பதில்: (இந்த பதிவை யாரையும் தனிப்பட்ட முறையில் அவமதிக்கும் நோக்கத்தில் எழுதவில்லை. சிலவேளை உண்மை கசக்கும். ஆனால் அது பயனுள்ளது).
மக்கள் *மதிக்கும்* ஒரு வேலையில் அமர்ந்து, *பெரிய* சம்பளம் வாங்கி, பொருளாதாரத்தில் உயரவேண்டும் என்பதற்காகத்தான் பெரும்பாலும் மாணவர்கள் வருத்தப்பட்டு கட்டடப் பொறியியல் உள்ளிட்ட எந்த படிப்பையும் படிக்கிறார்கள். இதுதான் உண்மையேதவிர வீடில்லாமல் சாலை ஓரத்தில் படுத்திருக்கும் ஏழைகள் எல்லோரையும் எப்படியாகிலும் சொந்த வீட்டில் குடியமர்த்தவேண்டுமே என்ற சமூக அக்கரையில் பொதுவாக யாரும் கட்டடப் பொறியியல் படிப்பதில்லை. யாராவது ஒரு சிலர் இதில் விதிவிலக்காக இருக்கலாம்.
*செல்வச் செழிப்போடு, சமுதாய அந்தஸ்தோடு* வாழும் நோக்கில்தான் மருத்துவம் படிப்பவர்கள் அப்படிப்பை தேர்வு செய்கிறார்களே ஒழிய, அன்னை தெரெசாவோடு இணைந்து நோயாளிகளுக்கு சேவை செய்வதற்காக அந்த படிப்பை பெரும்பான்மையானோர் தேர்வு செய்வதில்லை. யாராவது ஒரு சிலர் இதில் விதிவிலக்காக இருக்கலாம்.
தன் வாதத் திறமையின்மூலம் உலகிலுள்ள எல்லா *நிரபராதிகளையும் விடுவித்துவிடவேண்டும்* என்னும் பொதுநல உணர்வோடு யாரும் பெரும்பாலும் சட்டக் கல்வி பயின்று வழக்கறிஞர் வேலைக்கு வருவதில்லை. தான் படித்த படிப்பின்மூலம் பெற்ற அறிவைப் பயன்படுத்தி *சமூக அந்தஸ்தோடு, எவ்வளவு சம்பாதிக்கலாம் என்றே குறியாக இருப்பார்.* யாராவது ஒரு சிலர் இதில் விதிவிலக்காக இருக்கலாம்.
பெரும்பாலும், *பணம் சம்பாதித்து வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும், புகழோடு வாழவேண்டும்* என்ற ஒற்றை நோக்கத்திலேயே எந்த வேலைக்குரிய படிப்பானாலும் பெரும்பான்மையான மாணவர்களால் படிக்கப்படுகிறது.
அதேபோல *’பாஸ்டர்’* என்னும் *தொழிலின்மூலம்* சமுதாயத்தில் பெருமதிப்போடு, பணம் சம்பாதித்து பொருளாதாரத்தில் உயர்வடைய நினைத்து பலர் இறையியல் படித்து பாஸ்டர் பதவிக்கு வருகின்றனர். அப்படிப்பட்ட பாஸ்டர்கள் திருச்சபையின் ஒவ்வொரு விசுவாசிகளையும் தங்கள் *கஸ்டமர்களாகவே* பார்க்கிறார்கள்.
பெரும்பான்மையான பாஸ்டர்கள் சாதியால் பாதிக்கப்பட்டிருந்தாலும், பலர் *சுயநலத்தோடு, சுயலாபத்துக்காக, சுயபுகழ்ச்சிக்காக* வாழ்வதால், சாதியத்துக்கு எதிராக அவர்கள் பேசமாட்டார். *பேசமுடியாது.* ஏனென்றால் அவர்கள் சாதியத்துக்கு எதிராக பேசினால், தங்கள் சபைக்கு வரும் பணக்கார சாதி உணர்வாளர்கள் கொடுக்கும் *காணிக்கை, தசமபாகம்* என்னும் *மாமூல்* பணத்தை இழக்கவேண்டியிருக்கும் அல்லவா!
_ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்: கடன்வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை (நீதி. 22:7)_ என்ற வசனத்தின்படி காணிக்கை வாங்கியவன் காணிக்கை கொடுத்தவனுக்கு அடிமையாகிவிடுகிறான். *பணம் சம்பாதிக்கவேண்டும்* என்னும் ஒற்றை நோக்கத்தில் பாஸ்டர் தொழிலுக்கு வந்தவர் இலவசமாக வரும் பணத்தை இழக்கத் துணிவாரா? நீங்கள் அதை நுட்பமாக யோசித்து பார்க்கவேண்டும்.
அப்படிப்பட்டவர்கள், அகிலாண்டத்தை படைத்த நிஜமான தெய்வத்தை தங்கள் கடவுளாக கருதுவதில்லை. *அவர்களுடைய வயிறே அவர்களுடைய தெய்வம்* என்று இறைவார்த்தை கூறுகிறது. (பிலி. 3:19)
“கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போவார். ஏனெனில் *அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல;* ஓநாய் ஆடுகளைப் கவ்வி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும். *கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை* (யோவான் 10:12,13).
ஒரு ஆயர் பேராயராக மாற ஆசைப்படுவது ஏன்? என்று ஒரு CSI சபை விசுவாசியிடம் கேட்டபோது, *”வருவாய் தருணம் அதுவே”* என்று பதிலளித்தார். அதாவது *பணம் சம்பாதிப்பதற்கான நல்ல வாய்ப்பு பேராயர் பதவிதான்* என்று சொல்ல வருகிறார். தங்கள் ஊழியர்களைப் பற்றி விசுவாசிகள் எவ்வளவு தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் பாருங்கள்!
இந்தியாவின் பல கிராமங்களில் யாராவது இறந்துவிட்டால், அவருக்காக துக்கம் கொண்டாடி, மார்பில் அடித்துக்கொண்டு அழ, கூலிக்கு ஆட்களை நியமிப்பார்கள். அவர்கள் காசு சம்பாதிக்க அதை தொழிலாகச் செய்வார்கள். இறந்தவரைப் பற்றி எந்த வருத்தமும் அந்த நடிகர்களுக்கு இருக்காது. அந்த நிகழ்ச்சிக்கு, *”கூலிக்கு மாரடித்தல்”* என்று பெயர். அதேபோல்தான் இன்று பலர் ஊழியம் என்ற பெயரில் *தொழில்* செய்கிறார்கள். மனிதனுடைய ஆன்மா எவ்வளவு முக்கியமானது என்பது இந்த கூலிக்கு மாரடிக்கும் நடிகர்களுக்கு தெரியாது. அது அவர்களுக்கு முக்கியமும் அல்ல.
ஒரு முறை உங்கள் சபைக் கூடுகையில் எத்தனை ஆத்துமாக்கள் வருகிறார்கள் என்று ஒரு பாஸ்டரிடம் கேட்டேன். உடனே 15000 ரூபாய் வருகிறது என்று சொன்னார். பணம் முக்கியமா? கடவுள் முக்கியமா? என்று வரும்போது பெரும்பான்மையான பாஸ்டர்கள் *பணத்துக்கு விலை போய்விடுகிறார்கள்.* கடவுள் புறக்கணிக்கப்படுகிறார் என்பதே நிதர்சனமான உண்மை.
“அம்பேத்கர் 6 லட்சம் தலித் இந்துக்களை அழைத்துக்கொண்டு, இந்துத்துவ சாதி இழிவிலிருந்து விடுதலை அடைவதற்காக *புத்த மதத்திற்கு மாறினார்;* அவர் அடைய விரும்பிய விடுதலைக்காக *ஏன் கிறிஸ்தவத்துக்கு வரவில்லை ஐயா?”* என்று ஒரு பாஸ்டரிடம் கேட்கும்போது, அதைப் பற்றி அவர் கொஞ்சமும் கவலைப்படாமல், “அம்பேத்கரை விடுங்கள்; *நம் சபைக்கு மக்களை சேர்ப்போம்”* என்று கூறினார். இவர் ஆத்தும பாரம் உடையவரா? அல்லது காணிக்கை பாரம் உடையவரா? சிந்தியுங்கள்.
ஒரு காவல்துறை அதிகாரி தன் காவல்துறை சீருடையை அணிவதன்மூலம் அவருக்கு பொதுமக்களிடம் சிறப்பான *அச்சம் கலந்த மரியாதை கிடைக்கிறது.* அதேபோல, பாஸ்டர் அணிந்திருக்கும் ஆன்மீக உடையை நாம் பார்த்தால் அவர் கிறிஸ்துவுக்காக ஒரு அற்பண வாழ்க்கை வாழ்பவர்போல் நமக்குத் தோன்றும். அதனால், ஊழியருடைய உடை அணிந்தால்தான் இவருக்கென்று ஒரு *புனிதமான மரியாதையை* மக்களிடம் உருவாக்கி, இவருடைய பொருளாதாரத்தை தடையின்றி வசூல் செய்யமுடியும். எனவே, அந்த வெண்ணுடையைப் பார்த்து ஏமாந்துவிடாதீர்கள். இப்படிப்பட்டவர்களைப் பார்த்து, “வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத் தோற்றமளிக்கின்றன; அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லாவகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன. அவ்வாறே நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்” (மத். 23:27-28) என்கிறார் கிறிஸ்து.
ஆயனுடைய வேடம் பூண்ட கூலிக்காரனும் உண்டு, ஆடுகளின் வேடம் அணிந்த ஓநாய்களும் உண்டு என்று கடவுள் கற்றுத்தருகிறார்.
கிறிஸ்துவின் கல்வாரி அன்பின் நிமித்தம், அழைப்பு பெற்று ஊழிய பணிக்கு வந்தவர்கள் வேறு. கிறிஸ்து தரும் ஆசீர்வாதங்களை அனுபவிக்கவேண்டும் என்ற *வணிக நோக்கில்* வந்த மதவியாபாரிகள் வேறு. ஊழியர் பணம் சம்பாதிக்க வந்தவரா, கடவுளின் பெயரை மகிமைப்படுத்த வந்தவரா என்பது புடமிடப்படும்போதுதான் தெரியும்.