பதில்: கிறிஸ்தவ சாதிமறுப்பாளர் இயக்கம் என்னும் அமைப்பு, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் (மாற். 16:15) என்று கிறிஸ்து கட்டளையிட்டதை நம்பும் கிறிஸ்தவ விசுவாசிகளுக்குரியது. இயேசு கிறிஸ்து பாவிகளுக்கு இலவசமாக பாவமன்னிப்பு கொடுத்து, பாவத்தின் வலிமையிலிருந்தும், சாபத்திலிருந்தும் அவர்களை விடுவித்து அவர்களுக்கு நிலைவாழ்வு கொடுக்கிகிறார் என்பதே நற்செய்தி. அதைத்தான், “பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார்” (1திமொ. 1:15) என்ற இறை வசனத்தின்மூலம் அறிகிறோம். அந்த மீட்பை எல்லாரும் பெறவேண்டும் என்று கிறிஸ்து விரும்புகிறார். ஏனெனில், இயேசு மட்டும்தான் பரலோகத்துக்குப் போகும் ஒரே வழி (யோவா. 14:6, தி.ப. 4:12) என்று மறைநூல் கூறுகிறது. அதனால்தான், எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார் (1திமொ. 2:4) என்ற இறை உண்மையை திருத்தூதர் பவுல் அறிவிக்கிறார். “மனம்மாறத் தேவையில்லாத 99 நேர்மையாளர்களைவிட, மனம் மாறிய ஒரு பாவியைப் பற்றி விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்” (லூக். 15:7) என்று கிறிஸ்து கூறுகிறார். மேற்கண்ட இறைவார்த்தைகளை உள்ளடக்கிய மறைநூலை அடிப்படையாகக் கொண்டதே கிறிஸ்தவ சாதிமறுப்பாளர் இயக்கம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை மீட்பராக ஏற்றுக்கொண்டவர்கள், சக மனிதர்கள் எல்லாரும் மீட்கப்படவேண்டும் என்னும் ஏக்கமுடையவர்களாகவும், கிறிஸ்து தரும் ஆன்ம மீட்பை அறிமுகப்படுத்தவேண்டும் என்ற கடமையுணர்வு உடையவர்களாகவும் இருக்கவேண்டும். நீங்கள் பேசுவதைப் பார்த்தால் உங்களுக்கு கிறிஸ்து தரும் மீட்பின்மீது நம்பிக்கை இருப்பதுபோல் தெரியவில்லை. அதனால்தான் அம்பேத்கரும் 6 லட்சம் மக்களும் புத்தத்துக்கு போகட்டும் என்று மெத்தனமாக சொல்கிறீர்கள்.
இந்தியாவில் இந்தியர்கள் அவரவர் மதங்களை பின்பற்றிக்கொண்டிருந்தபோது இஸ்ரயேல் நாட்டிலிருந்து புனித தோமையார் இந்தியாவுக்கு வந்து இந்தியர்களில் பலரை கிறிஸ்தவத்துக்கு மாற்றியது சரியா? தவறா? அவரவர் மதத்தை அவரவர் பின்பற்றட்டும் என்று நீங்கள் சொல்ல வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். அப்படியானால், இந்தியாவிலுள்ள சமூக விரோதிகளால் தோமையார் ஈட்டியால் குத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இந்தியர்கள் ஏற்கெனவே பின்பற்றிக்கொண்டிருந்த ஆன்மீகம் தவறு என்று சுட்டிக்காட்டி எதிர்ப்பை ஏன் சம்பாதித்தார்? உங்கள் அபிப்பிராயம் என்ன சகோ?