பதில்: மாணவர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது என்பதற்காக பள்ளிச் சீருடை அமுல்படுத்தப்பட்டது. அதேபோல கிறிஸ்தவர்களுக்குள் சகோதரத்துவத்தை நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்டதுதான் அசனப் பண்டிகை (சமபந்தி விருந்து). இன்றும் தென்னிந்தியத் திருச்சபை போன்ற நிறுவனங்களில் வருடம்தோறும் அதை நடைமுறைப்படுத்துகிறார்கள். அது பெருமகிழ்ச்சியோடு வரவேற்கத்தக்கது. அசனப் பண்டிகையில் சாதிப் பாகுபாடுகள் இல்லாமல் ஒரே தாயின் பிள்ளைகளைப் போல சகோதரத்துவ உணர்வோடு ஒற்றுமையாக அமர்ந்து சாப்பிடுவதை ஒத்துக்கொள்ளமுடியாத பலர் திருச்சபைக்கு வருவதையே நிறுத்திவிட்டனர். ஆனாலும், கொள்கைப் பிடிப்போடு தொடர்ந்து சமபந்தி விருந்தை கிட்டத்தட்ட எல்லா சபையினரும் நடத்துகின்றனர். அது பாராட்டத்தக்க விடயமாகும். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், பல ஊர்களில் ஒரே ஊரில் இரண்டு சாதியாருக்கென்று இரண்டு சபைக் கட்டடங்கள் இருக்கின்றன என்ற கசப்பான உண்மையை நாம் மறுக்கமுடியாது. அப்படிப்பட்ட பாகுபாட்டு சபைகளிலும் அசனப் பண்டிகை நடக்கிறது. ஆனால், எந்த நோக்கத்துக்காக அசனம் தொடங்கப்பட்டதோ அந்த நோக்கத்தை அந்த அசனப் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்தவர்களில் பலர் மறந்துவிட்டனர்.
கர்த்தரின் திருவிருந்துப் பந்தி திருத்தூதர் பவுல் பேசும்போது, “அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்குகொள்கிறோம்” (1கொரி. 10:17) என்கிறார். இங்கு ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அழகாக அவர் விளக்குகிறார். ஒரே பாத்திரத்திலேயே ஒரே தாயின் பிள்ளைகளாக திராட்சைரசத்தைப் பருகும் உன்னத வழக்கத்தை பலர் இன்றும் தொடர்கிறார்கள். ஆனாலும், ஒரே பாத்திரத்தில் எல்லாரும் பருகுவதை விரும்பாத பலர் சபைக் கூடுகைக்கு வருவதையே விட்டுவிட்டனர் என்ற வலிமிகுந்த வரலாற்றையும் நினைவுகூர்கிறேன்.
தங்கள் சபையிலுள்ள தாழ்த்தப்பட்ட விசுவாசிகளின் வீட்டுக்கு போகாத, அப்படியே போனாலும் அங்கு கொடுக்கப்படும் உணவுகளை உண்ணாத பல ஊழியர்கள் இன்றும் இருக்கிறார்கள். அப்படி தீண்டாமைகள் அப்பட்டமாக கடைபிடிக்கப்படுகின்றன. ஆனால், உங்கள் சபையில் எல்லா சாதி மக்களும் வருகிறார்கள்; ஒற்றுமையாக ஆராதிக்கிறீர்கள்; சமமாக அமர்ந்து சாப்பிடுகிறீர்கள்; நீங்கள் தாழ்த்தப்பட்டவரின் வீடுகளுக்கு போகிறீர்கள்; அவர்கள் தரும் உணவை உண்கிறீர்கள் என்பதெல்லாம் மிக்க மகிழ்ச்சி தரும் செய்திகள்தான். அதில் துளிகூட மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், நீங்களும் உங்கள் சபையாரும் சாதி பார்க்காமல் திருமணம் செய்வீர்களா? திருமணத்தில் சாதி பார்ப்பது பாவம் என்று சபையாருக்கு போதிக்கிறீர்களா?
ஒரு வணிக வளாகத்தில் எல்லா சாதி மக்களும் வருகிறார்கள், பொருட்களை வாங்குகிறார்கள் என்பதற்காக அந்த வணிக வளாகத்தின் உரிமையாளரும் அங்குள்ள வாடிக்கையாளர்களும் சாதி உணர்வற்றவர்கள் என்று கூறமுடியுமா? ஓர் ஆகாய விமானத்தில், தொடர் வண்டியில், பேருந்தில் பல சாதி மக்களும் அமர்ந்து பயணிக்கிறார்கள் என்பதற்காக அந்த பயணிகள் அனைவரும் சாதி உணர்வற்றவர்கள் என்று கூறமுடியுமா? அதேபோல உங்கள் சபையில் எந்த சாதியினர் வந்தாலும் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் திருமண விடயத்தில் அப்பட்டமான நடிகர்களாகத்தானே நாம் இருக்கிறோம்!
இந்த விஷயத்தில் உங்களுக்கும் இந்துக்களுக்கும் என்ன வேறுபாடு வந்துவிட்டது? அப்படியே ஒரு சாதி மறுப்பு திருமணம் நடந்தாலும் மணமகனும், மணமகளும் தீர்மானித்து, சமூகக் குற்றமனசாட்சியோடு நடத்தப்படும் காதல் கல்யாணம்தானே தவிர பெற்றோரின் பூரண சம்மதத்தோடு நடக்கும் சாதி மறுப்பு திருமணங்களா? பெற்று வளர்த்த பெற்றோரின் நல்லாசியில்லாமல் நடக்கும் திருமணங்களை மனசாட்சி ஒத்துக்கொள்கிறதா? ஒரு ஊழியனாக உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். விசுவாசிகள் தரும் காணிக்கைப் பணத்தை சாதி பாகுபாடில்லாமல் ஏற்றுக்கொள்கிறோமே! அவர்களை திருமணத்தில் நாம் புறக்கணிப்பது நியாயமா? வெளியே நாம் சகோதரத்துவ சாயம் பூசி நாடகம் ஆடினாலும், 90% பேரும் மனதுக்குள் சாதி பாகுபாட்டு உணர்வாளர்களாக அல்லவா இருக்கிறோம்! இயேசுவின் அன்பு நமக்குள் இருந்தால் சக கிறிஸ்தவரை பிறசாதி, கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?
அப்படியே நீங்கள் பூரண சாதி மறுப்பாளராக இருந்தாலும் சாதி உணர்வுடைய மற்ற பாஸ்டர்களைப் பற்றி நீங்கள் யோசிக்கவேண்டுமல்லவா! சாதியத்தின் கோரமுகத்தை பாஸ்டர்களுக்கு விளக்கிக் காட்டாவிட்டால், அவர்கள் எப்படி கற்றுக்கொள்வார்கள்? அவர்களுக்கு சாதி மறுப்பின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொடுக்கவேண்டுமே! அதற்காக நீங்களும் எங்களோடு இணைந்து சாதி மறுப்பு விழிப்புணர்வூட்டும் பணி செய்யவேண்டும் என்று உங்களை வலியுறுத்துகிறோம்.
சென்னையில் எங்கள் சபை பாதுகாப்பாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது நான் ஏன் மணிப்பூரிலுள்ள பாதிக்கப்பட்ட சபைகளுக்காக அக்கரைப்படவேண்டும்? என்று கூறமுடியுமா? என் வீட்டில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருப்பதனால் மணிப்பூரில் உள்ளவர்களுக்காக நான் ஏன் பிரார்த்தனை செய்யவேண்டும் என்று சொல்லமுடியுமா?
இது நம் கையிலிருக்கும் 99 ஆடுகளைப் பார்த்து களிகூர்ந்துகொண்டிருக்கும் நேரமில்லையே! தொலைந்தது ஒரே ஆடாக இருந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து கண்டுபிடித்து மந்தையோடு சேர்க்கும் கடமையுணர்வு நமக்கு தேவையல்லவா! காணாமல் போன ஒரு ஆட்டின் உவமையில் 99 ஆடுகளை விட்டுவிட்டு, தொலைந்த ஒரே ஆட்டைப் பற்றி அக்கரைப்பட்டு ஆயன் தேடுவதை பார்க்கிறோம். அதேபோல நாமும் வழி தவறிய நம் சகோதரர்களுக்கு நல்வழிகாட்டும் கரிசனமுடையவர்களாக இருக்கவேண்டுமே! அதுதானே நாம் அவர்கள்மீது வைத்திருக்கும் அன்பின் அடையாளமாக இருக்கிறது!