பதில்: அழிந்து போகின்ற ஆன்மாக்களைப் பற்றி உங்களுக்கு கரிசனம் இல்லாததால்தான் இப்படி பேசுகிறீர்கள் என்று நிதானிக்கிறேன். சாதியம் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடையாக உள்ளது என்று தெரிந்தபின்பும், திருச்சபை வளர்ச்சியில் ஆர்வமுடையவர்கள் சாதியத்துக்கு எதிராக பேசாமல் இருக்க எப்படி முடியும்? உங்கள் மனம் அவ்வளவு கடினமானதா? நமக்காக உயிரையே கொடுத்த அந்த லட்சியவாதியின் உள்மன ஆதங்கங்களை நாம் புரிந்துகொள்ளவேண்டுமல்லவா!
இயேசுவை நம்பி நான் நரகத்துக்கு தப்பிக்கவேண்டும்; பரலோகத்துக்கு போகவேண்டும்; இவ்வுலகில் நீண்ட ஆயுளோடு, ஆரோக்கியமாக, தலைமுறைகளாக வாழவேண்டும் என்ற விருப்பத்தோடு இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகின்ற சுயநலவாதிகளாக நாம் இருப்பதில் என்ன சிறப்பு இருக்கிறது? நம் அயலகத்தாரும் இம்மையில் வளமோடு வாழவேண்டும்; மறுமையில் நரகத்துக்கு தப்பித்து, பரலோகத்துக்கு வரவேண்டும் என்று சிந்திப்பது அல்லவா கிறிஸ்துவின் சிந்தை! அம்பேத்கர், பெரியார் போன்ற பல நல்ல தலைவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத காரணம் கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதிப் பாகுபாடுகள்தான் என்று உணர்ந்தபின்பும் சாதியத்தை எதிர்த்து பேச நேரமில்லை என்பது பிறருடைய ஆன்மாக்களைப் பற்றிய அக்கரை உங்களுக்கு இல்லை என்றுதானே அர்த்தம்! உலகிலேயே மிகவும் சுறுசுறுப்பான ஓய்வறியா உழைப்பாளிகள் எல்லாம் கொரோனா நாட்களில் அமைதியாக வீடுகளுக்குள் தங்களை அடக்கிக்கொண்டார்களே! எனக்கு ஓய்வெடுக்க நேரமில்லை என்று அன்று யாரும் சொல்லாத காரணம் என்ன? மரண பயத்தைத் தவிர வேறு என்ன இருக்கமுடியும்?
கிறிஸ்தவர் அல்லாதவர்களில் இயேசுவை மதிப்போர் கோடிக்கணக்கானோர் உண்டு. ஆனால், அவர்களெல்லாரும் கிறிஸ்துவை தங்கள் ஆன்ம மீட்பராக ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் இயேசுவின்மீது வைத்த அபிமானம் அவர்களைப் பாவத்திலிருந்து இரட்சிக்கவில்லை. அவர்கள் பிறரை இயேசுவிடம் கொண்டுவரவேண்டும் என்ற ஆர்வம் உடையவர்களுமல்ல. ஏனென்றால், அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று இயேசு கிறிஸ்து விரும்புகிறார் என்று அவர்கள் அறியவில்லை. அதாவது, அவர்கள் இயேசுவிடம் வைத்திருந்த அபிமானம் அவர்களை இயேசுவின் இலட்சியக் கனவோடு இணைக்கவில்லை. எ.கா. விவேகானந்தர், காந்தி, கலைஞர் கருணாநிதி, வை.கோ etc.
அதுபோல, சகோ. அகத்தியனையும் அவர் சொல்லும் சாதி மறுப்பையும் அபிமானிக்கும் பலர் உண்டு. “ஐயா, உங்கள் பேச்சு ரொம்ப எனக்கு பிடிக்கும்; Super speech! இதுபோன்று வெளிப்படையாக பேச உங்களைத் தவிர வேறு யாருமே இல்லை; நீங்க வேற லெவல் ஐயா!, Well done! Congratulations! கலக்கிட்டீங்க! அருமை சார்!” என்றெல்லாம் புகழ்ந்து பாராட்டப் பலர் உண்டு. ஆனால் அவர்கள் சாதி ஒழிப்பில் சகோ அகத்தியனோடு இணைந்து செயலாற்றவில்லையே!
சந்தர்ப்ப சூழ்நிலையால் சாதி மறுப்பு திருமணம் செய்தோரும் பலர் உண்டு. அதற்காக அவர்கள் நிஜமாகவே சாதி மறுப்பாளர்கள் என்று முடிவு செய்துவிடமுடியாது. சாதியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்கள் பலர் உண்டு. ஆனால், அவர்கள் எல்லோரும் சாதி ஒழியவேண்டுமென்று விரும்புகிறவர்கள் என்று முடிவு செய்துவிடமுடியாது.
பலர் தொலைவில் நின்று கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தை சுயநலத்தோடு வேடிக்கை பார்ப்பவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுடைய அபிமானங்களெல்லாம் பயனற்றது என்பதே நிதர்சனமான உண்மை.
நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஐனப்படுத்திக் கொள்ளுங்கள் (எபே. 5:16)
இந்த வசனத்தின் முழுமையான அர்த்தத்தை என் வாலிப நாட்களில் புரிந்துகொள்ள முடியவில்லை. வயது ஏற ஏற ஒவ்வொரு நிமிடத்தையும் ஒவ்வொரு நாள்போல பார்க்கிறேன்.
போதகர் பலருடைய போதனை காணொலிகளை பார்த்து புதிய பல விஷயங்களை பலர் கற்கிறார்கள். பலர் கருத்தியல் விடுதலை அடைகின்றனர். ஆனால், பெரும்பான்மையானோர் அந்த போதகர்கள்மூலம் நன்மையை பெற்றுக்கொண்டபின் அவர்களை அழைத்து ஒரு தடவைகூட நன்றி சொல்வதில்லை. இது ஒரு தரமான ஆன்மீகமல்ல. கிறிஸ்தவர்களுக்கு கடவுளிடமிருந்து நன்மைகள் பல கிடைத்தாலும் கடவுளுக்கு நன்றி சொல்ல கிறிஸ்தவர்களுக்கு நேரமில்லாவிட்டால், இதே மனோநிலையில் உணர்வில்லாமல் இருக்கும் அவிசுவாசிகளை எப்படி கடவுளிடம் வழிநடத்தமுடியும்?
மக்களுக்கு பயனுள்ள ஊழியம் என்று உங்கள் மனசாட்சிக்கு தெரிந்தால் அந்த ஊழியரோடு நீங்களும் இணைந்து அந்த ஊழியத்தை செய்யலாமே! கிறிஸ்தவர்கள் நாம் நன்றியற்றவர்களாக இருந்துகொண்டே, அவிசுவாசிகளிடம் கடவுள் சிலுவையில் செய்த தியாகத்தைப் பற்றிப் பேசினால் அவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?