062) சாதியம் தவறு என்று ஆவியானவரே போதிப்பாரே! நாம் பேசவேண்டிய தேவை இல்லையே!

பதில்: நீங்கள் சொல்வது சரிதான். _நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருள் பொழிவு உங்களுள் நிலைத்திருக்கிறது. அதனால் *உங்களுக்கு எவரும் கற்பிக்க வேண்டிய தேவையில்லை.* மாறாக, நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருள்பொழிவால் *அனைத்தையும் கற்றுக்கொள்கிறீர்கள்.* அவ்வருள்பொழிவு உண்மையானது; பொய்யானது அல்ல. நீங்கள் கற்றுக்கொண்டதற்கேற்ப அவரோடு இணைந்து வாழுங்கள் (1யோவா. 2:27), உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் *முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்.* அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார் (யோவா. 16:13, 14:26)_ என்று திருத்தூதர் யோவான் குறிப்பிடுகிறார்.
திருத்தூதர்களுடைய பணியில் பரிசுத்த ஆவியார் அவர்களை வழிநடத்தியதை மறைநூலில் பார்க்கிறோம்.
_அவர்கள் நோன்பிருந்து ஆண்டவரை வழிபடும்போது *தூய ஆவியார் அவர்களிடம், “பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள்” என்று கூறினார்.* அவர்கள் நோன்பிலிருந்து இறைவனிடம் வேண்டினார்கள்; தங்கள் கைகளை அவ்விருவர்மீது வைத்துத் திருப்பணியிலமர்த்தி அவர்களை அனுப்பி வைத்தார்கள். இவ்வாறு *தூய ஆவியாரால் அனுப்பப்பட்டவர்கள் செலூக்கியாவுக்குச் சென்றார்கள்;* அங்கிருந்து சைப்பிரசுக்குக் கப்பலேறினார்கள் (தி.ப. 13:2-4)_
_ஆசியாவில் இறைவார்த்தையை அறிவிக்காதவாறு *தூய ஆவியார் தடுக்கவே,* அவர்கள் பிரிகிய, கலாத்தியப் பகுதிகளைக் கடந்து சென்றனர். அவர்கள் மீசியா அருகே வந்து பித்தினியாவுக்குச் செல்ல முயன்றபோது இயேசுவின் *ஆவியார் அவர்களை அங்குப் போகவிடவில்லை.*
எனவே அவர்கள் மீசியா வழியாகச் சென்று துரொவா நகரை அடைந்தனர் தி.ப. 16:6-8)_
_இப்போதும் *தூய ஆவியாருக்குக் கட்டுப்பட்டு* நான் எருசலேமுக்குச் செல்லுகிறேன். அங்கு எனக்கு என்ன நேரிடுமென்பது தெரியாது. சிறை வாழ்வும், இன்னல்களும் எனக்காகக் காத்திருக்கின்றன என்று *தூய ஆவியார் ஒவ்வொரு நகரிலும் என்னை எச்சரித்து வருகிறார்* (தி.ப. 20:22-23)_
இப்படி ஆவியார் விசுவாசிகளையும், ஊழியர்களையும் வழிநடத்துவது உண்மையாக இருந்தாலும், “ஆவியாரே *எல்லாவற்றையும்* நேரடியாகப் போதிப்பார், சபைக்கு *போதகர்கள் யாரும் போதிக்கவேண்டிய தேவை இல்லை”* என்று சொல்லமுடியாது.
யாரும் போதிக்கத் தேவையில்லையென்றால், _நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி *கற்பியுங்கள்.* இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (மத். 28:20)_ என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன் திருத்தூதர்களுக்கு ஏன் கட்டளை இட வேண்டும்?
*’போதகர்’ (Teacher)* என்னும் ஊழிய பொறுப்பு ஏன் கொடுக்கப்பட்டது? (எபே. 4:13)
கொர்நேலியுவின் வீட்டில் நற்செய்தி அறிவிக்க சென்ற பேதுரு, _*”யாரையும் தீட்டுள்ளவர் என்றோ, தூய்மையற்றவர் என்றோ சொல்லக்கூடாது” (தி.ப. 10:28)*_ என்று ஏன் போதித்தார்? கிறிஸ்து தரும் மீட்பைப் பற்றியும், பாவமன்னிப்பைப் பற்றியும் ஒரு ஊழியக்காரர், நற்செய்தியைக் கேட்டுக்கொண்டிருப்பவரிடம் பேசும்போது *எவை எல்லாம் பாவங்கள்* என்றும் நற்செய்தியாளர் சொல்லியாகவேண்டுமல்லவா! இல்லாவிட்டால் அவரது பேச்சைக் கேட்பவர், தான் பாவம் செய்தவர் என்று ஒப்புக்கொள்ளமாட்டாரே! அதனால்தான் இனஉணர்வு பாவம் என்று திருத்தூதர் பேதுரு அறிவித்தார். கண்டித்து உணர்த்தும் ஆவியானவரே கொர்நெலியுவிடம் நேரடியாக பேசட்டும் என்று பேதுரு அதை விட்டுவிடவில்லையே! ஏன்?
_அவர் (திருத்தூதர் பவுல்) அவர்களுக்கு ஓர் ஆண்டு ஆறு மாதம் *இறைவார்த்தையைக் கற்பித்து* அங்கேயே தங்கியிருந்தார் (தி.ப. 18:11)_ என்று மறைநூல் கூறுகிறது.
யாரும் போதிக்கத் தேவையில்லையென்றால், பவுல் ஏன் போதித்தார்?
_”நான் வரும்வரை விசுவாசிகளுக்கு மறைநூலைப் படித்துக் காட்டுவதிலும் அறிவுரை வழங்குவதிலும் கற்பிப்பதிலும் கவனம் செலுத்து” (1திமொ. 4:13), “சான்றாளர் பலர் முன்னிலையில் நீ என்னிடம் கேட்டவற்றை, மற்றவர்களுக்குக் *கற்பிக்கும் திறமையுள்ளவர்களும்* நம்பிக்கைக்கு உரியவர்களுமாகிய மனிதரிடம் ஒப்படை (2திமொ. 2:2)_ என்று திருத்தூதர் பவுல் ஏன் ஊழியர் திமொத்தேயுவிடம் கூறவேண்டும்?
கடவுள் யாரிடமும் பேசுவார். கிறிஸ்தவ திருச்சபைக்கு எதிராக எழும்பிய சவுலிடமே பேசினார் (தி.ப. 9:4-6). ஆனால், அருட்பொழிவைப் பெற்று, ஆவியாரால் நடத்தப்பட முழுமனதோடு தங்களை ஒப்படைத்தவர்களிடம் ஆவியார் எளிதில் பேசுவார். ஏனெனில், ஆவியாரின் பேச்சைக் கேட்டு கீழ்படிபவர்களிடம் அவர் தயக்கமின்றி பேசுவார். ஆனால், அவரிடம் உறவில் இல்லாதவர்களிடம் பெரும்பாலும் ஊழியர்கள்மூலமே பேச விரும்புகிறார்.
*அபிஷேகிக்கப்பட்ட, ஆவிக்குரிய, வல்லமையான பெந்தேகோஸ்தே ஊழியர்கள்* என்று இன்று அழைக்கப்படுவோரில் *பெரும்பான்மையானோர்* பலர் தங்கள் பிரார்த்தனைகள்மூலம் நோய்களை குணப்படுத்துகிறார்கள்; பேய்களை ஓட்டுகிறார்கள். தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள். ஆனாலும், சாதி உணர்வாளர்களாகத்தானே வாழ்கிறார்கள்! அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் வரும்போது *கீழ்ஜாதி* என்றும் *பிறஜாதி* என்றும் சக கிறிஸ்தவர்களை அவர்கள் ஒதுக்குவதை கண்கூடாக பார்க்கிறோமே! ஆனால், சாதிப் பாகுபாடு பார்க்காமல் எல்லோரிடமிருந்தும் காணிக்கையை வக்கணையாக வாங்குகிறார்களே! இதைப் பார்த்து காணிக்கை போட்ட ஒடுக்கப்பட்டவர்கள் மனவேதனை அடைகிறார்களே! இதனால் அவர்களில் பலர் சபைக் கூடிவருதலையே நிறுத்திவிட்டார்களே! இந்த அநியாயத்தை *சபை வளர்ச்சியைப் பற்றிய அக்கரை உடையவர்கள்* எப்படி சகிப்பார்கள்?
சாதி துவேஷத்தை கடைபிடிக்கிறவர்களிடம் சாதியத்துக்கு எதிராக ஆவியானவர் *பேச மறுக்கிறாரா?* அவர் *ஓரவஞ்சனை உடைய ஆவியானவரா?* _கடவுள் ஓரவஞ்சனையற்றவர் அல்லவா! (தி.ப. 10:34)_
ஊழியர்களுக்குள் இருக்கும் ஆவியானவர் 1யோவான் 2:27-ன்படி அவர்களை போதித்தாலும் ஆவியானவர் சொல்லும் போதனைகளுக்கு அபிஷேகம் பெற்றவர்கள் கீழ்படியாமல் மனதை கடினப்படுத்தலாம் அல்லவா! அவர்கள் *பரிசுத்த ஆவிக்கு எதிர்த்து நிற்கவும் முடியுமே! (அப்.7:51)*
_கடவுளின் தூய ஆவியாருக்குத் துயரம் வருவிக்காதீர்கள். மீட்பு நாளை முன்னிட்டு உங்கள்மீது பொறிக்கப்பட்ட முத்திரையாக அவர் இருக்கிறார்; மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள் (எபே. 4:30,31)_ என்று திருத்தூதர் பவுல் சபையை அறிவுறுத்துகிறார். இதிலிருந்து பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றவர்கள்கூட ஆவியானவரைத் துயரப்படுத்தமுடியும் என்று நாம் தெரிந்து கொள்கிறோம்.
ஒருவர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக்கொண்ட உடனேயே அவர் எல்லாவற்றையும் அறிந்துவிடுவார் என்று சொல்லமுடியவில்லையே! பெந்தெகோஸ்தே நாளில் *பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக்கொண்ட பேதுருவிடம்* ஒளிந்திருந்த இன உணர்விலிருந்து அவரை விடுவிக்க, *திருத்தூதர் பவுல், திருத்தூதர் பேதுருவுக்கு சமத்துவத்தை போதித்தாரே!* (வாசியுங்கள்: கலா. 2:11-14). அதனால், பேதுரு அபிஷேகம் பெறாதவர் என்று கூறமுடியுமா? அல்லது பவுல் போதித்தது தவறு என்று கூறமுடியுமா?
தொடக்கத் திருச்சபைத் தலைவர்கள்
ஆவியாரின் அபிஷேகத்தைப் பெற்றவர்களாகத்தான் இருந்தனர். ஆனால், யூதர் அல்லாதவர்களுக்காகவும் கிறிஸ்து தன் உயிரைக் கொடுத்தார் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கிறிஸ்து இஸ்ரயேலர்களுக்காக மட்டும்தான் இறந்தார் என்று நினைத்துக்கொண்டிருந்தனர். திருத்தூதர் பேதுருவும் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தார். கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர்; அவர் எல்லோருக்காகவும் தன் உயிரைக் கொடுத்தார் என்பதை அவருக்கு உணர்த்துவதற்காக அவருக்கு ஒரு தரிசனத்தைக் காட்டி அந்த உண்மையை கடவுள் உணர்த்தினார். அதன்பின் கொர்நேலியு என்ற யூதரல்லாதவருடைய வீட்டிலிருந்து வந்த ஊழிய அழைப்பை ஏற்றுக்கொண்டு கொர்நேலியுவின் வீட்டுக்குச்சென்று அங்கு இறைவார்த்தையைப் பேசும்போது கொர்நேலியுவின் வீட்டார்மீது தூய ஆவியார் பொழிந்தருளப்பட்டதை திருத்தூதர் பேதுரு கண்டபோது கடவுள் இஸ்ரயேலர்கள் அல்லாதவர்களையும் மீட்பின் பெரும்பேற்றைக் கொடுக்கிறார் என்று புரிந்துகொண்டார். அதன்பின், திருச்சபைத் தலைவர்களுக்கு அந்த உண்மையை உணர்த்தினார். அவர்கள் அதை புரிந்துகொண்டு கடவுளைப் புகழ்ந்தனர்.
இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களில், *”நான் இரட்சிக்கப்பட்டதோடு, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக் கொண்டதோடு இந்துத்துவ சாதி உணர்விலிருந்து விடுதலை அடைந்தேன்”* என்று பெரும்பான்மையானோர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருக்கமுடியாது. ஏனெனில், ஒருவர் பரிசுத்த ஆவியாரின் அருட்பொழிவைப் பெற்றுக்கொண்ட உடனேயே அவர் எல்லாவற்றையும் அறிந்துவிடுவார் என்று சொல்லமுடியாது. சக விசுவாசிகளை, பணியாளர்களை வைத்து கடவுள் போதிக்கமுடியுமே!
ஆவியானவரே எல்லாவற்றையும் போதிப்பாரென்றால், விசுவாசிகள் சபைக்கு ஒழுங்காக வராவிட்டால், _”சபைக்கூடுகைக்கு வராவிட்டால் ஆசீர்வாதங்களை இழந்துவிடுவீர்கள்”_ என்று போதகர் ஏன் பேசவேண்டும்?
_சிலர் வழக்கமாகவே நம் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை. நாம் அவ்வாறு செய்யலாகாது; ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக. இறுதிநாள் நெருங்கி வருகிறதைக் காண்கிறோம்; எனவே இன்னும் அதிகமாய் ஊக்கமூட்டுவோம் (எபி. 10:25)_ என்ற வசனத்தை மேற்கோள் காட்டி சபையை அறிவுறுத்தவேண்டிய தேவை இல்லையே! _”ஆவியானவரே பேசட்டும்”_ என்று விட்டுவிடலாமே! நீதியைக் குறித்தும் நியாயத் தீர்ப்பைப் பற்றியும் ஆவியானவர் கண்டித்து உணர்த்தமாட்டாரா? (யோவா.16:8)
*’வேதவாசிப்பு, பிரார்த்தனை’* போன்ற தலைப்பில் போதகர்கள் சபையில் பல மணிநேரம் போதிக்கிறார்களே! அவற்றைப்பற்றி ஆவியானவரே போதிக்கட்டும் என்று போதகர்கள் விட்டுவிடவேண்டியதுதானே!
*காணிக்கை, தசமபாகத்தைப்* பற்றியும் அந்த ஆவியானவரே போதிப்பாரே! நீங்கள் ஏன் போதிக்கிறீர்கள்? *”காணிக்கையைப் பற்றி நான் பேசமாட்டேன்!”* என்று ஆவியானவர் என்றாவது உங்களிடம் அடம்பிடித்தாரா? உங்களுடைய தேவைகளை சபையாரிடம் ஏன் சொல்லி ஒப்பாரி வைக்கிறீர்கள்? அவற்றை *கடவுளிடமல்லவா சொல்லவேண்டும்!* உங்களுக்கு வருமானத்தை அதிகப்படுத்துவதற்காகத்தானே காணிக்கையைப் பற்றி போதிக்கிறீர்கள்! உங்கள் தேவைகளை கடவுள் சந்திப்பார் என்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லாவிட்டால், ஒரு வேலையை செய்து அல்லவா செலவுகளை சமாளிக்கவேண்டும்!
*உங்களுக்கு லாபம் தரும் போதனைகளை* நீங்கள் மக்களுக்கு எச்சரித்து போதிப்பீர்கள். விசுவாசிகளின் ஆன்மீக வளர்ச்சிக்கு தேவையான பல நல்ல போதனைகளை அவைகள் பணம் சம்பாதிக்க பயனற்றவை என்று விட்டுவிடுவீர்கள். இது அநியாயமல்லவா?
1யோவா. 2:27-ல், _”உங்களுக்கு எவரும் கற்பிக்க வேண்டிய தேவையில்லை”_ என்று யோவான் சொல்லிய காரணத்தை நாம் புரிந்துகொள்வதற்கு அந்த அத்தியாயத்தின் 18-26 வரையிலான வசனங்களை வாசிக்கும்போது, இயேசுவை கிறிஸ்து அல்ல என்று மறுதலித்த சிலரால் சபையார் குழப்பமடைந்து ஏமாற்றமடைந்த சூழ்நிலையில், மனிதன் சொல்வதை கேட்கவேண்டாம்; ஆவியானவரே உங்களைப் போதிப்பார் என்று திருத்தூதர் யோவான் உணர்த்துகிறார். அதற்காகத்தான் அப்படி பேசினார்.
ஆகவே, சாதி மறுப்பைப் பற்றி நாங்கள் பேசும்படி கடவுள் எங்களிடம் தந்த இந்த விழிப்புணர்வு ஊழியத்தை நிறைவேற்றுகிறோம்.