051) சாதி மறுப்பைப் பற்றி பேசாதீர்கள். இயேசுவின் நற்செய்தியை அறிவியுங்கள். ஒருவர் மீட்கப்பட்டால் சாதி பார்க்கமாட்டார்.

பதில்: “இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பே நான் சாதி மறுப்பாளனாகத்தான் இருந்தேன்” என்று சொல்வோர் பலரை நான் பார்த்திருக்கிறேன். அந்த வகையில் சாதி மறுப்பு திருமணம் செய்தோரையும் பலரை சந்தித்திருக்கிறேன். ஆனால், *”நான் சாதிவெறி உடையவனாக இருந்தேன். இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொண்டதால் சாதி வெறி என்ற பாவத்திலிருந்து விடுதலை அடைந்தேன்”* என்று சாட்சியம் சொல்வோர் யாரையாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஆயிரம் பேரில் ஒருவர் இருக்கலாம்.
குமரி, நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களிலுள்ள, 99% கிறிஸ்தவர்களும் சாதி பார்த்துத்தான் திருமணம் செய்கிறார்கள். *அபிஷேகிக்கப்பட்டவர்கள்* என்று அழைக்கப்படும் *பெந்தெகோஸ்தே பாஸ்டர்களே* சாதி பார்க்காமல் திருமணம் செய்வதில்லை. அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை இதுவரை *கேள்விப்பட்டதே இல்லை* என்று சொல்கிறீர்களா? அவர்கள் இயேசுவால் மீட்கப்படாமலேயே பாஸ்டராகிவிட்டார்களா? மிகுந்த மனவலியோடு இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறேன். சாதி பாகுபாடு என்பது மிகக் கொடிய பாவம் என்று சபைக்கு சொல்லிக் கொடுக்கவேண்டிய போதகர்கள் உட்பட பல கிறிஸ்தவர்கள் சாதி சங்கங்களில் உறுப்பினராக, நிர்வாகிகளாக இருக்கிறார்களே! பலருக்கு சாதியம் தவறு என்று தெரியவில்லையே! தெரிந்த பல பாஸ்டர்களும் போதிப்பதில்லையே!
கண்ணுக்குத் தெரிந்த மக்கள் எல்லோரையும் பார்த்து, *_”பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத். 11:28)_* என்று ஊழியர்கள் அழைக்கிறார்கள். *சாதி இழிவு என்னும் பெருஞ்சுமையை* தலைமுறைகளாகச் சுமந்து சோர்ந்துபோனவர்களுக்கு கிறிஸ்து இளைப்பாறுதல் கொடுப்பாரா? என்று யாராவது கேட்டால் இந்த சாதி உணர்வு பாஸ்டர்கள் என்ன பதில் சொல்வார்கள்? அன்று திருச்சட்டம் என்ற பெருஞ்சுமையைப் போன்ற (தி.ப. 15:10) ஒரு சுமைதானே சாதியம் என்ற சமூகசட்டச் சுமை! சாதி உணர்வுடைய பாஸ்டர்களுக்கு விழிப்புணர்வூட்டாமல் இப்படியே விட்டுவிடுவது நமது பொறுப்பின்மையை அல்லவா காட்டுகிறது!
எப்படியாகிலும் பிற மக்களை தங்கள் மதத்துக்கு இழுத்துவிடவேண்டும் என்ற மதமாற்ற வெறியோடு வாழ்ந்த யூதர்களைப் பார்த்து ஆண்டவர் கூறுவதை பாருங்கள்.
_வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஒருவரையாவது உங்கள் சமயத்தில் சேர்ப்பதற்கு, நாடு என்றும் கடல் என்றும் பாராது சுற்றி அலைகின்றீர்கள்; அவ்வாறு சேர்த்தபின் *அவரை உங்களைவிட இருமடங்கு நரகத் தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள்* (மத். 23:15)_ என்று கிறிஸ்து அன்றைய மத தலைவர்களைப் பார்த்து சாடினார்.
அன்று வாழ்ந்த யூத மதத் தலைவர்களுக்கென்று இந்த வசனம் சொல்லப்பட்டாலும், இன்றைய கிறிஸ்தவ நற்செய்தியாளர்களுக்கும் இது சரியாகப் பொருந்துகிறதே!
ஒரு பக்கம், _”நீ எப்படி வேண்டுமானாலும் வாழலாம்; எனக்கு காணிக்கை என்ற பெயரில் நீ தரவேண்டிய பணத்தை மாதம்தோறும் தந்துவிடு! அப்போது நீ நலமோடு, செழிப்பாக, நிம்மதியாக வாழ்வாய்!”_ என்று மெத்தனமாக போதிக்கும் கார்ப்பரேட் போதகர்கள். மறுபக்கம் *’இரட்சிப்புக்குள் நடத்துவது’* என்ற போர்வையில் எப்படியாகிலும் எல்லோரையும் மதமாற்றம் செய்துவிடவேண்டும் என்று துடிக்கும் மதமாற்ற வெறியர்கள். இந்த இரண்டு கும்பலாலுமல்லவா கடவுளின் பெயர் பிறரிடையே புறக்கணிக்கப்பட்டு இழிவுபடுத்தப்படுகிறது! இந்த இரண்டு கும்பலுக்குமே, கிறிஸ்தவர்கள் தங்கள் தார்மீக அடையாளமாகிய அன்பு என்ற பண்பு இல்லாமல் கெட்டு கிடக்கிறார்களே!
மதமாற்றம் செய்யப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தாமல், பெயர் கிறிஸ்தவர்களாக விட்டுவிடுவதால் அல்லவா கிறிஸ்துவின் பெயர் பிறரால் இகழ்ச்சியடைகிறது! சாதி விஷயத்தில் பிறருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
உலகின் பலகோடி மக்களின் அநியாய சாவுக்கு காரணமாக இருக்கும் சாதியத்தை, தவறு என்று *தெரியாமல்* கடைபிடிப்பவர்களைவிட, சாதியம் தவறு என்று தெளிவாகத் *தெரிந்தும்* அந்த தீமையை தடுக்க முயற்சி செய்யாமல் ஒதுங்கும் பொறுப்பற்றவர்கள் அல்லவா *பெருந்தீமை செய்கிறார்கள்!*