சில கிறிஸ்தவர்கள், “எங்களை ‘பள்ளர்கள்’ என்று அழைக்கக் கூடாது; நாங்கள் ‘தேவேந்திரகுல வேளாளர்” என்று பெருமையாக சொன்னார்கள். எனக்கு சிரிப்புதான் வந்தது. ‘பள்ளர்’ என்ற பெயரை எடுத்துவிட்டு ‘தேவேந்திரகுல வேளாளர்’ என்று பெயர் மாற்றியதால் நமது செல்வாக்கு உயர்ந்துவிட்டதா? அப்படிப் பெயர் மாற்றியதால், ‘கிறிஸ்தவ நாடார்கள்’ என்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள் நம்மோடு திருமணம் செய்ய ஒத்துக்கொள்வார்களா?
‘பறையர்’ என்ற பெயரை எடுத்துவிட்டு ‘ஆதி திராவிடர்’ என்ற புதுப்பெயர் சூட்டியதால் நமக்கு மரியாதை அதிகமாகிவிட்டதா? அப்படி பெயர் மாற்றியதால், ‘கிறிஸ்தவ வன்னியர்கள்’ என்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள் நம்மோடு திருமணம் செய்ய ஒத்துக் கொள்வார்களா? ‘சக்கிலியர்’ என்ற பெயரை எடுத்துவிட்டு ‘அருந்ததியர்’ என்ற புதுப்பெயர் சூட்டியதால் நமக்கு மரியாதை உயர்ந்துவிட்டதா? இந்த புதிய பெயர் வந்ததால் ‘கிறிஸ்தவ ஆதி திராவிடர்கள்;’ என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் நம்மோடு திருமணம் செய்ய ஒத்துக்கொள்வார்களா? ‘அம்பட்டர், நாவிதர்’ என்ற பெயர்களுக்கு பதில் ‘மருத்துவர்’ என்று பெயர் வைத்ததால் வாழ்க்கையில் என்ன வித்தியாசம் வந்துவிட்டது? தலித்துகளை காந்தியடிகள் ‘ஹரிஜனங்கள்’ என்று அழைத்ததால் தலித்துகளின் சமூக அந்தஸ்து உயர்ந்துவிட்டதா? சிந்தியுங்கள். ஆக, இப்போது தேவையானது சாதியின் பெயர் மாற்றமல்ல. சாதியே அடியோடு ஒழியவேண்டும்.
கிறிஸ்தவர்களில் சிலர், “நான் கிறிஸ்தவ தலித் விடுதலை இயக்கத்தில் இருக்கிறேன்” என்று சொல்கிறார்கள். இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. கிறிஸ்தவனானபின் எப்படி உங்களை நீங்கள் ‘தலித்’ என்று கூறுகிறீர்கள்? கிறிஸ்தவ மறைநூலுக்கும் ‘பள்ளர்’, ‘சக்கிலியர்’, ‘பறையர்’ என்னும் சாதிப் பெயர்களுக்கும் சம்பந்தமே இல்லையே என்று கிறிஸ்தவ வீதிகளில் இறங்கி முழங்கவேண்டிய நாம், ‘கிறிஸ்தவ தலித்துகள்’ என்று நம்மை நாமே அடையாளப்படுத்துவது, கடவுளின் முகத்தில் கரிபூசுவது போலல்லவா இருக்கிறது!
யாரோ ஒருவர் வரலாற்று அறிவில்லாமல் தன்னைத்தானே ‘மேல்சாதி’ என்று பிதற்றுகிறார் என்பதற்காக நாம் ஏன் நம்மை நாமே ‘கீழ்சாதி’ என ஒத்துக்கொள்ளவேண்டும்?
மனிதன் தோன்றிய வரலாற்றை தெரியாதவர்கள் தங்களை ‘பிராமணர்’ ‘முதலியார்’ என அழைத்துக்கொள்கிறார்கள் என்பதற்காக நாம்; ஏன் நம்மை ‘பள்ளர்’, ‘பறையர்’ என்று அழைக்கவேண்டும்?
‘தலித்’ என்ற வெறியுடைய சில ‘கிறிஸ்தவர்கள்’ என்னை ‘தலித் எதிரி’ என்கிறார்கள். அதனால் எனக்கு சிறிதும் கவலை இல்லை. ஏனென்றால், என்னைப்பற்றி தெரியாதவர்கள்கூட இவர்களுடைய அவதூறுப் பதிவுகள்மூலம் என்னுடைய பெயரைத் தெரிந்துகொண்டு நமது காணொளிகளைப் பார்த்து உண்மையைத் தெரிந்துகொள்ள இவர்கள் வழிவகுக்கிறார்கள். கடவுள் அனைத்தையும் நன்மையாக முடியப்பண்ணுகிறார்.
ஆவியாரின் தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டு, கடவுளிடத்தில் அன்புகூர்பவர்களுக்குச் சகலமும் நன்மைக்காகவே நடக்கிறது (உரோமையர் 8:28). கடவுளுக்கே நன்றி.
அன்புக்குரியவர்களே! நாம் உயிரோடிருக்கும் நாட்களிலேயே இந்த சாதிப்பிசாசுக்கு சமாதி கட்டாவிட்டால், நாம் கிறிஸ்துவைப் பற்றியக் கல்வி கற்றதனால் எந்த பயனும் இல்லை.
திருச்சபை என்னும் அழகிய நந்தவனம் சாதிச் சாக்கடையால் பொலிவிழந்து விட்டது. நாம்தான் இறைஅன்போடு அதை சீர்செய்யவேண்டும். அதற்கு சில தியாகங்களை சகித்தாகவேண்டும். அறிவு பற்றாக்குறையால் இந்நாள்வரை உண்மை தெரியாமல் இந்த சாதிச் சிறைச்சாலையில் வாழ்ந்துவிட்டோம். நம் பிள்ளைகளையாவது இந்த சாதிப் பேயின் கோரப்பிடியிலிருந்து கவனமாக காப்பாற்றி சுதந்திர பறவைகளாக வாழவிடுவோம். உலகில் பிறந்த நாம் அனைவரும் ஒருதாய் பிள்ளைகள்போல ஒற்றுமையாக வாழப் பிறந்தவர்கள். இதற்கு தடையாக நிற்கும் வர்ணாசிரம அதர்மத்தின் சுவடுகளையே நாம் புறக்கணிக்கவேண்டும்.