067) கிறிஸ்தவத்தில் சாதி இல்லையானால், புதிதாக கிறிஸ்தவத்துக்கு வரும் ஏழைகள் இடஒதுக்கீட்டை இழந்துவிடுவார்களே! அதனால் அவர்கள் கிறிஸ்துவிடம் வருவது தடைபட்டுவிடுமே!

பதில்: “ஒருவர் இயேசுவை ஏற்றுக்கொண்டபின் விபச்சாரம் செய்யக்கூடாது’ என்று விபச்சாரம் செய்துகொண்டிருப்பவரிடம் சொன்னால், அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; எனவே விபச்சாரத்தை தவறு என்றே அவர்களிடம் சுட்டிக்காட்டக்கூடாது” என்று சொல்லமுடியுமா? பாவம் என்றால் என்ன? எந்தெந்த செயல்கள் பாவம்? ஒரு செயலை பாவம் என்று ஏன் சொல்கிறோம் என்று நாம் எடுத்துச் சொல்லாமல் தன்னை பாவி என்று ஒருவர் எப்படி ஒத்துக்கொள்வார்? அவருக்கு பாவ விமோசனம் தேவை என்று எப்படி கண்டுபிடிப்பார்? தன்னை பாவங்களிலிருந்து விடுவிக்க ஒரு இரட்சகர் தேவை என்று எப்படி உணர்ந்துகொள்வார்? ஒருவர் தன்னை நோயாளி என்று ஒத்துக்கொள்ளாமல், மருத்துவர் அவருக்கு சிகிட்சை அளிக்க முயன்றால் அவர் எப்படி ஒத்துழைப்பார்? நான் நலமாகத்தானே இருக்கிறேன்; நான் ஏன் மருந்து உட்கொள்ளவேண்டும் என்று அவர் கேட்பாரல்லவா!
சபைக்கு ஆள் சேர்த்து பணம் சம்பாதிக்கவேண்டும் என்பதற்காக, “நீங்கள் விபச்சாரம் செய்வது தவறல்ல, இயேசுவை கடவுள் என்று வழிபட்டால் மட்டும் போதும்; காணிக்கையை மட்டும் தவறாமல் பாஸ்டருக்கு கொடுத்துவிடுங்கள்” என்று கூறி மக்களை ஏமாற்றுவது பெரும்பாதகம் அல்லவா!
ஒரு கொள்கை கடினமாக இருந்தாலும் அதைச் சொல்பவர் அன்புள்ளவராக இருந்தால், அந்த கொள்கையை யாரிடம் சொல்கிறாரோ அவர் அந்த கொள்கையை ஒரு கசப்பான மருந்தாக மனமுவந்து ஏற்றுக்கொள்வார். எடுத்துக்காட்டாக, விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்மணியை யூத மதவாதிகள் இயேசுவிடம் அழைத்து வந்த சம்பவத்துக்கு வருவோம். அவர்கள், “இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?” என்று கேட்டனர் (யோவான் 8:5). உடனே இயேசு “சட்டப்படி அவளை கல்லால் எறிந்து கொல்லுங்கள்!” என்று சொல்லவில்லை. மாறாக, அவர் அவர்களை பார்த்து, “உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்” (யோவான் 8:7) என்று கூறினார். அதன்பின் அப்பெண்மணியைப் பார்த்து, “நீர் போகலாம்; இனி பாவம் செய்யாதீர்!” (யோவான் 8:11) என்று அறிவுறுத்தி அனுப்பினார். நிச்சயமாக அப்பெண்மணி அதன்பின் விபச்சாரம் செய்திருக்க வாய்ப்பில்லை.
சமூகத்தால் வெறுப்பின் அடையாளமாக கருதப்பட்ட ஆயக்காரர்களில் ஒருவராக இருந்த சகேயு என்பவர் இயேசு கிறிஸ்துவைப் பார்க்க விரும்பினார். அத்தி மரத்தில் அமர்ந்திருந்த சகேயுவைப் பார்த்த இயேசு கிறிஸ்து, அவருக்கு அங்கே பாவமன்னிப்பைப் பற்றி சொற்பொழிவு ஆற்றவில்லை. அவர் செய்த பாவங்களை கண்டித்து உணர்த்தவில்லை. அன்புள்ளத்தோடு ஏற்றுக்கொண்டார். சகா இவன் வீட்டிலே தங்கச் சென்றார். அந்த அன்பைப் பார்த்த சகேயு தன் சொத்தில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கவும், தவறான வழியில் சம்பாதித்த பணத்தை நான்கு மடங்காக திருப்பி கொடுத்தார். ஆனால் அவருக்குள் அவ்வளவு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது இயேசு கிறிஸ்துவினுடைய அன்பு என்பதே மறுக்கமுடியாத உண்மையாகும்.
‘இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்பவர்களுக்குச் சாதி அடையாளம் இல்லை’ என்று அவர்களிடம் சொல்லிவிடவேண்டும். ‘நாம் சாதி அடிப்படையில் படைக்கப்பட்டோம்’ என்ற இந்துத்துவ தத்துவம் ஒரு சமூக விரோத கொள்கை; அது நிஜமான மனித தோற்றக் கொள்கை அல்ல; ஆதாம் என்னும் ஒற்றை மனிதன்மூலம்தான் மொத்த உலக மக்களும் உருவாகி இருக்கிறார்கள் என்ற உண்மையை முதலிலேயே அவர்களிடம் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும்.
கிறிஸ்தவர்கள் சாதியற்றவர்கள் ஆனதால், சாதியின் பெயரைச் சொல்லி நாம் நம்மை அடையாளப்படுத்துவதோ, “நீங்கள் என்ன சாதி?” என்று பிறர் கேட்டால், சாதியின் பெயரை சொல்வது தவறு என்பதை நுட்பமாக அவருக்கு உணர்த்தவேண்டும். சாதியற்ற நம்மிடம், “நீங்கள் என்ன சாதி?” என்று அரசினர் கேட்பதே தவறு. ஆக, சாதியற்ற நாம் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வாங்குவது நியாயமல்ல.
“சாதியில்லை, சாதியில்லை என்று ஊருக்கு உபதேசம் செய்யும் நீ, சாதி அடிப்படையில் இடஒதுக்கீட்டை மட்டும் வக்கணையாக வாங்குகிறாயே!” என்று பிறர் கேட்பதாலேயே, சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வாங்கும் சாதி மறுப்பாளர்கள் சாதியத்துக்கு எதிராக பேசமுடியாமல் குற்ற மனசாட்சியோடு இருக்கிறார்கள். ஆகவே, சாதியற்றோரில் நிஜமான ஏழைகளுக்கென்று தனி இடஒதுக்கீடு அரசிடம் கோருகிறோம். அதை அரசு நமக்குக் கொடுத்து நம்மை ஊக்கப்படுத்தவேண்டும்.
*இடஒதுக்கீடு தேவையற்ற சாதியற்றவர்கள்* இடஒதுக்கீட்டை நிராகரித்துவிடலாம். சாதியற்றோருக்கென்று யார் எங்கே நியாயமான வழியில் இடஒதுக்கீடு கொடுத்தாலும் அதை நாம் தாராளமாக வாங்கலாம். ஒருவர் இயேசுவை ஏற்றுக்கொண்டு வரும்போது இந்த உண்மைகளை வெளிப்படையாக திட்டவட்டமாக சொல்லிவிடவேண்டும்.
‘சாதி அடிப்படையில் கிடைக்கும் இடஒதுக்கீட்டை வாங்குவது சட்டப்படி நமது உரிமை’ என்று ஒரு கோணத்தில் பார்த்தாலும், கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதிப் பாகுபாடுகளை நாம் ஒழிக்க நினைப்பதால், கிறிஸ்தவத்துக்கு சற்றும் சம்பந்தமில்லாத இந்துத்துவ சாதியின் அடிப்படையில் என்ன செய்தாலும் அது தவறுதான் என்பதே உண்மை.