066) கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம் என்று எதிர்மறையாக பெயர் வைக்காமல், கிறிஸ்தவ அன்பு இயக்கம் என்று நேர்மறையாக பெயர் வைக்கலாமே! அப்போது எல்லோரும் சாதியத்தை விட்டுவிடுவார்களே!

பதில்: *கிறிஸ்தவ அன்பு இயக்கம்* என்று பெயர் வைப்பது தவறல்ல. அருமையான பெயர்தான். ஆனால், அப்படி வைத்தால் சாதிமறுப்புக்கு நாங்கள் இன்று இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பிரச்சாரம் செய்வதுபோல் போதிக்கமுடியாது. சாதிமறுப்பு ‘பல தலைப்புகளில் ஒரு தலைப்பாக’ மாறி, நோக்கம் நீர்த்துவிடும்.
*கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று பெயர் வைத்திருப்பதில் ஒரு முக்கியமான நன்மை நடந்திருக்கிறது. இந்த பெயர் கிறிஸ்தவர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருக்கிறது. நமது நோக்கத்தை மக்கள் எளிதில் புரிந்துகொள்ள இந்த பெயர் உதவுகிறது. பலர் தீவிரமாக சிந்தித்து, நம்மோடு இணைகிறார்களே!
கிறிஸ்தவர்களில் பெரும்பாலானவர்கள் சாதி உணர்வாளர்கள்தான் என்று இந்த பெயரின்மூலம் உலகினர் அறிந்து கிறிஸ்தவர்களிடம் கேள்வி கேட்கட்டுமே! அதன்மூலம் சுரணையுள்ள கிறிஸ்தவர்கள் திருந்தும் வாய்ப்பு அதிகமாகிறதே! அன்பால் திருந்தாத கிறிஸ்தவர்கள் அசிங்கப்பட்டு திருந்தட்டுமே!
*சகோதர சபை, சமாதான திருச்சபை, அன்பின் திருச்சபை, இயேசு அழைக்கிறார், இயேசு அரவணைக்கிறார் ஊழியங்கள், அன்பும் மனதுருக்கமும் ஊழியங்கள், இயேசு நேசிக்கிறார் ஊழியங்கள், புதுவாழ்வு சபை* என்று பலர் ஊழியம் செய்கிறார்கள். அவர்கள் ஒருநாள்கூட சாதி பார்ப்பது தவறு என்று பேசவில்லையே. காரணம் என்ன சகோ? உண்மையை சொல்லப் போனால், இதுபோன்ற பெயர் வைத்திருக்கும் ஊழியங்களின் தலைவர்கள்தான் சாதி மறுப்பை அதிகமாக எதிர்க்கிறார்கள்.
*சகோதர சபையார்தான்* சகோதரத்துவத்தின் முக்கியத்துவத்தை அழுத்தம் திருத்தமாக போதித்திருக்க வேண்டும். ஆனால், அவர்களே எங்களை எதிர்க்கிறார்களே! ஆக, இந்த விஷயத்தில் பெயரில் எதுவும் இருப்பதுபோல் தெரியவில்லை.