072) இயேசு தன்னை கடவுளின் மகன் என்று சொன்னதால்தான் அம்பேத்கர் கிறிஸ்தவத்தைப் புறக்கணித்தார்.

“இந்துத்துவ குடும்பத்தில் பிறந்த அம்பேத்கர் பல எதிர்ப்புகளையும், மிரட்டல்களையும் சந்தித்தாலும், இந்துத்துவத்தை புறக்கணித்து, 6 லட்சம் ஒடுக்கப்பட்ட இந்துக்களோடு புத்தத்துக்கு மாறினார். அன்பின் புகலிடமாகிய கிறிஸ்துவிடம் அவர்கள் வராதது ஏன்? _”அதற்குக் காரணம் கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதிப் பாகுபாடுகளல்ல; இயேசு கிறிஸ்து தன்னை ‘தேவனுடைய மகன்’ என்று சொன்னதுதான்”_ என்று சில கிறிஸ்தவ சாதி உணர்வாளர்கள் கருத்து சொல்கிறார்கள்.
இயேசு கிறிஸ்து கடவுளின் மகன் என்ற கருத்தை அம்பேத்கர் ஏற்றுக்கொள்வதில் அவருக்கு என்ன சிக்கல் ஏற்பட்டது? அந்த கருத்து எந்த வகையில் சமுதாயத்தை எதிர்மறையாக பாதிக்கும் என அம்பேத்கர் நினைத்திருக்கக்கூடும்? என்பதை கிறிஸ்தவர்கள் திறந்த மனதோடு ஆய்வு செய்யவேண்டும்.
கடவுள் என்று ஒருவர் அல்லது பலர் இருப்பதிலோ, அல்லது கடவுளுக்கு மகனோ, அவதாரமோ, அல்லது தூதரோ இருப்பதிலோ அம்பேத்கருக்கு என்ன பிரச்சனை? உலகை படைத்து, காத்து, நீதி செய்ய ஒரு சக்தி இருக்கிறது என்ற கோட்பாடு தன் சாதி ஒழிப்பு முயற்சியில் அம்பேத்கருக்கு எந்த விதத்தில் தீமையை விளைவிக்கும்? அம்பேத்கருடைய நோக்கம், சாதி இழிவிலிருந்து விடுதலை அடைவதா? அல்லது கடவுளை எதிர்ப்பதா? இந்துத்துவத்தில் சாதி இல்லாவிட்டால் அம்பேத்கர் இந்துத்துவத்தைவிட்டு வெளியேறியிருப்பாரா? இவைகளை நாம் நிதானமாக ஆய்வு செய்யவேண்டும்.
உண்மையை வெளிப்படையாகச் சொன்னால், அம்பேத்கருக்கும் சரி, பெரியாருக்கும் சரி, அல்லது அவர்களைப் போன்ற சமூக ஆர்வலர்கள் யாருக்கும் சரி. கடவுள் ஒரு பிரச்சனையே இல்லை. யாரும் பிறவியிலேயே நாத்திகரும் அல்ல; ஆத்திகருமல்ல. கடவுள் கொள்கைக்குள் மறைந்திருக்கும் சாதி, இன, மொழிப் பாகுபாட்டு மனப்பான்மையே அம்பேத்கர் போன்ற மனிதநேயவாதிகளுக்குப் பிரச்சனை என்று அவர்கள் பதிவு செய்துள்ளனர். அம்பேத்கர் என்று மட்டுமல்ல; எந்த கடவுள் மறுப்பாளரும் கடவுளிடமுள்ள வெறுப்பில் கடவுளை மறுக்கவில்லை. கடவுளின் பெயரில் அரங்கேறும் அநியாயங்களிலிருந்து தங்களையும் விடுவித்து, சக மனிதர்களையும் காப்பாற்றுவதற்காகத்தான் விரக்தியில் கடவுள் மறுப்பு என்னும் முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். இதை நடுநிலையோடு சிந்தித்துப் பார்க்க வேண்டும். வெறுமனே அம்பேத்கரை ஒரு கடவுள் விரோதியாக சித்தரிப்பதில் அர்த்தமில்லை. “மனிதர்களுக்குள் பாகுபாடுகளை கற்பிக்கும் சாதியத்தை கடவுள் உருவாக்கியதாக மதநூல்கள் சொல்வதால்தான் நான் கடவுளை மறுக்கிறேன்” என்று பெரியாரும் சொன்னார். அது பகுத்தறிவுப் பார்வையில் ஏற்புடைய கூற்றுதானே! மனித நேயமுடையவர்கள் யாரும், சாதி பாகுபாடுகளைக் கற்பிக்கும் கடவுளை கடவுளாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மையல்லவா!
அம்பேத்கர் இந்துவாக இருந்தபோது கடவுள்தான் சாதி அடிப்படையில் மக்களை பிரித்தே படைத்தார் என்ற கொள்கைதான் அவருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது.
பிராமணர்கள் தங்களை ‘கடவுளுக்கு சமமானவர்கள்’ என்று பிரகடனம் செய்து மக்களை தங்கள் வசப்படுத்தி, ஆன்மீக அடிமைகளாக வைத்திருந்தனர். இந்து மக்கள் பிராமணர்களை கடவுளுக்கு சமமானவர்களாகத்தான் நம்புகிறார்கள். ஆக, கருத்தியல் ரீதியாக பிராமணர்கள்தான் அம்பேத்கருக்கு மிகப்பெரிய எதிரிகளாக இருந்தனர்.
சாதியம் எவ்வளவு நாசகரமான கொள்கையாக இருந்தாலும், அது கடவுளால் உருவாக்கப்பட்டதாக பிராமணர்களால் இந்து மக்கள் கற்பிக்கப்பட்டிருந்ததால், மக்களை அந்த நம்பிக்கையிலிருந்து விடுவிப்பது அம்பேத்கருக்கு கடினமாக இருந்தது. ஆனாலும், அவர் இந்து கடவுள்கள் மற்றும் வருணாசிரமத்தின் பிடியிலிருந்து ஒடுக்கப்பட்ட இந்துக்களை விடுவிக்க அரும்பாடுபட்டார் என்பது அனைவரும் அறிந்த வரலாற்று உண்மை.
சாதியத்தின் ஆணிவேர் ‘மனித கடவுள்கள்’ என்று தங்களை பிரகடனம் செய்யும் பிராமணர்கள் என்று அம்பேத்கர் உய்த்துணர்ந்தார். ஆகையால், அம்பேத்கருக்கு தெரிந்தவரை ‘மனித கடவுள் கொள்கையை’ முழுக்க முழுக்க ஒரு சமூகவிரோத கொள்கையாகவே கருதினார். ஆனால், கிறிஸ்தவம் கூறும் கடவுள் கொள்கையையும் அவர் வெறுத்தார். அதற்கு முழுமையான காரணம், இயேசு கிறிஸ்து தன்னை கடவுளின் மகன் என்று கூறியதல்ல. கிறிஸ்தவர்களிடைய சாதி உணர்வு தலைவிரித்து தாண்டவமாடுவதாலும், அந்த கொடுமையை நியாயப்படுத்த, ஆபிரகாமின் வீட்டுத் திருமணங்கள் போன்ற சம்பவங்கள் சார்ந்த மறைநூல் வசனங்களை கிறிஸ்தவ போதகர்கள் மேற்கோள் காட்டுவதாலும், சாதியம் என்பது கிறிஸ்தவர்களின் அதிகாரபூர்வமான கொள்கை என்று அம்பேத்கர் நினைத்ததாலும்,எ இயேசுவும் பிராமணர்களைப்போல தன்னை “கடவுளின் மகன்” என்று அவரே சொல்வதால் அந்த கொள்கையும் ஆபத்தானதுதான் என்று அம்பேத்கர் நினைத்தார். ஏனென்றால், இயேசுவை கடவுளாக வணங்கும் கிறிஸ்தவர்களும் கிட்டத்தட்ட பிராமணர்களை வணங்கும் இந்துக்களைப் போலவே சாதி ஏற்றத்தாழ்வு கொள்கையை தீவிரமாக கடைபிடித்துக்கொண்டிருந்தனர்.
பலர் கிறிஸ்தவத்தை தங்கள் வாழ்வியல் கொள்கையாகத் தேர்வு செய்யவில்லை. அதே காரணத்தால்தான் அம்பேத்கரும் கிறிஸ்தவத்தை நிராகரித்தார் என்பதே அப்பழுக்கற்ற உண்மை என்று உறுதியாக நம்புகிறேன். ஆனால் மக்கள், “கிறிஸ்தவர்களை நீங்கள் முன்மாதிரியாகப் பார்க்காமல் கிறிஸ்துவை அல்லவா பார்த்திருக்கவேண்டும்!” என்று சொன்னால், அம்பேத்கரால் பதில் சொல்ல முடியாது. ஆகவே, கிறிஸ்துவின் கடவுள் தன்மையை மறுதலிப்பதாக லாவகமாகக் கூறி சமாளித்து அம்பேத்கர் புத்தத்துக்கு நகர்ந்துவிட்டார் என்பதே நாம் நிதானிக்கவேண்டிய உண்மை.
மேலைநாட்டு அருட்பணியாளர்கள் இந்தியாவுக்கு வந்து கிறிஸ்துவை அறிவித்தபோது ஆதிக்க சாதியினரால் ஒடுக்கப்பட்டு கிடந்த நம் மூதாதையர்கள், மேலைநாட்டினரின் அன்பைப் பார்த்துக் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார்களேதவிர, இயேசுதான் கடவுளா? அல்லது அவர் கடவுளின் மகனா? என்று யாரும் வேத ஆராய்ச்சி செய்யவில்லை.
அன்று நம் மூதாதையர்களுக்கு அவ்வளவு கல்வியறிவு இல்லை. அதனால்தான் ஏமாற்றப்பட்டுவிட்டார்கள் என்று சிலர் சொல்லலாம். அப்படியானால் இவ்வளவு விஞ்ஞானம் வளர்ந்தபின்பும், கடவுளுக்கு மனைவி, மகன், மருமகள், பேரன், பேத்தி, தந்தை, தாய், மாமன், மாமி போன்றோர் உண்டு என்னும் கொள்கையை கல்வியறிவுடைய இந்துக்கள்கூட இன்றும் புறக்கணிக்காத காரணம் என்ன? கடவுளுக்கு பல மனைவிகள் இருப்பதோ, தங்கள் ஆன்மீக தலைவர்கள் நிர்வாண சாமியார்களாக இருப்பதோகூட அவர்களுக்கு பிரச்சனை இல்லை. ஏன்? அவர்கள் விரும்பும் வாழ்க்கையை அவர்களுடைய கடவுள் கொடுக்கும்போது அவர்கள் தங்கள் சாமிகளை ஏன் புறக்கணிக்கவேண்டும்? இம்மைக்குரிய எல்லா ஆசீர்வாதங்களையும், மறுமையைப் பற்றிய நம்பிக்கையையும் அவர்களுடைய கடவுள்கள் கொடுக்கும்போது எதற்காக அவர்கள் தங்கள் கடவுள்களை புறக்கணிக்கவேண்டும்? யோசித்துப் பாருங்கள்.
கோடிக்கணக்கான பிறமத மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக கிறிஸ்தவ திருச்சபைகளுக்கு வருகிறார்கள். அவர்களில் பலர் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறார்கள். அதன்பின் கிறிஸ்தவ சபையின் போதகர்கள், *”இயேசுவே மெய்யான தெய்வம்”* என போதிக்கிறார்கள். அவர்களுக்கு அற்புதம் நடந்ததால் அதன் அடிப்படையில் இயேசுவைக் கடவுளாக ஏற்றுக்கொள்கிறார்கள்.
பலனடைந்தவர்களில் ஒருவருடைய உறவினர், “இயேசு மட்டும்தான் நிஜமான கடவுள் என்று எப்படிக் கூறுகிறீர்கள்?” என்று இவரிடம் கேள்வி கேட்க, “இயேசுவின் பெயரில் அற்புதம் நடந்ததால் அவரை கடவுளாக வணங்குகிறேன்” என்று சொல்கிறார். “இந்து கோயிலிலும் அற்புதம் நடக்கிறதே!” என்று உறவினர்கள் சொல்கிறார்கள். “இயேசுதான் நிஜமான கடவுள்” என்று பைபிள் கூறுகிறதே!” என்று புதிய கிறிஸ்தவர் பதில் கூறுகிறார். “அப்படி பைபிளில் எங்கே இருக்கிறது காட்டுங்கள்!” என்று உறவினர்கள் கேட்க, அந்த வாசகம் பைபிளில் எங்கே எழுதப்பட்டிருக்கிறது என்று இவருக்குத் தெரியாததால், சபைப் போதகரிடம் தொலைபேசிமூலம் அந்த விபரத்தைக் கேட்கிறார். “1யோவான் 5:20” என்று போதகர் கூற, அதை உறவினருக்கு இவர் தெரிவிக்கிறார். இதுதான் நடைமுறை உண்மை.
இந்த சம்பவத்தில், அந்த புதிய கிறிஸ்தவர், இயேசுதான் நிஜமான கடவுளா என்று இறையியல் ஆராய்ச்சி செய்துதான் கிறிஸ்தவ சபைக்குப் போனாரா? இல்லை. இவருக்கு அற்புதம் நடந்ததால் இயேசுவை கடவுள் என்று ஏற்றுக்கொள்கிறார். கிறிஸ்தவம் தனக்கு பயனுள்ளதாக இருந்ததால் கிறிஸ்தவக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்கிறார்.
வேதாகமத்திலுள்ள எல்லாவற்றையும் தெளிவாக தெரிந்துகொண்டபின்தான் இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டேன் என்று யாரும் கூறி நான் கேள்விப்பட்டதுமில்லை. ஆனால், அன்றைய அருட்பணியாளர்களுடைய *அன்புவயப்பட்டு* மீட்பை ஏற்றுக்கொண்டனர் என்பதே உண்மை. ஏனெனில் அன்புக்குமுன் அறிவு அடிபணிந்துவிடுகிறது அல்லவா!
என்னுடைய தந்தையாருக்கு வந்த ஒரு நோய்க்காக ஒரு பாஸ்டர் பிரார்த்தனை செய்தபோது என் தந்தை முழுவதும் குணமடைந்தார். அதுவரை கடவுள் உண்டா? கடவுளுக்கு மகன் உண்டா? என்று எதுவும் தெரியாதிருந்த நான் என் தந்தையார் குணமடைந்தவுடன், இயேசுவே இரட்சகர் என்று அந்த பாஸ்டர் சொன்னதை அப்படியே நம்பிவிட்டேனே! நான் விரும்பியது கிடைத்தவுடன் கடவுள் என்று ஒருவர் உண்டா? அவருக்கு மகன் உண்டா? என்று நான் ஆராய்ச்சியே செய்யவில்லை. அப்படியே கடவுளின் அற்புத சக்தியை உணர்ந்து கடவுளை ஏற்றுக்கொண்டேன். அம்பேத்கரும் அதற்கு விதிவிலக்கல்ல.
இயேசுவை பின்பற்றியவர்கள் அவரை தங்கள் குருநாதனாக எப்படித் தேர்வு செய்தார்கள் என்பதை நாம் ஆராய்வோம். உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர் (யோவான் 6:2) என்று யோவான் பதிவு செய்கிறார்.
இதுவே (தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய புதுமை) இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர் (யோவா. 2:11) என்று சரித்திரம் தெளிவுபடுத்துகிறது. இங்கே இயேசு மக்களுக்கு பயனுள்ள அற்புதங்களை செய்ததால்தான் அவருடைய சீடர்களே அவர்மேல் நம்பிக்கை வைத்தனர் என்று தெளிவாக அறிகிறோம்.
இரவு முழுவதும் மீன் பிடிக்க முயற்சி செய்தும் ஒரு மீன்கூட அகப்படாத நிலையில் விரக்தியோடிருந்த பேதுரு, இயேசு கிறிஸ்துவின் சொற்படி தன் வலையை வலப்புறம் போட்டதால் தாராளமாக மீன் கிடைத்தது. அதனால்தான் பேதுருவால் இயேசுவை நம்பமுடிந்தது. இயேசு மக்களுக்குப் பயனுள்ள அற்புதம் செய்தபின், “நானும் பிதாவும் ஒன்றல்ல, நான் ஒரு தீர்க்கதரிசி மட்டும்தான்” என்று சொல்லியிருந்தாலும் அதையே மக்கள் நம்பியிருப்பார்கள்.
நாம் குடிக்கும் பாலில் *’லாக்டிக் அமிலம்’* இருக்கிறது; *C3H6O3* என்பது லாக்டிக் அமிலத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு. எலுமிச்சை பழச்சாற்றில், *’சிட்ரிக் அமிலம்’* இருக்கிறது; *C6H8O7* என்பது லாக்டிக் அமிலத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு. இந்த அமிலங்களின் பெயர்களோ, அவற்றின் மூலக்கூறு வாய்ப்பாடுகளோ நம் மூதாதையருக்கு தெரியாமலேயே அவர்கள் அவற்றை குடித்தார்கள். ஏன் அவர்களுக்கு அந்த விபரங்கள் தேவைப்படவில்லை? அந்த உணவுகள் அவர்களுடைய உடலுக்கு பயனுள்ளவையாக இருந்ததால் அவற்றுக்குள் இருக்கும் வேதிப்பொருட்களைப் பற்றி அவர்கள் நுண்ணாராய்ச்சி செய்யாமலேயே நுகர்ந்தார்கள்.
“நான் குடிக்கும் தண்ணீரில் (H2O), 2 ஹைட்ரஜன் அணுவும், ஒரு ஆக்சிஜன் அணுவும் இருப்பதால் நான் தண்ணீர் குடிக்கமாட்டேன். 7 ஆக்சிஜன் அணு இருந்தால்தான் குடிப்பேன்” என்று யாரும் அடம்பிடித்ததில்லை.
நாம் பயணிக்கப்போகும் பேருந்தை ஓட்டும் ஓட்டுனருடைய ஓட்டுனர் உரிமத்தை நாம் பரிசோதித்து பார்க்க முயற்சிப்பதில்லை. காரணம் அவர் பேருந்தை நேர்த்தியாக ஓட்டுபவர் என்று அந்த போக்குவரத்து நிறுவனத்திடம் நிரூபித்ததால் அந்த பேருந்தின் ஓட்டுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பெரும்பாலும் எல்லா வண்டிகளும் பாதுகாப்பாக ஓடுவதால், அந்த நிறுவனம் தன் ஓட்டுநர்களின் தகுதியை ஒழுங்காக பரிசோதிக்கிறது என்று நாம் நம்புகிறோம்.
பொதுவாக பயனுள்ள பொருட்களை ஆராய்ச்சி செய்யாமலேயே மக்கள் நுகர்வார்கள். வாழ்க்கைக்கு பயனுள்ள தத்துவத்தை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், அது தீங்கு இழைப்பதென்றோ, பயனற்றதென்றோ தெரிந்தபின் அதை புறக்கணிப்பார்கள். அதுபோல *அம்பேத்கர் தான் தேடிய சகோதரத்துவத்தை கிறிஸ்தவர்களிடம் கண்டடைந்திருந்தால் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றிருப்பார் என்பதே யதார்த்தம்.* அதாவது அம்பேத்கர் எதிர்பார்த்த சமூக விடுதலையை கிறிஸ்தவர்கள் கொடுத்திருந்தால், இயேசுவை கடவுளின் அவதாரம் என்று மட்டுமல்ல இயேசு கிறிஸ்து *கடவுளின் பேரன்* என்று பைபிளில் எழுதப்பட்டிருந்தாலும் அம்பேத்கர் ஆராய்ச்சி செய்யாமலேயே அந்த கருத்தை ஏற்றுக்கொண்டிருப்பார்.
அம்பேத்கருக்கும் கடவுளுக்கும் அடிப்படையில் எந்த சண்டையும் இல்லை. அம்பேத்கர் பரம்பரை நாத்திக வெறியருமல்ல. மாறாக கடவுளின் பெயரால் உருவாக்கப்பட்டிருக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகளால்தான் அவர் கடவுளை மறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்துத்துவத்தில் சாதியம் இல்லாதிருந்தால், சகோதரத்துவமும் சமூகநீதியும் இருந்திருந்தால் இந்துத்துவம் கூறும் “33 கோடி தேவர்கள்” என்ற ஆன்மீகத்தைவிட்டு அம்பேத்கர் விலகியிருக்கவேமாட்டாரே!
அவர் விரும்பிய சமத்துவம் கிறிஸ்தவர்களிடம் கிடைக்காததாலும், கிறிஸ்தவர்களின் சாதி பாகுபாடுகள் நாட்டுக்கு ஆபத்து என்று உணர்ந்ததாலும் கிறிஸ்தவத்தை அவர் புறக்கணித்தார் என்பதே தீர்க்கமான உண்மை. ஆனால், *அவர் அதை புறக்கணித்த தீர்மானத்துக்கு வலுசேர்க்க இயேசுவின் தெய்வத்துவத்தை நிராகரித்தார்* என்றே நான் உறுதியாக நம்புகிறேன். சாதிப் பிரிவினைகளைக் கற்பிக்கின்ற, இயற்கைக்கு அப்பாற்பட்டு இயங்கும் சக்தி என்று ஒன்று உண்டு என்று நம்பினால் சாதி உண்டு என்றும் நம்பவேண்டியிருக்கும் என்று சிந்தித்து அவர் புறக்கணித்தார்.
எனவே, ஒடுக்கப்பட்ட இந்துக்களை ஒரு சிறைச்சாலையிலிருந்து வேறொரு சிறைச்சாலைக்கு கொண்டுசெல்வதில் அர்த்தமில்லை என்று முடிவு செய்துதான் அவர் கிறிஸ்தவத்தைப் புறக்கணித்தார் என்பதே யதார்த்த உண்மையாகும்.
இயேசு தன்னை கடவுளின் மகன் என்று சொன்னாலும் கிறிஸ்தவர்கள் சாதியற்றவர்களாக இருந்திருந்தால் அம்பேத்கர் கிறிஸ்தவத்தைத் தேர்வு செய்திருப்பார்.
பலர் ஒரு வங்கியிலிருந்து வாங்கிய பெருங்கடனை அந்த வங்கி தள்ளுபடி செய்ய தீர்மானித்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். கடன் வாங்கியோர் வங்கிக்கு வந்து ஒரு கையெழுத்து மட்டும் போட்டால் அவர்கள் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படும் என்று அந்த வங்கி அறிவித்தால் அது எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி! நிஜமாகவே அந்த வங்கியில் கடன்பட்ட ஒரு சிலர் விடுவிக்கப்பட்டாலே, மீதியுள்ளவர்களும் கையெழுத்து போட்டு கடனிலிருந்து விடுதலை அடைவார்களே! அதேபோல, இயேசு கொடுக்கும் இலவச மீட்பும், அவருடைய கொள்கையும் கிறிஸ்தவர்களுடைய பண்பாட்டை கணிசமாக மேம்படுத்தியிருந்தால், அதாவது இயேசுவின் பக்தர்களை சாதியற்றவர்களாக மாற்றியிருந்தால் இயேசு தரும் பாவமன்னிப்பை யார் புறக்கணித்தாலும் சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்டோர் புறக்கணித்திருக்கமாட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.
ஒரு கொள்கை ஒருவருக்கு நிஜமாகவே பயனுள்ளதென்றால் அவர் ஏன் அதை புறக்கணிக்கவேண்டும்? கிறிஸ்தவ கடவுள் கொள்கையால் சாதியத்தை ஒழித்து, சகோதரத்துவத்தை, சமத்துவத்தை நிலைநாட்ட முடிந்திருந்தால் அம்பேத்கர் ஏன் கடவுளை மறுக்கவேண்டும்? அம்பேத்கரைப் பொறுத்தவரை கடவுள் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, அவருடைய முழுமுதல் நோக்கம் வருணாசிரம அடிமைத்துவத்திலிருந்து விடுதலை அடையவேண்டும். அதை கடவுளால் நடைமுறைப்படுத்த முடியும் என்று அவருக்குப் புரிந்திருந்தால் எந்த மதமாக இருந்தாலும் அவர் ஏற்றுக்கொண்டிருப்பார் என்பதல்லவா நடைமுறை உண்மை!