068) கிறிஸ்தவத்துக்கு மாறினால் தலித்துகளுக்காக கொடுக்கப்படும் இடஒதுக்கீட்டை இழக்கவேண்டியிருக்கும் என்று நினைத்து அம்பேத்கர் கிறிஸ்தவத்தை புறக்கணித்தார்.

பதில்: “கிறிஸ்தவத்துக்கு மாறினால் தலித்துகளுக்காகக் கொடுக்கப்படும் சிறப்பு இடஒதுக்கீடு கிடைக்காது; புத்தத்துக்கு மாறினால் கிடைக்கும் என்ற காரணத்தால்தான் அம்பேத்கர் தன் மக்களோடு கிறிஸ்தவத்துக்கு வராமல் புத்தத்தை தழுவினார்” என்று சாதி வக்கிர ‘போதகர்கள்’ சிலர் அம்பேத்கரைப்பற்றி அவதூறு பரப்புகிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், இன்று இந்து தலித்துகளுக்கென்று கொடுக்கப்படும் சிறப்பு இடஒதுக்கீடு, அம்பேத்கர் புத்தத்துக்கு மாறிய காலகட்டத்தில் புத்த தலித்துகளுக்கு கொடுக்கப்படவில்லை என்பதே உண்மை. மாறாக அம்பேத்கர் மறைந்து 34 ஆண்டுகளுக்குப்பின் 1990-ம் ஆண்டு மத்திய அரசு பௌத்தத்துக்கு மாறிய தலித்துகள் சமூக, பொருளாதாரத்தில் மேம்படாததைக் கண்டு அம்மக்கள்மீது கருணை பாராட்டி பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டை புத்த தலித்துகளுக்கும் கொடுக்கவேண்டும் என அரசாணை பிறப்பித்தது. புத்தத்துக்கு மாறினால் இந்த 6 லட்சம் மக்களும் அனுபவித்துக் கொண்டிருந்த இடஒதுக்கீட்டை இழந்துவிடுவார்கள் என்று தெளிவாகத் தெரிந்தும் பேரறிவுள்ள அம்பேத்கர் ஏன் இந்த தீர்மானத்தை எடுத்தார்? தனது இந்த அதிரடித் தீர்மானத்தால் 6 லட்சம் மக்களுக்கு நஷ்டமல்லவா? அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுமல்லவா? என்று அவர் ஏன் யோசிக்கவில்லை? அவர் அந்த தீர்மானத்தை சிந்திக்காமல் எடுத்துவிட்டாரா? இல்லவே இல்லை. அவர் சாதி பெயர்களிலிருந்தே மக்களை விடுவிக்க விரும்பினார். இதனாலேயே அம்பேத்கர்மீது எனக்கு ஆழ்ந்த மரியாதை உருவாகியது. அவர் மக்களுடைய சாதியின் பெயரைச் சொல்லி கிடைக்கும் சலுகைகள் மூலம் வரும் பொருளாதார உயர்வைவிட, சமூக விடுதலையால் வரும் சுய மரியாதையை மேன்மையாகக் கருதினார். அது அவருடைய தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது. அவர் பணத்தைவிட தன்மானத்தை பெரிதாக மதித்த யதார்த்தவாதி. இன்றைய மதவாதிகள், அரசியல்வாதிகளைப்போல அவர் சந்தர்ப்பவாதியாக வாழவில்லை என்பதைத்தான் நாம் இதன்மூலம் தெளிவாக கண்டுபிடிக்கிறோம்.
அம்பேத்கர் வாழ்ந்த நாட்களில் இந்தியாவை அரசாட்சி செய்துகொண்டிருந்த வெள்ளைக்காரர்கள் மது அருந்தும் பழக்கம் உடையவர்களாக இருந்ததும், அவர்களுடைய பாலியல் முறைகேட்டு வாழ்வியலும் அம்பேத்கர் கிறிஸ்தவத்தை நிராகரிக்க காரணங்களாக இருந்தன என்று அம்பேத்கர் தன் நூல்களில் குறிப்பிடுகிறார்.