057) சாதி ஒழிய சாதியம் தவறு என்று போதிக்கவேண்டிய தேவை இல்லை. ஜெபித்தாலே போதும். சாதி ஒழிந்துவிடும்.

பதில்: சாதியம் என்பது கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையில்லாமையின் ஒரு அடையாளமாகும். கிறிஸ்துவை பின்பற்றுவோர் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று கிறிஸ்து தன் தந்தையிடம் பிரார்த்தனை செய்தார்.
கிறிஸ்து தன் தந்தையிடம் விண்ணப்பிக்கும் போது, “எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும் (யோவா. 17:21) என்கிறார். கிறிஸ்துவே தன் தந்தையிடம் வேண்டுதல் செய்தால்தான் சாதிக்கமுடியும் என்னுமளவுக்கு கிறிஸ்தவ ஒற்றுமை மிகவும் முக்கியமாகும். ஆகவே சாதி அடிப்படையில் பிரிந்து கிடப்போரை ஒற்றுமைப் படுத்துவதற்காக நாம் கடவுளிடம் பிரார்த்தனை செய்யவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், தன் சீடர்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கவேண்டும் (யோவா. 13:35); பெரியவன் சிறியவன் என்று பாகுபாடு கடைபிடிக்கக்கூடாது (லூக். 9:46-48) என்றெல்லாம் போதித்தாரே! அதுபோல நாம் சாதியம் தவறு என்று போதிக்கவேண்டுமே! முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் *கற்பித்து அறிவுரை கூறுங்கள்* (கொலோ. 3:16) என்று பவுல் சபை ஊழியர்களுக்கு அறிவுறுத்துகிறார்.
எத்தியோப்பிய அரச அலுவலர் ஒருவர் எருசலேம் சென்று, கடவுளை வணங்கி விட்டுத் திரும்பிச் சென்று கொண்டிருந்தார். அவர் ஓர் அலி; எத்தியோப்பிய அரசியான கந்தகியின் நிதியமைச்சர். அவர் தமது தேரில் அமர்ந்து எசாயாவின் இறைவாக்கு நூலைப் படித்துக் கொண்டிருந்தார். தூய ஆவியார் பிலிப்பிடம், “நீ அந்தத் தேரை நெருங்கிச் சென்று அதனோடு கூடவே போ” என்றார். பிலிப்பு ஓடிச் சென்று, அவர் எசாயாவின் இறைவாக்கு நூலை வாசிப்பதைக் கேட்டு, “நீர் வாசிப்பதின் பொருள் உமக்குத் தெரிகின்றதா?” என்று கேட்டார். அதற்கு அவர், “யாராவது விளக்கிக்காட்டாவிட்டால் எவ்வாறு என்னால் தெரிந்துகொள்ள முடியும்?” என்று கூறி, தேரில் ஏறித் தன்னோடு அமருமாறு பிலிப்பை அழைத்தார் (தி.ப. 8:27-31). மேற்கண்ட சம்பவத்தில் மறைநூலை வாசித்துக்கொண்டிருந்த அமைச்சருக்கு அவர் வாசித்துக்கொண்டிருந்த இறைவார்த்தைகள் புரியாததால் பிலிப்புவிடம் அதை விளக்கித்தரச் சொல்கிறார். பிலிப்பு விளக்கிச் சொல்கிறார். இதேபோல்தான் இன்றும் பலர் பொருள் தெரியாமல் மறைநூலை வாசிக்கிறார்கள். அவர்களுக்காக பிரார்த்தனை செய்துவிட்டுமட்டும் செல்வதால் அவர் எதைக் கற்றுக்கொள்ளமுடியும்?
ஜெபமே போதுமென்றால், உலக மக்களை மீட்புக்குள் நடத்த, உலகமெங்கும் புறப்பட்டு போய் நற்செய்தி அறிவிக்கவேண்டிய தேவை இல்லையே! நம் வீட்டில் உட்கார்ந்து உலக மக்கள் அனைவரும் மீட்கப்பட பிரார்த்தனை செய்தாலே போதுமே! உலகினர் எல்லோரும் தானாகவே மீட்கப்படுவார்களே! கடவுளால் முடியாதது என்ன இருக்கிறது?
கிறிஸ்துவுக்கு எதிராக செயலாற்றிக் கொண்டிருந்த சவுல், குதிரையில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது அவரை கீழே விழச்செய்து, அவரது கண்களை குருடாக்கி கிறிஸ்துவுக்கு அவரை அடிபணியவைத்தாரே! அப்படி எல்லோரையும் சந்தித்து மனமாற்றமடையச் செய்யலாமே! ஏன் கடவுள் அப்படி செய்யவில்லை? எதற்காக நாம் நற்செய்தி அறிவித்து அடி வாங்கி, இரத்தசாட்சியாக சாகவேண்டும்?
ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி *போதிக்கக்கடவன்* (1பேதுரு 4:11) என்றுதான் மறைநூல் சொல்கிறதேதவிர எதையும் போதிக்கக்கூடாது என்று சொல்லவில்லை.
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி *கற்பியுங்கள்* (மத். 28:20) என்று இயேசு தன் சீடர்களுக்கு கூறியது தவறு என்று கூறுகிறீர்களா?