045) சாதியம் இயேசு வாழ்ந்த காலத்திலேயே இருந்தது! சாதி கடைசிவரை இருக்கத்தான் செய்யும்! அதை ஒழிக்கமுடியாது!

பதில்: பொய், களவு, கொலை கெட்டவார்த்தை பேசுதல், சிலை வழிபாடு, விபச்சாரம் போன்ற எல்லா பாவங்களும் இயேசுவின் காலத்தில் மட்டுமல்ல, ஆதி அப்போஸ்தலர் காலத்திலும் இருந்தன. ஆகவே, அந்த குற்றங்களை செய்வது தவறு என்று போதிக்காமல் இருக்கமுடியுமா?
இந்த எதிர்மறையான அறிக்கை பெரும்பாலும் சாதி ஒழியக்கூடாது என்ற கொள்கையுடைய, சாதி உணர்வுடைய பெயர்க் கிறிஸ்தவர்களுடைய வாயிலிருந்துதான் வரும். இந்துத்துவ சாதிப் பேயிடமிருந்து கிறிஸ்தவர்கள் விடுதலை அடைந்து, கிறிஸ்தவர்களுக்குள் ஒற்றுமையை நிலைநாட்டவேண்டும் என்று விரும்பும் ஒரு ஆன்மீக கிறிஸ்தவர் இப்படி பேசமுடியாது.
கிறிஸ்தவர்களுக்கிடையே நிலவும் சாதிய பாகுபாடுகளால் இறையரசின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறதே என்று சிந்திக்கும் கரிசனையுடைய கிறிஸ்தவர்கள், “சாதியை ஒழிக்கமுடியாது” என்று தங்கள் நாவால் அறிக்கையிடமாட்டார்கள். எல்லாம்வல்ல கடவுளின் பேராற்றல்மீது நம்பிக்கையற்றவர்கள்தான், “சாதியை ஒழிப்பதெல்லாம் நடக்குற விஷயமா?” என்று சாதாரணமாக கேட்பார்கள்.
“நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது நம்பிக்கையுடன் கேட்பதை எல்லாம் பெற்றுக்கொள்வீர்கள்” (மத். 21:22) என்று கடவுள் கூறுகிறார். கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதி உணர்வுகள் ஒழியவேண்டுமென்று நாங்கள் ஒரு பேரணியாக கடவுளிடம் வேண்டுகிறோம். ஏனென்றால், எங்கள் பிரார்த்தனைகளைக் கேட்டு கடவுள் நிச்சயமாக செயலாற்றுவார்; சாதியம் ஒருநாள் ஒழியும் என்று நம்புகிறோம்.
“கடவுளால் முடியாதது ஒன்றுமில்லை” (லூக். 1:37, 18:27), “நம்புகிறவனுக்கு எல்லாம் முடியும்” (மாற். 9:23) என்று மறைநூல் கூறுவதை நீங்கள் நம்பவில்லை என்று நினைக்கிறேன். அதனால்தான் இப்படி எதிர்மறையாக பேசுகிறீர்கள்.
உங்கள் வீட்டில் திருடன் ஒருவன் புகுந்து, நீங்கள் பாடுபட்டு சம்பாதித்த பல லட்சம் பணத்தைத் திருடிச் சென்றுவிட்டால், “திருட்டை நம்மால் ஒழிக்கமுடியாது” என்று விட்டுவிடுவீர்களா? உங்கள் வீட்டிலுள்ள ஒரு பெண்ணை யாரோ ஒருவர் கற்பழித்து அப்பெண் கர்ப்பமாகிவிட்டால், “கற்பழிப்பை எல்லாம் நம்மால் ஒழிக்கமுடியுமா?” என்று அப்படியே விட்டுவிடுவீர்களா?
நம் வீட்டுப் பிள்ளை ஒருவன் தற்கொலை செய்துவிட்டால், “இளைஞர்களென்றால் தற்கொலை செய்யத்தான் செய்வார்கள்; அதை எல்லாம் பெரிதுபடுத்தமுடியுமா?” என்று விட்டுவிடுவீர்களா? அல்லது, உங்கள் பிள்ளைக்கு நேர்ந்தது இனி யாருக்கும் நடக்கக்கூடாது என்று நினைத்து, “தற்கொலை தடுப்பு ஆலோசனை மையங்கள் நிறுவப்படவேண்டும்” என்று விரும்புவீர்களா?
பிறர் பாதிக்கப்படும்போது நமக்கு வலிக்காது. ஏனெனில், நாம் பிறரை நேசிக்கவில்லை. ஆகவே, அதை பெரிதுபடுத்தமாட்டோம். பாதிக்கப்படுவது நாமென்றால் மிகவும் வலிக்கும். அதை தடுத்து நிறுத்தவேண்டும் என்று ஆதங்கப்படுவோம். இதுதானே உண்மை.
நீங்கள் கடவுளின் மாட்சிமைக்கென்று வாழும் கிறிஸ்தவரல்ல. நீங்கள் கிறிஸ்தவர் என்ற பசுந்தோலைப் போர்த்தி, இந்துத்துவத்தை பின்பற்றும் ஒரு ஆபத்தான ஜீவன். நீங்கள் ஒரு பச்சை சுயநலவாதி என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
“எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு” (பிலி. 4:13) என்று திருத்தூதர் பவுல் சொல்கிறார். எங்களை வலுவூட்டும் எல்லாம்வல்ல கடவுள் எங்களோடு இருக்கிறார் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் சுய சக்தியையோ, பக்தியையோ நாங்கள் நம்பவில்லை. கடவுளின் பேராற்றலையும், அவருடைய அளவற்ற அருளையும் நம்புகிறோம்.
“நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின், அவர் நமக்குச் செவிசாய்க்கிறார்; இதுவே நாம் அவர்மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கை” (1யோவா. 5:14) என்று மறைநூல் கூறுகிறது. கிறிஸ்துவின் சீடர்கள் சாதிப் பாகுபாடு இல்லாமல் மனத்தாழ்மையோடு, ஒற்றுமையாக வாழ்வது கடவுளின் திருவுளச் சித்தமாக இருக்கிறது என்பதை இயேசு கிறிஸ்துவின் பிரார்த்தனை மூலமாக தெரிந்து கொள்கிறோம் (யோவா. 17:21-23).
“முழு மனத்தோடு ஆண்டவரை நம்பு; உன் சொந்த அறிவாற்றலைச் சார்ந்து நில்லாதே. நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனத்தில் வைத்துச் செய்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார். உன்னை நீ ஒரு ஞானி என்ற எண்ணிக்கொள்ளாதே; ஆண்டவருக்கு அஞ்சித் தீமையை அறவே விலக்கு” (நீதி. 3:5-7) என்று கடவுள் சொல்லும் அறிவுரையை நாங்கள் நம்புகிறோம். கிறிஸ்தவ திருச்சபையை பற்றி பிடித்துக்கொண்டிருக்கும் இந்த ஆபத்தான ஒட்டுண்ணியான சாதியத்தை நிச்சயமாக ஒருநாள் கர்த்தர் அழிப்பார் என்று நாங்கள் மிகவும் உறுதியாக நம்புகிறோம். எங்களை அழைத்து, இந்த ஊழியத்தை செய்யும் அபிஷேகத்தைத் தந்து வழி நடத்தும் எல்லாம் வல்ல இறைவன் கடைசிவரை கூட இருப்பார்.