044) சாதிமறுப்புத் திருமணம் செய்தவர்கள் ஆணவக் கொலை செய்யப்படுகிறார்களே!

பதில்: சாதியம் என்பது இந்துக்கள் பின்பற்றவேண்டும் என்று அவர்கள் தங்களுக்கென்று வகுத்துக்கொண்ட ஆன்மீகக் கொள்கை. அதை கண்டிப்போடு கடைபிடிக்கவேண்டும் என்று அந்த மதத் தலைவர்களால் அவர்கள் எதிர்பார்க்கப்படுகிறார்கள். அதனால்தான் இந்துக்கள் தங்கள் மதக் கொள்கையாகிய ‘சனாதன தர்மம்’ என்று அழைக்கப்படும் சாதிப் பாகுபாட்டுக்கொள்கையை கடைபிடிக்கத் தவறும்போது அது வாய்ச்சண்டையாகி, அடிதடி என்று தொடர்ந்து சிலவேளை படுகொலைகளுக்கே கொண்டு சென்றுவிடுகிறது. ஆனால், ஒரு கிறிஸ்தவ போதகனாக நான் அவிசுவாசிகளிடம் சென்று நல்லுபதேசம் செய்ய எனக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால், அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபின்பு கிறிஸ்துவின் போதனைகளை அவர்களுக்கு போதிக்கலாம். ஆனால், கிறிஸ்தவர்களே சாதி விடயத்தில் இந்துக்களைப் போலவே கொலை வெறியர்களாக இருக்கிறார்கள் என்ற வரலாற்றுச் செய்தியைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்ததை மறுக்கமுடியாது.
கேரளாவில் உயர்வகுப்பினர் என்று அழைக்கப்படும் ஒரு ‘கிறிஸ்தவப்’ பெண், ‘கிறிஸ்தவ தலித்’ இளைஞர் ஒருவரை திருமணம் செய்ய விரும்பியதால் பெண்ணின் வீட்டார் அந்த இளைஞனை படுகொலை செய்தனர். ஒரு கிறிஸ்தவர் சக கிறிஸ்தவரை சாதிவெறியால் கொலை செய்யுமளவுக்கு கிறிஸ்தவர்கள் தரம் தாழ்ந்திருப்பது எவ்வளவு வேதனையாக இருக்கிறது! சாதிவெறி விஷயத்தில் கிறிஸ்தவர்கள் இந்துக்களை விட சற்றும் சளைத்தவர்களல்ல என்பதை இங்கே கண்டுபிடிக்கிறோம். அந்த கொலைகாரர்களை அந்த இடத்துக்கு கொண்டுவந்து நிறுத்தியது யார்? சாதிவெறிக் கிறிஸ்தவர்களுக்கு இதுவரை சாதியம் தவறு என்று மறைநூலிலிருந்து யாரும் போதிக்கவில்லை என்பதுதான் நான் சொல்ல விரும்பும் மிக முக்கியமான செய்தி. அதனால்தான் கிறிஸ்தவர்களிடையே சாதி மறுப்பை நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம். பல போதகர்கள் எங்களை எதிர்த்தாலும், மிரட்டினாலும் இந்த நோக்கத்தில் கவனம் சிதறாமல் ஜெபத்தோடு இந்த ஊழியத்தில் தொடர்கிறோம். தன்னைத் தான் நேசிப்பதுபோல பிறரையும் நேசிப்பவர்கள் பிறரை சாதி அடிப்படையில் புறக்கணித்துக் கொலை செய்யமுடியுமா? சிந்தியுங்கள்.
“நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில், விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்” (மத். 5:6,9-12) என்று கிறிஸ்து தன் மலைச் சொற்பொழிவில் பேசினார்.
சாதிமறுப்பைப் பற்றி பேசினாலே கிறிஸ்தவ போதகர்களே பல்லைக் கடிக்கிறார்கள். ஆனால், அதற்காக இந்த நல்ல போராட்டத்திலிருந்து நாங்கள் விலகிவிடமுடியாது. இறையரசின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடையாக இருக்கும் சாதியத்தை ஒழிப்பதைப் பற்றிய இந்த நல்ல போதனை சில சுயநலவாதிகளுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக அதை நிறுத்தமுடியாது. இயேசு கிறிஸ்து தன் வாழ்நாள் முழுவதும் எதற்காகவும் பயப்படவில்லை. நாமும் பயப்படக்கூடாது. “கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தினை (பயம்) அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுபாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்” (2திமொ. 1:7) என்று திருத்தூதர் பவுல் அறிவுறுத்துகிறார். கடவுள் ஆபிரகாமைப் பார்த்து, “அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன். உனக்குப் பெரும் கைம்மாறு கிடைக்கும்” (தொட. 15:1) என்று தைரியப்படுத்தினார். “அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; கலங்காதே, நான் உன் கடவுள், நான் உனக்கு வலிமை அளிப்பேன்; உதவி செய்வேன்; என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன்” (எசா. 41:10) என்று இஸ்ரயேல் மக்களை கடவுள் திடப்படுத்தினார். அதே கடவுள் இன்றும் நம்மோடு இருக்கிறார். அவர் நிச்சயமாக நம்மைப் பாதுகாப்பார்.
நாம் கிறிஸ்துவின் திருவுடலாகிய திருச்சபையின் உறுப்புக்களாகிய விசுவாசிகளுக்கிடையே நீதியை நிலை நாட்ட முயற்சிக்கிறோம். அதில் ஒரு ஆன்ம திருப்தியை அனுபவிக்கிறோம். சாதி அடிப்படையில் பிரிந்துகிடப்போரிடையே அமைதியை ஏற்படுத்த முயல்கிறோம். அப்படி செய்வதன்மூலம் கடவுள் நம்மைத் தன் சிறப்பான பிள்ளைகளாக பார்க்கிறார். கிறிஸ்துவை இறைவன் எவ்வளவு நேசித்தாரோ அவ்வளவு நம்மையும் நேசிப்பதை உணர்கிறோம். கிறிஸ்தவ சமூகநீதியின் பொருட்டு நாம் துன்புறுத்தப்படும்போது விண்ணரசின்மீதான நம்பிக்கை பெருகுகிறது. சாதிமறுப்பு விழிப்புணர்வை நாம் முன்வைக்கும்போது, போதகர்களே நம்மை இகழ்ந்து, நம்மைத் துன்புறுத்தி, நம்மைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லலாம். ஆனால், விண்ணுலகில் நமக்குக் கிடைக்கும் கைமாறு மிகுதியாக இருக்கும் என்று நம்புகிறோம்.