054) சாதியத்துக்கு எதிராக நீங்கள் பேசுவதால்தான் சாதி உணர்வு அதிகரிக்கிறது. சாதி மறுப்பைப் பற்றி பேசுபவர்கள்தான் சாதி உணர்வைப் பரப்புகிறார்கள்.

பதில்: நீங்கள் இந்த கேள்வி கேட்கும்போது, ஒருமுறை ஒரு கிராமத்துக்கு நாங்கள் நற்செய்தி அறிவிக்கப் போன சம்பவம் நினைவுக்கு வருகிறது. அன்று, “இயேசு பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும் விடுதலை தருகிறார்” என்பதுபோன்ற வரிகள் அடங்கிய பாடல் ஒன்றை அங்கே பாடினோம். அங்குள்ள ஒருவர் எங்களை தடுத்து நிறுத்தி, “இங்கு பாவிகள் யாரும் இல்லை; நீங்கள் கிராமத்தைவிட்டு வெளியேறுங்கள்” என்று சொன்னார். “இங்கு பாவிகள் இல்லை” என்று அவர் சொன்னதால் அங்கே பாவிகள் இல்லை என்றோ அல்லது நாங்கள் பாவமன்னிப்பை பற்றிய ஒரு பாடலைப் பாடியதால்தான் அவர்கள் பாவிகளாக மாறிவிட்டார்கள் என்றோ சொல்லமுடியுமா? அவர்கள் பாவத்தில் ஏற்கெனவே ஊறிப்போய், பாவத்திலிருந்து வெளியேற மனதில்லாதிருக்கிறார்கள். அதனால்தான் பாவ மன்னிப்பை ஏற்றுக்கொள்ளாமல் எங்களைத் துரத்திவிட்டார்கள். இவர்களைப் போன்றவர்களைப் பற்றி ஆண்டவர், “தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை” (யோவா. 3:20) என்று தெளிவாக சொல்கிறார்.
பாவத்தை கண்டித்தும், பாவ மன்னிப்பைப் பற்றியும் இந்துக்கள், இஸ்லாமியர்கள், பெளத்தர்கள் அதிகமாக பேசுவதில்லை. கிறிஸ்தவர்கள்தான் பாவத்துக்கு எதிராக மிக அதிகமாக போதிக்கிறார்கள். கிறிஸ்தவ மறைநூலாகிய பைபிளில்தான் பாவம் என்ற வார்த்தை அதிகமாக எழுதப்பட்டுள்ளது. எனவே கிறிஸ்தவர்கள்தான் அதிகமாக பாவத்தை பரப்புகிறார்கள் என்றோ, கிறிஸ்தவர்கள்தான் அதிகமாக பாவத்தை செய்கிறார்கள் என்றோ சொல்லமுடியுமா?
“விபச்சாரம் செய்யாதிருப்பாயாக என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளதால்தான் விபச்சாரம் செய்யவேண்டும் என்ற ஆசையே வருகிறது” என்று யாராவது கூறமுடியுமா? “பொய் சொல்லாதிருப்பாயாக என்று வேதம் கூறாதிருந்தால் நான் பொய் சொல்லாமலேயே இருந்திருப்பேன்” என்று யாராவது அறிவிக்கமுடியுமா? “களவு செய்யாதிருப்பாயாக என்ற கட்டளையை கேள்விப்பட்டபின்தான் எப்படி களவு செய்வதென்றே கற்றுக்கொண்டேன்” என்று யாராவது சொல்லமுடியுமா? அப்படி யாராவது சொன்னால் அவர் பாவம் செய்வதற்கு கடவுள்தான் காரணம் என்றாகிவிடுமல்லவா!
“மருத்துவர்கள் நோய்களை பற்றி அதிகமாக பேசுவதனால் மருத்துவர்கள்தான் கொடிய நோய்களை பரப்புகிறார்கள்” என்று கூறமுடியுமா? அல்லது மருத்துவத்தைப் பற்றிய அறிவியல் தேவையற்றது என்று கூறமுடியுமா? ஒருவருக்கு இரத்தத்தில் புற்றுநோய் இருக்கிறது என்று ஒரு இரத்தப் பரிசோதகர் கண்டுபிடித்து, “ஐயா உங்களுக்கு இரத்தத்தில் புற்றுநோய் இருக்கிறது; உடனே மருத்துவம் செய்யவேண்டும்” என்று சொன்னால், “எனக்கு புற்றுநோய் இருக்கிறது என்று என்னிடம் சொல்லாதீர்கள்; அதை நீங்கள் சொன்னால், எனக்கு புற்றுநோய் அதிகமாகிவிடும்” என்று சொல்லமுடியுமா?
கொரோனா எவ்வளவு ஆபத்தானது என்றும், அது நம்மை தாக்காமல் இருக்கவேண்டுமானால், என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் பலர் தொலைக்காட்சியில் எப்போதும் பேசிக்கொண்டிருப்பதால், அவர்களால்தான் கொரோனா பரவுகிறது என்று கூறமுடியுமா? அந்த செய்திகளை ஒளிபரப்பும் அந்த தொலைக்காட்சிப் பெட்டியை உடைத்துவிடலாமா? லஞ்சத்தை தடுப்பதைப் பற்றி அரசாங்கத்தில் ஒரு துறையே பேசிக்கொண்டிருப்பதால், அந்த துறையினர்தான் லஞ்சத்தை வளர்க்கிறார்கள் என்று கூறமுடியுமா? அதேபோல, சாதியம் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடை என்னும் இரகசியத்தை தெரியாத மக்களுக்கு அந்த உண்மையை எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவதை தவறு என்று எப்படி கூறமுடியும்?
“நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள்” என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறினார் (மத். 28:20). “இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு. கண்டித்துப் பேசு; கடிந்துகொள்; அறிவுரை கூறு; மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு (2திமொ. 4:2), நான் வரும்வரை விசுவாசிகளுக்கு மறைநூலைப் படித்துக் காட்டுவதிலும் அறிவுரை வழங்குவதிலும் கற்பிப்பதிலும் கவனம் செலுத்து” (1திமொ.4:13) என்று திருத்தூதர் பவுல் ஊழியர்களுக்கு அறிவுரை சொல்கிறார். இதெல்லாம் தவறு என்று கூறுகிறீர்களா?
அன்று வாழ்ந்த திருத்தூதர்கள் திருவசனத்தை சபைக்கு போதனை செய்தபோது, “நாங்கள் எப்படி வாழவேண்டும் என்று நீங்கள் எங்களுக்கு போதிக்காதீர்கள்; நீங்கள் பாவத்தைக் கடிந்து போதிப்பதால்தான் எங்களுக்கு பாவம் செய்யவேண்டும் என்ற விருப்பம் வருகிறது” என்று தொடக்ககால சபைகளில் விசுவாசிகள் யாரும் சொல்லவில்லையே! உங்களுக்குள் இருக்கும் சாதி உணர்விலிருந்து நீங்கள் விடுதலை அடைய விருப்பம் இல்லை. சாதி என்ற சாக்கடையில் வாழ்வதையே சுகமாக நினைக்கிறீர்கள். துர்நாற்றத்தை சுகந்த வாசனை என்று நினைக்கும் மனநிலையில் வாழ்கிறீர்கள். அதனால்தான் நீங்கள் இப்படி எங்கள்மீது அநியாயமாகக் குற்றம் சாட்டுகிறீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆகவே, உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தி, திருவசனத்துக்கு எதிர்த்து நிற்காமல் தயவு செய்து கீழ்ப்படிந்து சீர்பொருந்துங்கள் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் மனத்தாழ்மையோடு வேண்டுகிறோம்.