பதில்: கிறிஸ்து தரும் பாவ மன்னிப்பின் நற்செய்தியைப் பரப்ப, *’இயேசு விடுவிக்கிறர் ஊழியங்கள்’, ‘இயேசு அழைக்கிறார் ஊழியங்கள்’, ‘இயேசு சீக்கிரம் வருகிறார் ஊழியங்கள்’* என்ற பெயரில் அரசாங்கத்தில் எதற்காகப் பதிவு செய்யவேண்டும் என்பதை நீங்கள் ஆய்வு செய்யவேண்டும். அப்படி பெயர் வைக்காமலேயே ஊழியம் செய்யமுடியாதா? அற்புதங்கள் நடக்காதா? மக்கள் இரட்சிக்கப்படமாட்டார்களா?
விசுவாசிகள் கூடி பிரார்த்தனை செய்ய, *’கத்தோலிக்க திருச்சபை’, ‘ஆற்காடு லுத்தரன் திருச்சபை’, ‘தென்னிந்திய திருச்சபை’, ‘ஷெக்கீனா சபை’, ‘ஷாலோம் சபை’, ‘பாப்திஸ்து சபை’* என்ற பெயர்களில் ஏன் இயங்கவேண்டும்? இந்த பெயர்கள் இல்லாமல் ஆராதனை செய்தால் கடவுள் ஏற்றுக்கொள்ளமாட்டாரா? இவற்றை ஏன் *அரசாங்கத்தில் பதிவு* செய்யவேண்டும்? இதை எல்லாம் பற்றி என்றைக்காவது யோசித்தீர்களா? அப்படி சபைகளை உருவாக்கி, செயற்குழு உறுப்பினர்களை நியமித்து, செயலாற்றுவது தவறில்லையென்றால், *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* தொடங்கி நடத்துவதும் தவறில்லை.
*களவு செய்வது, கொலை செய்வது, பொய் சொல்வது, விபச்சாரம் செய்வது* இவையெல்லாம் பாவம் என்று அதிகாரபூர்வமாக எல்லா கிறிஸ்தவர்களும் ஒத்துக்கொள்கிறார்கள். அவை *பாவங்களல்ல* என்று பொதுவாக எந்த கிறிஸ்தவரும் சொல்வதில்லை. ஆனால், *சாதி பார்ப்பது பாவம்* என்று பெரும்பான்மையான போதகர்களும், கிறிஸ்தவர்களும் ஒத்துக்கொள்ளவில்லை. மாறாக *_சாதி பார்க்கவேண்டும் என்று வேதம் கூறுகிறது_* என்று போதிக்கிறார்கள்! _”ஆபிரகாம், ஈசாக்கு போன்ற பக்தர்கள் இன உணர்வுடையவர்களாக இருந்தனர்; இயேசுவே இன உணர்வு உடையவர்தான்; அதனால்தான் கானானிய பெண்மணியை நாய் குட்டி என்று அழைத்தார்”_ என்றெல்லாம் கூறி சாதியத்தை நியாயப்படுத்துகிறார்கள். சபைகளில் *சாதி அடிப்படையில் திருமண தகவல் மையங்களை* போதகர்களே நடத்துகிறார்கள். சாதியத்துக்கு எதிராக பேச பெரும்பான்மையான *’சாதி பாஸ்டர்கள்’* நடத்தும் சபைகளில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆதலால், தனித்தனியாக போதிப்பதைவிட, சாதி மறுப்பாளர் அனைவரும் ஓர் *இயக்கமாய் திரண்டு, சாதியை வன்மையாக எதிர்ப்பதே அறிவாண்மை* என்று தீர்மானித்து இயக்கமாக செயல்படுகிறோம். ஒரு கருத்தை ஒருசிலர் பேசுவதைவிட *ஒரு பெரும்படையாக, கூட்டு முயற்சியோடு* அதிக முக்கியத்துவம் கொடுத்து பேசுவதும், ஜெபிப்பதும், செயலாற்றுவதும் மிகுந்த பலன் தருமல்லவா! ஆதலால் இயக்கமாக இந்த ஊழியத்தை செய்கிறோம்.
இந்த ஊழியத்துக்கென்று, ஊழியத்தின் பெயரில் மக்களிடமிருந்து பெறப்படும் பணத்தை சரியாக, நேர்மையாக செலவிட்டு, அரசு அதிகாரிகளால் கணக்கு தணிக்கை செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு, செயல்படுவதே அரசாங்க விதிமுறை. அரசின் சட்டப்படியும், எங்கள் மனசாட்சிப்படியும் சரி என்று ஒப்புதல் பெற்று இந்த ஊழியத்தை செய்கிறோம்.
*விபச்சாரம் செய்வது தவறல்ல* என்று பெரும்பான்மையான சபைகள் போதிக்கும் நிலை வந்தால், *’கிறிஸ்தவ விபச்சார தடுப்பு இயக்கம்’* தொடங்கவேண்டிய நிலை வரலாம்.