064) இஸ்லாமியர் லெப்பை, பட்டாணி, ராவுத்தர், மரக்காயர் என்று சாதி பார்க்கிறார்களே!

பதில்: இந்த கேள்விக்கு நான் பதில் சொல்லும்போது நான் இஸ்லாத்தை ஆதரித்து பேசுவதுபோல் உங்களுக்குத் தெரியலாம். ஆனால், அது உண்மைக்குப் புறம்பானது. நான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை என் ஆன்ம மீட்பர் என்றும், அவர் மட்டுமே என்னை பரலோகம் கொண்டு சேர்க்கும் வலிமையுடைய இறைமைந்தன் என்றும் நம்பும் ஒரு கிறிஸ்தவர் என்பதை அழுத்தமாக பதிவு செய்து கொள்கிறேன். “ஆராதனைக்கு தகுதியான தெய்வம் இயேசு நீர் மாத்திரமே” மற்றும் “ஒரு குற்றம் கூடச் செய்யாத ஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும் தான்” என்ற பாடல்களை எழுதி, பாடி வெளியிட்டிருக்கிறோம்.
ஒருமுறை இயேசு கிறிஸ்து மலையில் அமர்ந்து மக்களைப் பார்த்து உரையாற்றும்போது, “மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புகமுடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்” (மத். 5:20) என்று கூறினார். அதற்காக அவர் பரிசேயர்களின் மத தத்துவங்களை ஆன்மீக தத்துவமாக ஏற்றுக்கொண்டார் என்று கூறமுடியுமா? முடியாது. அதேபோல, இஸ்லாமியர்கள் இந்துத்துவ சனாதனத்தை கடைபிடிப்பதில்லை என்பதற்காக நான் இஸ்லாத்தை ஆதரிக்கிறேன் என்றோ பின்பற்றுகிறேன் என்றோ கொள்ளக்கூடாது.
இந்துத்துவ நிர்வாகத்துக்கு உட்பட்ட, சென்னையிலுள்ள ஒரு பள்ளியிலுள்ள ஒரு ஆசிரியர் அந்த பள்ளியிலுள்ள மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட விவகாரம் விவாதத்துக்கு வந்தபோது, சில இந்துத்துவ அரசியல்வாதிகள், _”கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களிலும் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்களே!”_ என்று பேசி மழுப்ப முயற்சி செய்தார்கள். அதேபோல, ஒரு நாத்திகர் ஒரு கிறிஸ்தவரிடம், “நீங்கள் உங்களுக்குள் சாதி பார்க்கிறீர்கள்” என்று சொன்னபோது, “இஸ்லாமியர்களே சாதி பார்க்கிறார்களே!” என்று சொல்லி அந்த கிறிஸ்தவர் தப்பிக்க முயற்சி செய்தார்.
இஸ்லாமியருக்குள் சாதிப் பிரிவினைகள் இருக்கின்றன என்பதற்காக நம்மிடையே இருக்கும் சனாதன சாதி துர்நாற்றத்தை நியாயப்படுத்த முயற்சி செய்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இஸ்லாமியர்கள் சாதி பார்ப்பதுபோல நாமும் சாதி பார்த்தால் அவர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? கடவுளை எஜமானாகவும் தன்னை அடிமையாகவும் நினைக்கும் இஸ்லாமியர்கள் சாதி பார்த்தால்கூட அதை புரிந்துகொள்ளலாம். ஆனால், கடவுளை தந்தையாகவும் தங்களை கடவுளின் பிள்ளைகளாகவும் நினைக்கும் கிறிஸ்தவர்கள் சக கிறிஸ்தவரை புறசாதி, கீழ்சாதி என்று புறக்கணிப்பதை எப்படி சகிக்கமுடியும்?
ஒரு பாஸ்டருக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள் என்று யாராவது கூறினால் இஸ்லாமியர்கள் நான்கு மனைவிகளோடு வாழ்கிறார்களே! என்று சொல்லி தப்பிக்க முயற்சி செய்வதுதான் சரியான கிறிஸ்தவ வாழ்வியலா? கிறிஸ்தவர்கள் ஒரே மனைவியை உடையவர்களாக அல்லவா இருக்கவேண்டும்! கிறிஸ்தவனாகிய என்னுடைய பிள்ளை தவறு செய்யும்போது, “பக்கத்துவீட்டு இஸ்லாமியப் பிள்ளையும் அதே தவறை செய்கிறதே!” என்று சாக்குப்போக்கு சொல்லி தட்டிக்கழிப்பதுதான் கிறிஸ்தவ கொள்கையா? ஒரு இறைச்சிக் கடை வைத்திருக்கும் கல்வியறிவற்ற இஸ்லாமியருக்கு இருக்கும் அடிப்படை சமூக அறிவுகூட வேதாகமக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்று, தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெறப் பலகோடி பணத்தை செலவு செய்து, வெற்றி பெற்று கம்பீரமாக அங்கியும் மேலங்கியும் அணிந்து, தலையில் தொப்பியோடு, கையில் கம்போடு வலம்வரும் பிஷப்புகளுக்கே இல்லையே என்று நாம் வெட்கப்படவேண்டாமா?
இஸ்லாமியர்கள் சாதி பார்ப்பதில்லை என்று நான் சொல்வதன் உள்அர்த்தத்தை நாம் நுட்பமாகப் புரிந்துகொள்ளவேண்டும். இஸ்லாமியர்களுக்குள் ஷியா, அஹமதியா, சன்னி, கவரிஜ், இபாதி என்று சில கொள்கைப் பிரிவுகளும் ஷேக், குரைஷி, கான், கலீபா, லெப்பை, மாப்பிளை, அன்சாரி, சயீது, மரக்காயர், ராவுத்தர், பட்டான், நாயக் என பல சமூக பிரிவுகளும் இருக்கின்றன. இவைகளை நான் நியாயப்படுத்த வரவில்லை. ஆனால், ஆறுமுகசாமி நாடார் கிறிஸ்தவராக மாறும்போது, ஆரோக்கியசாமி நாடாராக மாறுகிறார். ஆனால், இஸ்லாமியராக மாறும்போது அப்துல்லா நாடாராக மாறுவதில்லை. இந்துத்துவ நம்பிக்கையாளராக இருக்கும்போது ‘இந்து பறையர்’ என்று அரசுப் பதிவேட்டில் எழுதப்பட்டவர், கிறிஸ்தவராக மாறியபின் ‘கிறிஸ்தவப் பறையர்’ என்று எழுதப்படுகிறார். எந்த பெயர் அவர்களைத் தலைமுறைகளாக அழுத்திக்கொண்டிருந்ததோ அந்த பெயரிலிருந்து அவர்களுக்கு விடுதலை கிடைப்பதில்லை.
ஆனால், இஸ்லாத்துக்குப் போனால் *’இஸ்லாமியப் பறையர்’* என்று எழுதப்படுவதில்லை. இங்கு எந்த பெயர் அவர்களைத் தலைமுறைகளாக அழுத்திக்கொண்டிருந்ததோ அந்த பெயரிலிருந்து அவர்களுக்கு விடுதலை கிடைக்கிறது.
முஸ்லீம்கள் இந்துத்துவ வர்ணாசிரம அடிமைத்தன கொள்கையை நிஜமாகவே வெறுக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறதல்லவா!
பள்ளர், பறையர், சக்கிலியர் என்ற பெயர்களோடு மனவலியில் வாழும் மக்களுக்கு இச்செய்தி நற்செய்தியாக இருப்பதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? அதனால்தானே 1981-ல் தென்காசி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் 900 தலித் இந்து மக்கள் இஸ்லாத்துக்கு சென்றுவிட்டனர். 2020-ல் கோவை மேட்டுப்பாளையத்தில் 430 இந்து தலித் மக்கள் இஸ்லாத்துக்கு சென்றுவிட்டனர்.
“இஸ்லாமியர்கள் தங்கள் திருமணங்களில் இனப் பிரிவுகளைப் பொருட்படுத்துவதில்லை” என்று பல முஸ்லீம்கள் சொன்னாலும், நடைமுறையில் சிலர், “இஸ்லாமியர் திருமணத்தில் சாதி பார்க்கிறார்கள்” என்றும் கூறுகிறார்கள். அந்த இரு கருத்துக்களும் ஏற்புடையதே! ஆனால், கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப்போயிருக்கும் வக்கிர சாதி பேதங்களை மூடி மறைக்க இஸ்லாமியரின் சாதியத்தைச் சுட்டிக்காட்ட நாம் முயற்சி செய்வது கிறிஸ்துவுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகமல்லவா! ஆனால், பவ்வியமாக அந்த தவறைச் சுட்டிக்காட்டி விசுவாசிகளைத் திருத்துவதல்லவா கிறிஸ்துவுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் செய்யும் அர்த்தமுள்ள ஊழியம்!
இஸ்லாத்தில் மட்டுமல்ல; புத்த மதத்தைப் பின்பற்றுவோருக்குள்ளும் சாதி வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், ஆதாம் என்ற ஒற்றை மனிதனிலிருந்தே இவ்வுலகின் எல்லா மனிதரும் வந்திருக்கின்றனர் என்ற கொள்கையை நம்பாத பெளத்தர்கள் சாதி பார்த்தால்கூட அதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால், ஆதாமிலிருந்தே இவ்வுலகின் எல்லா மனிதரும் வந்திருக்கின்றனர் என்ற கொள்கையை நம்பும் கிறிஸ்தவர்கள் சாதி பார்ப்பதை எப்படி சகித்துக்கொள்ளமுடியும்? பெளத்தர்களிடையே சாதி இல்லாவிட்டால் புத்தத்திற்கு நகர்ந்த தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கொடுத்திருக்கமாட்டார்களே! ஆனால், பெளத்தர்களும் இஸ்லாமியரும் சாதி வேறுபாடுகளை கடைபிடிக்கும்போது நான் ஏன் கடைபிடிக்கக்கூடாது என்று ஒரு கிறிஸ்தவன் கேட்பது ஒரு அருவருப்பான கேள்வியல்லவா!
பெளத்தர்கள் இஸ்லாமியருடைய வாழ்க்கைத் தரத்திற்கும் கிறிஸ்தவரின் வாழ்க்கைத் தரத்துக்கும் வேறுபாடுகள் எதுவும் இல்லாவிட்டால் கிறிஸ்து கிறிஸ்தவர்களால் எப்படி மகிமை அடைவார்? இந்துவாக இருக்கும்போது இருந்த இனஇழிவு *கிறிஸ்தவராக மாறியபின்பும் அகலாவிட்டால் இயேசுவுக்கு என்ன சிறப்பான மதிப்பு கிடைக்கப்போகிறது?* கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பெரும்பான்மையானோருடைய இந்துத்துவ சாதி அடையாளம் அவர்களைவிட்டு மறையவில்லை என்பது மறைக்கமுடியாத வரலாற்று உண்மையல்லவா! சாதியம் என்னும் புற்றுநோய் எவ்வளவு ஆபத்தானது என கிறிஸ்தவப் போதகர்கள் பெரும்பான்மையானோர் போதனை செய்வதில்லை என்பதல்லவா இதற்கு காரணம்! போதகர்களே சாதி உணர்வுக்கு அடிமைப்பட்டு கிடக்கிறார்களே! ஆனாலும், தாங்கள் கடைபிடிக்காத சமத்துவக் கொள்கையை அவர்கள் பிறருக்குப் போதிக்காமல் இருப்பதற்காகவே கிறிஸ்தவ ஊழியர்களுக்கு நன்றி செலுத்தவேண்டும்.
சாதியத்திலிருந்து விடுதலையைத் தேடி ஒடுக்கப்பட்டவர்கள் இயேசுவிடம் வரவில்லையே! அவர்கள் இஸ்லாத்துக்கு அல்லவா நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்! இதிலிருந்து ஒடுக்கப்பட்டவர்கள் கிறிஸ்தவர்களின் சகோதரத்துவத்துக்கு *மிகக் குறைந்த* மதிப்பெண் கொடுத்துவிட்டார்கள் என்று உங்களுக்கு தெரியவில்லையா? நான் பரீட்சை எழுதிவிட்டு அதற்கு நானே மதிப்பெண் கொடுத்துக்கொள்ளலாமா? அந்த பாடத்தில் வல்லுநராகிய ஒரு ஆசிரியர் அல்லவா மதிப்பெண் தரவேண்டும்! கிறிஸ்தவர்களின் வாழ்க்கைத் தரத்துக்கு கிறிஸ்தவர்களே *’யோக்கியதைச் சான்றிதழ்’* கொடுத்து திருப்தி அடைவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
ஒரு தாழ்த்தப்பட்டவர் இஸ்லாத்தை ஏற்ற உடனேயே தன்னை இஸ்லாமியர் என்று அரசாங்கத்தில் பதிவு செய்கிறார். அவர் இந்து SC என்று எங்கும் பொய் சொல்வதில்லை. அது தவறு என்றும் அது அவர்கள் வணங்கும் கடவுளை இழிவுபடுத்தும் செயல் என்று அங்கு போதிக்கிறார்கள். ஆனால், இந்துத்துவாவிலிருந்து கிறிஸ்தவத்துக்கு நகர்ந்த பெரும்பான்மையான கிறிஸ்தவ பாஸ்டர்களே தங்கள் பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும்போது மனசாட்சியே இல்லாமல் இந்து SC என்று சேர்க்கிறார்களே! இப்படி 60-வது வயதுவரை *தொடர்ந்து* இந்து என்று பொய் சொல்லும் ஒரு கிறிஸ்தவரை *பரலோகம் ஏற்றுக்கொள்ளுமா?* கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்குச் செய்யும் இந்த துரோகத்தை எத்தனை போதகர்கள் பாவம் என்று சுட்டிக்காட்டுகிறார்கள்?
_மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது (மத். 5:16), நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து, எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக (தீத். 2:7, 8)_ என்றல்லவா பைபிள் கூறுகிறது.
சாதி ஒழித்து சகோதரத்துவத்தை நிலைநாட்டவேண்டும் என்னும் ஒற்றை நோக்கோடு மட்டுமே உயிர்வாழ்ந்த ஈ.வே.ரா. பெரியார் என்னும் மானுடவியல் பேரறிஞர், *”இன இழிவு நீங்க இஸ்லாம் நன்மருந்து”* என்று தன் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். சகோதரத்துவ விஷயத்தில் அந்த பெரியார் *கிறிஸ்தவத்துக்கு ஏன் மதிப்பளிக்கவில்லை* என்பதை மனத்தாழ்மையோடு சிந்திக்கவேண்டுமல்லவா? தவறு யார் செய்தாலும் அதை முதிர்ந்த மனதோடு ஒத்துக்கொண்டு திருந்துவது அல்லவா கிறிஸ்தவ கொள்கை! *கிறிஸ்தவரிடம் இல்லாத ஏதோ ஒன்றை* ஒடுக்கப்பட்டவர்கள் இஸ்லாமியரிடம் கண்டதால்தானே இஸ்லாத்துக்கு நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்!
இரண்டு இஸ்லாமிய குடும்பங்கள் இரட்சிக்கப்பட்டன. ஒரு குடும்பத்திலுள்ள ஒரு ஆணும் (மரக்காயர்), மற்ற குடும்பத்திலுள்ள ஒரு பெண்ணும் (ராவுத்தர்) திருமணம் செய்ய முயற்சி செய்தனர். அப்போது, அந்த பெண்ணின் தந்தை பையனிடம், “நீங்கள் மரக்காயர் பிரிவைச் சார்ந்தவர்களாக இருப்பதாலும், நாங்கள் ராவுத்தர் பிரிவைச் சார்ந்தவர்களாக இருப்பதாலும், ‘இனம் இனத்தோடுதான் சேரவேண்டும்’, என்று எங்கள் பாஸ்டரே சொல்லிவிட்டதாலும் உங்களுக்கு எங்கள் மகளைத் தரமுடியாது” என்று தீர்க்கமாகக் கூறிவிட்டார். காரணம் பெண்ணின் குடும்பம் சாதி உணர்வுடைய ஒரு ஊழியரின் சபை விசுவாசிகளாம். கிறிஸ்தவத்தின் கொடிய நிலையைப் பாருங்கள்.
ஒருவர் இரட்சிக்கப்படாத இஸ்லாமியராக இருந்தபோது இருந்த மனமுதிர்ச்சிகூட, அவர் இரட்சிக்கப்பட்டபின்பு இல்லாவிட்டால் இந்த கிறிஸ்தவ இரட்சிப்பை யார் மதிப்பார்கள்? “எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற கொள்கையை திருவள்ளுவர் சொன்னாலும் நானும் அதை நம்புகிறேன். நல்ல விடயத்தை எதிரியே சொன்னாலும் அதை ஒப்புக்கொள்வதுதான் மானுட முதிர்ச்சி என்று நான் நினைக்கிறேன்.