண்டு.
எடுத்துக்காட்டாக, படித்தவர்களும் படிக்காதவர்களும் மதுபானம் அருந்துவார்கள். ஆனால் படித்தவர்கள் படுநாகரீகமாக, இரகசியமாக மதுவை அருந்தி, அங்கேயே வாந்தி எடுப்பார்கள். பாலியல் முறைகேடுகளில் ஈடுபடுவார்கள். ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகளை பேசுவார்கள். அடுத்தநாள் உத்தம புத்திரர்கள்போல பொதுவெளியில் நடிப்பதை நாம் காணமுடியும். அவர்கள் செய்யும் தவறுகளை யாரும் எளிதில் கண்டுபிடிக்கமுடியாது. ஆனால், படிக்காதவர், வெளிப்படையாகக் குடித்து, சாலையில் விழுந்துகிடப்பார். அங்கேயே வாந்தி எடுப்பார்; தன் தாய்மொழியில் கெட்டவார்த்தை பேசுவார்.
சுயமரியாதை குறைந்தவர் தன்னை பிறர் மதிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கமாட்டார். தன்னை தானே மதிக்காத ஒருவர், பிறர் தன்னை மதிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கவும் முடியாதே! நான் எனக்கு மதிப்பு கொடுத்தால்தான் பிறரும் என்னை மதிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எனக்கு வரும்.
தன்னை கீழ்சாதி என்றே விடாப்பிடியாக நம்பிக் கொண்டிருப்பவருக்குள் சுயமரியாதை குறைவாகவே இருக்கும். பிறர் தன்னை மதிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் குறைவாகவே இருக்கும். அதனால்தான், தன்னை கீழ்சாதி என்று ஆழமாக நம்பும் கல்வியறிவற்ற ஒருவரிடம் “நீங்கள் கீழ்சாதி அல்ல; கடவுள் மனிதனை சாதி அடிப்படையில் படைக்கவில்லை; படைத்த கடவுளுக்குமுன் படைக்கப்பட்ட மனிதர் அனைவரும் சமம்” என்று சொன்னாலும் அவரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
ஒருவர், தான் வாழ்ந்த குடும்பம், பழகிய நண்பர்கள், பெற்ற கல்வியறிவு மற்றும் கடைபிடிக்கும் ஆன்மீகம் என்பவை அனைத்தும் அவருடைய ஆளுமையை வடிவமைக்கும் காரணிகள் என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.
2000 ஆண்டுகளாக அநியாயமாகக் கல்வி மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுடைய ஆளுமையை, தலைமுறைகளாக கல்வி பெற்ற பரம்பரையில் வாழ்பவர்களோடு எப்படி ஒப்பீடு செய்யமுடியும்? இருவரையும் சமமாக எதிர்பார்க்கவும் கூடாது. அப்படி எதிர்பார்ப்பதால்தான் சண்டைகள் வருகின்றன. ஆனால், முக்கியமான விஷயம் என்னவென்றால் கல்வி கிடைக்காதவர்களும், படித்தவர்களும் ஒரே தந்தையின் பிள்ளைகள் என்னும் ஆன்மீக உண்மையை உணர்ந்து, மனப்பூர்வமாக சகோதரத்துவ பாசத்தோடு நேசிக்கவேண்டும். அவர்களுக்கு கல்வி கொடுத்து, அவர்கள் கடவுளுக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்று போதித்து, அநாகரீகமான பண்பாடுகளை தாயுள்ளத்தோடு சகித்து, கடிந்து போதித்து, அன்பின் உயர்ந்த நிலையாக, தன்னை கடவுளின் விருப்பத்துக்கு ஒப்படைத்து, சாதி பார்க்காமல் திருமணம் செய்து, உயர்த்தவேண்டிய பொறுப்பு கிறிஸ்தவ திருச்சபையுடையது. சாத்தானின் தலையை நசுக்கவேண்டும் என்ற திட்டத்தோடு கிறிஸ்து செயலாற்றியபோது தன் குதிகாலை சாத்தான் நசுக்கிவிடுவானே என்று அவர் பயப்படவில்லை. தன் தந்தை இல்லாமல் தனியாக நின்று பாடுபடுவதை நினைத்துத்தான் அவர் வியாகுலப்பட்டார் என்று மறைநூல் பதிவு செய்கிறது (மத். 26:37). அதேபோல, சாதிப் பிசாசை தோற்கடிக்கத் திட்டமிட்ட செயல்வீரர்கள் பிசாசு கொண்டுவரும் சிறு சேதாரங்களைக் கருத்தில் கொண்டால், சாதிப் பிசாசை எப்படி நம்மால் சாய்க்கமுடியும்? நமது உடலை கொல்பவர்களுக்குக்கூட அஞ்சவேண்டாம் (மத். 10:28) என்று ஆண்டவர் கூறுகிறார். சில நாகரீக, பண்பாட்டு வேறுபாடுகளால் வரும் சின்னச் சின்ன ஒவ்வாமைகளைப் பார்த்து நாம் பயப்பட்டால், நாம் கிறிஸ்துவின் அன்பால் கட்டப்படுகிறோம் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இதுதான் எதார்த்த உண்மையே தவிர _”ஒவ்வொரு சாதிக்கும் ஒரு பண்பாடு உண்டு”_ என்பதை *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* ஒத்துக்கொள்ளவில்லை.