பதில்: _இறுதி நாள்களில் கொடிய காலங்கள் வரவிருக்கின்றன என அறிந்து கொள். தன்னலம் நாடுவோர், பண ஆசையுடையோர், வீம்புடையோர், செருக்குடையோர், பழித்துரைப்போர், பெற்றோருக்குக் கீழ்ப்படியாதோர், நன்றியற்றோர், தூய்மையற்றோர், அன்புணர்வு அற்றோர், ஒத்துப் போகாதோர், புறங்கூறுவோர், தன்னடக்கமற்றோர், வன்முறையாளர், நன்மையை விரும்பாதோர், துரோகம் செய்வோர், கண்மூடித்தனமாகச் செயல்படுவோர், தற்பெருமை கொள்வோர், கடவுளை விரும்புவதை விட சிற்றின்பத்தை அதிகம் விரும்புவோர் ஆகியோர் தோன்றுவர். இவர்கள் இறைப்பற்று உடையவர்கள் போன்று காணப்படுவார்கள். ஆனால், இறைப்பற்றின் வல்லமையோ அவர்களிடம் இராது. இத்தகையவர்களோடு சேராதே! (2திமொ. 3:1-5)_ என்று திருத்தூதர் பவுல் எச்சரிக்கிறார். அன்று அவர் சொன்ன விடயங்கள் இன்று சாதாரணமாக நிறைவேறுவதை பார்க்கிறோம்.
இந்தியாவுக்கு கிறிஸ்தவம் முதலாவது வந்த நாட்களில், அதை பரப்ப வந்த வெளிநாட்டு அருட்பணியாளர்கள் இங்கிருந்த ஒடுக்கப்பட்டவர்களை சொந்த இரத்தமாக ஏற்றுக் கொண்டார்கள். எடுத்துக்காட்டு: அன்றைய திருவாங்கூர் சமஸ்தானம். அதாவது இன்றைய திருவனந்தபுரம் (கேரளம்) மற்றும் குமரி மாவட்டம் (தமிழ்நாடு). அவர்கள் அன்பை மையமாக வைத்து ஊழியம் செய்தார்கள். ஆகவே, மக்கள் கூட்டம் கூட்டமாக இயேசுவை ஏற்றுக் கொண்டார்கள். இது இந்திய திருச்சபையின் வரலாற்று உண்மை. ஆனால், இன்று பெரும்பான்மையான ஊழியக்காரர்களுக்கு ஊழியம் என்பது பணம் சம்பாதிக்கும் ஒரு தொழிலாக மாறிவிட்டதால் சக மனிதனிடம் அன்பு காட்ட முடியவில்லை. ஆவிக்குரிய சபை என்று அழைக்கப்படும் ஒரு சபைக்கு அருகில் யாராவது ஒரு மசூதி கட்டினலோ அல்லது ஒரு இந்துக் கோயில் கட்டினாலோ அல்லது ஒரு புத்த விகார் கட்டினாலோ, அல்லது நாத்திகர்கள் தங்கள் அலுவலகத்தைத் திறந்தலோ அந்த சபை போதகர் பெரிதாக வருத்தப்படமாட்டார். ஆனால், ஆவிக்குரிய சபை என்று அழைக்கப்படும் வேறொரு சபையை தொடங்கிவிட்டால் இந்த பாஸ்டர் மனமுடைந்துவிடுகிறார். காரணம் என்ன? இவருடைய வருமானம் குறைந்துவிடும் என்ற பயம் மட்டுமே!
ஆவிக்குரிய போதகர்கள் என்று அழைக்கப்படுபவர்களில் பெரும்பான்மையானோர் சாதி உணர்வாளர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் நீங்கள் சாதி பார்ப்பது தவறல்ல என்று சொல்கிறீர்கள். இனி ஒருநாள் வரும்; பாஸ்டர்கள் பல மனைவிகளை வைத்திருப்பது சகஜமாக இருக்கும். பொய் சொல்வது, களவு செய்வது, விபச்சாரம் செய்வது லஞ்சம் வாங்குவது என்ற பாவங்கள் அனைத்தும் பாவங்களின் பட்டியலிலிருந்து அகற்றப்படும். அப்போது ஒரே மனைவியை உடையவராக இருக்கவேண்டும் என்ற கொள்கை வேடிக்கையான கொள்கையாக கருதப்படும். திருமணம் செய்துதான் தாம்பத்திய வாழ்க்கை வாழவேண்டும் என்ற ஒழுக்கம் கிறிஸ்தவர்களிடையே கேலிக்கூத்தாகிவிடும். கிறிஸ்தவர்கள் பாவம் செய்வது பாஸ்டர்களால் சாதாரணமாக சகிக்கப்படும். ஏனெனில் அவர்களுக்கு பணமே அப்போது கடவுளாக இருக்கும். அப்போது, “பரிசுத்தராக இருங்கள்” என்னும் சட்டம் ஆவிக்குரிய உபதேசங்களின் பட்டியலிலிருந்து அகற்றப்படும்.
சக மனிதனை கீழ்சாதி என்று இழிவுபடுத்துவது பாவம் என்று மனசாட்சியுடைய யாருக்கும் தெரியும். ஆனால், இரட்சிக்கப்பட்ட விசுவாசிகளுக்கு அந்த உண்மை தெரியாதது ஆச்சரியமாக இருக்கிறது. சகோதரனை பகைப்பது அவரை கொலை செய்வதற்கு சமம் இல்லையா? சாத்தானால் உருவாக்கப்பட்ட சாதிய ஏற்றத்தாழ்வு கொள்கையை கிறிஸ்தவர்கள் கடைபிடிப்பது ஆவிக்குரிய பிரச்சனை இல்லையா?