052) நான் சாதிமறுப்பு கொள்கையுடையவனாக இருக்கிறேன் என்பதற்காக பிறருக்கு சாதி மறுப்பை பிரச்சாரம் செய்து நான் ஏன் பிறருக்கு தொந்தரவு கொடுக்கவேண்டும்? சாதி மறுப்பைப் பற்றிச் சொல்லி ஏன் குழப்பத்தை உண்டுபண்ணவேண்டும்?

பதில்: நீங்கள் சொல்வது சரிதான். நாம் சாதி மறுப்பைப் பற்றி பேசும்போது, சாதி உணர்வுடைய தீர்க்கதரிசிகளும், எழுப்புதல் ஆராதனை வீரர்களும், பாதிரியார்களும், பாஸ்டர்களும், விசுவாசிகளும் நம்மை எதிர்ப்பார்கள். சிலர் கெட்ட வார்த்தை பேசுவார்கள். சிலர் கொலை மிரட்டல் விடுப்பார்கள். சிலர் நமக்கு எதிராக அவதூறு பரப்புவார்கள். எதற்காக சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொள்ளவேண்டும்? என்று நீங்கள் சிந்திப்பதில் நியாயம் இருக்கிறது.
நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். “நான்தான் இரட்சிக்கப்பட்டுவிட்டேனே! எதற்காக இரட்சிப்பைப் பற்றி பிறருக்கு பிரச்சாரம் செய்து,
அவர்களை கிறிஸ்தவத்திற்கு மாற்றி குழப்பத்தையும், பிரிவினைகளையும், சண்டைகளையும் உண்டாக்கி தொல்லை கொடுக்கவேண்டும்? நான் மட்டும் இரட்சிக்கப்பட்டால் போதாதா? கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டதால் பலர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்களே! பல விசுவாசிகளும் மிஷனரிகளும் கொலைகூட செய்யப்பட்டுள்ளார்களே! பல கன்னியாஸ்திரிகள் கற்பழிக்கப்பட்டுள்ளார்களே! நீண்ட ஆயுளோடு, ஆரோக்கியமாக வாழவேண்டிய நான் ஏன் இயேசுவுக்கு ஊழியம்செய்து அகால மரணமடையவேண்டும்? எல்லாரும் அவரவர் மதத்தை பின்பற்றட்டுமே! கடவுளுக்கு இல்லாத அக்கரை நமக்கு எதற்கு?” என்று நான் உங்களிடம் கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?
“நாம் பெற்ற இன்பத்தை, வெளிச்சத்தை, பாவமன்னிப்பின் நிம்மதியை, விடுதலையை, உயர்வை பிறரும் பெறவேண்டும் என்று நினைப்பதுதானே பிறர்நலம்! ஆத்தும ஆதாயம் செய்வதைவிட முக்கியத்துவம் வாய்ந்த பணி இந்த உலகில் வேறு எதுவும் இருக்கமுடியாது. நரகத்தை நோக்கி பயணம் செய்துகொண்டிருப்போரை நிலைவாழ்வுக்கு திருப்புவதைவிட முக்கிய பணி வேறு என்ன இருக்கமுடியும்? அந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மீக பணிக்கு மிகப்பெரும் தடையாக இருக்கும் சாத்தானிய சாதிப் பெருஞ்சுவரை தகர்ப்பது மிகவும் முக்கியமல்லவா! அப்படியானால், சாதியத்துக்கு எதிராக பிறரிடம் போதனை செய்யத்தானே வேண்டும்!
“உலகெங்கும் சென்று படைப்புக்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள்” (மாற். 16:15) என்று கிறிஸ்து சொன்னார். அப்படிச் சொன்னவர், “நான் உலகிற்கு அமைதி கொண்டுவர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொண்டுவர வந்தேன். தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன்” (மத். 10:35) என்றும் கூறினாரே! அதாவது, கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பகைப்பார்கள் என்று சொல்ல வருகிறார்.
நாம் நினைக்கும் உலகியல் நிம்மதியை தருவதற்காக கிறிஸ்து இவ்வளவு பாடுபடவேண்டிய தேவை இல்லையே! அவர் தெய்வீக மனஅமைதியை நமக்கு வாக்களித்துச் சென்றிருக்கிறாரே! “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி, உலகம் தரும் அமைதி போன்றதல்ல. நீங்கள் உள்ளம் கலங்கவேண்டாம்; மருள வேண்டாம்” (யோவா. 14:27) என்று சொன்னார்.
“இந்துக்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டால்தான் பரலோகத்துக்கு வரமுடியும்; இல்லாவிட்டால் நரகத்துக்கு போய்விடுவார்கள்” என்று நீங்கள் கூறுவீர்கள். பொதுமக்கள் சார்பாக நான் ஒரு கேள்வி கேட்கிறேன். “சக கிறிஸ்தவனை கீழ்சாதி, புறசாதி என்று இழிவுபடுத்தி புறக்கணிக்கின்ற, கிறிஸ்தவ போர்வையில் வாழும் கொடியவர்களையே பரலோகம் ஏற்றுக்கொள்ளுமானால், இந்துக்களை ஏற்றுக்கொள்ளாதா?” தன் சகோதரனை மூடன் என்று அழைப்பவர் நரகத்துக்குச் செல்லத் தகுதியானவரென்றால் (மத். 5:22) தன் சகோதரனை கீழ்சாதி, புறசாதி என்று புறக்கணித்து அவமானப்படுத்துபவர் எங்கே போகத் தகுதியானவர் என்று நீங்களே சொல்லுங்கள். அப்படி அவர் நரகத்துக்கு போவதிலிருந்து நாம் அவரை காப்பாற்றுவது முக்கியமல்லவா!
பாவம் செய்கிறவர்களை அனைவர் முன்னிலையிலும் கடிந்துகொள். அப்பொழுது மற்றவர்களும் அச்சம் கொள்வர் (1திமொ.5:20), சகோதர சகோதரிகளே, ஒருவர் ஏதேனும் குற்றத்தில் அகப்பட்டுக் கொண்டால் தூய ஆவியைப் பெற்றிருக்கும் நீங்கள் கனிந்த உள்ளத்தோடு அவரைத் திருத்துங்கள்; அவரைப் போல் நீங்கள் சோதனைக்கு உள்ளாகாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் (கலா. 6:1) என்று திருத்தூதர் பவுல் அறிவுறுத்துகிறார்.
தீயோரிடம், “நீங்கள் சாவது உறுதி” என்று நான் சொல்ல, நீ அவர்களை எச்சரிக்காவிடில், அத்தீயோர் தம் தீயவழியினின்று விலகாவிட்டால், தம் உயிரை அவர்களால் காத்துக்கொள்ள இயலாது என்று அவர்களை எச்சரிக்காவிட்டால், அவர்கள் தம் குற்றப்பழியோடு சாவர். ஆனால் அவர்களது இரத்தப் பழியை உன் மேலேயே சுமத்துவேன். மாறாக, நீ தீயோரை எச்சரித்திருந்தும், அவர்கள் தம் தீச்செயலினின்றும் தம் தீய வழியினின்றும் விலகாமல் இருந்தால், அவர்கள் தம் குற்றப் பழியோடு சாவர். நீயோ உன் உயிரைக் காத்துக் கொள்வாய். நேர்மையாளர் தம் நேர்மையினின்று விலகி, அநீதி செய்கையில் நான் அவர்கள்முன் இடறலை வைக்க, அவர்கள் சாவர். நீ அவர்களை எச்சரிக்காதிருந்தால் அவர்கள் தம் பாவத்திலேயே சாவர்; அவர்களுடைய நற்செயல்கள் நினைக்கப்படமாட்டா. ஆனால் அவர்களது இரத்தப்பழியை உன் மேலேயே சுமத்துவேன். மாறாக, நேர்மையாளர் பாவம் செய்யாதபடி நீ அவர்களை எச்சரித்ததால் அவர்கள் பாவம் செய்யாவிடில், அவர்கள் வாழ்வது உறுதி. நீயும் உன் உயிரைக் காத்துக்கொள்வாய் (எசே. 3:18-21) என்று ஆண்டவர் சொல்கிறார்.
2000 ஆண்டுகளாக கிறிஸ்தவர்களின் சாதிய பாகுபாடுகளால்தான் நற்செய்தி புறக்கணிக்கப்பட்டு கிடக்கிறது என்று உங்களுக்கு தெரிந்தும் நீங்கள் இப்படி சொல்வது வேதனையாக இருக்கிறது.
“கிறிஸ்தவர்கள் அன்பைப் பற்றி வாய்கிழிய பேசுவார்கள்; ஆனால், நடைமுறை வாழ்க்கையில் அவர்கள் ஒற்றுமையற்ற பிரிவினைவாத கும்பல்; அவர்களுக்குள் இருக்கும் சாதியமும், சபைப் பிரிவுகளும் அதைக் காட்டிக்கொடுக்கின்றன” என்று பலரும் சொல்லி நான் கேட்டிருக்கிறேன் என்பதை மனவேதனையோடு பதிவு செய்கிறேன். சின்ன தியாகங்களையே நம்மால் செய்யமுடியாவிட்டால், கடவுளுக்காக உயிரைக் கொடுக்கும் தியாகத்தை எப்படி சகிப்போம்?
அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர் (மத்தேயு 5:9) என்றல்லவா வேதம் கூறுகிறது. சாதி அடிப்படையில் பிரிந்து கிடப்போருக்கிடையே அமைதியை ஏற்படுத்தி, சகோதரத்துவத்தை வளரச் செய்வது எப்படி தொந்தரவாக இருக்கமுடியும்? பள்ளிக்கூடத்தில் இரண்டு மாணவர்கள் சண்டை போட்டுக்கொண்டிருப்பதை பார்த்த வகுப்பாசிரியர் அவர்களுக்குள் சமாதானம் உண்டுபண்ணியதை தொந்தரவு என்று கூறமுடியுமா? கருத்து வேறுபாடு காரணமாக ஒரு தம்பதியர் தங்களுக்குள் பேசாமல் இருப்பதை பார்த்த உறவினர் ஒருவர் அவர்களுக்குள் சமாதானம் உண்டுபண்ண நினைத்து ஆலோசனை கொடுத்தது தவறு என்று கூறுகிறீர்களா?
நான் நேசிக்கும் என் குழந்தையின் உடலில் வந்த பருவில் இருக்கும் சீழைப் பிதுக்கினால் அந்த பரு ஆறிவிடும். ஆனால், அப்படி பிதுக்கினால் குழந்தைக்கு வலிக்கும் என்று நினைத்து நான் அந்த சீழை பிதுக்காமல் விட்டுவிடமுடியுமா?
“உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை உங்கள் உடலில் நலமே இல்லை; ஆனால் காயங்கள், கன்றிப்போன வடுக்கள், சீழ்வடியும் புண்களே நிறைந்துள்ளன; அங்கே *சீழ் பிதுக்கப்படவில்லை,* கட்டு போடப்படவில்லை, எண்ணெய் பூசிப் புண் ஆற்றப்படவுமில்லை” (எசாயா 1:6) என்று இறைவாக்கினர் கூறுகிறார்.
அதேபோல, கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதியம் ஒரு பெரிய பாவம் என்று நான் கிறிஸ்தவர்களுக்கு போதித்தால் கிறிஸ்தவர்களுக்கு வலிக்கும் என்று தெரிந்தும் அவர்களுடைய சாதிச் சீழை இயக்கமாகப் பிதுக்கத் தொடங்கியிருக்கிறோம்.
இப்படிப் பேசும்போது நான் நாடுவது மனிதருடைய நல்லெண்ணமா? கடவுளுடைய நல்லெண்ணமா? நான் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கவா பார்க்கிறேன்? நான் இன்னும் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கப் பார்த்தால் கிறிஸ்துவுக்குப் பணியாளனாய் இருக்க முடியாது (கலா. 1:10) என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார். “மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்? (தி.ப. 5:29), உங்களுக்குச் செவிசாய்ப்பதா? கடவுளுக்குச் செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் (தி.ப. 4:19) என்று திருத்தூதர் பேதுரு கேள்வி எழுப்புகிறார்.