பதில்: கிறிஸ்துவின் சீடர்கள் நாம் யாரையும் கீழ்சாதி என்றோ, மேல்சாதி என்றோ அழைக்கக்கூடாது. அகிலாண்டங்களைப் படைத்த ஒற்றைக் கடவுளுக்குமுன் சாதி வேறுபாடுகளே இல்லை. ஏனெனில், அவர் மனிதனை சாதி அடிப்படையில் பிரித்துப் படைக்கவில்லை. ஆதாம் என்ற ஒற்றை மனிதனிலிருந்துதான் எல்லா மனிதரும் தோன்றியுள்ளனர் (தி.ப. 17:26). அவரிடம் பட்சபாதமே இல்லை (தி.ப. 10:34). ஆக, மனித வரலாறு தெரிந்த நாம் யாரையும் கீழ்சாதியினர், மேல்சாதியினர் என்று சொல்லக்கூடாது. அது மிகப் பெரிய பாவம். “கீழ்சாதி, மேல்சாதி என்று பிறரால் அழைக்கப்படுவோர்” என்று சொல்லலாம்.
யூதர்கள் சமாரியருடனே பழகுவதில்லை (யோவா. 4:9) என்று மறைநூல் கூறுகிறது. சமாரியர்களை யூதர்கள் ஏற்றுக்கொள்ளாமல் வெறுத்து ஒதுக்கிய காலத்தில், கிறிஸ்து இயேசு சமாரியர்களுடைய ஊருக்குச் சென்று இரண்டு நாட்கள் தங்கினார். அதனாலேயே யூதர்கள் இயேசுவை சமாரியன் (யோவா. 8:48) என்று கேலி செய்தார்கள். அதைப் பற்றி அவர் சற்றும் பொருட்படுத்தவில்லை.
நாம் எந்த சாதியும் அல்ல என்று நம்பினால் மட்டுமே நாம் பிறரைவிட கீழ்சாதியும் அல்ல, மேல்சாதியும் அல்ல என்னும் கொள்கையை நம்பமுடியும். இயேசு கிறிஸ்து சாத்தானுடைய தலையை நசுக்கவேண்டுமானால், இயேசுவின் குதிகாலை சாத்தான் நசுக்குவானல்லவா! (தொ.நூ. 3:15) அதற்கு கிறிஸ்து ஆயத்தமாக இருந்ததுபோல நாமும் நம் சிலுவையை சுமக்க ஆயத்தமாக இருக்கவேண்டுமே!
இயேசு கிஸ்துவை பேய்பிடித்தவன் (யோவா. 7:20, 8:52), பைத்தியக்காரன்(யோவா. 10:20), பாவி (யோவா. 9:24) என்றெல்லாம் மக்கள் இயேசுவைப் பழித்தார்களே! கடவுளோடு இணைந்து நின்ற இறைமகன் மனித வடிவில் இம் மண்ணுக்கு வந்தால் அவர் இப்படிப்பட்ட வசைச் சொற்களால் காயப்படுத்தப்படுவார் என்று தெரிந்தே இவ்வுலகுக்கு வந்தார். நமக்காக உயிரையே கொடுத்த அவருக்காக கிறிஸ்துவின் மனநிலையுடைய நாம் ஏன் அந்த ஏளனங்களை சகிக்கக்கூடாது?