073) சாதி பார்க்காமல் திருமணம் செய்தால் என் பெற்றோரும், உறவினரும், நண்பரும் என்னை வெறுத்துவிடுவார்களே!

பதில்: என் மாட்சிக்காக நான் படைத்த, உருவாக்கிய, உண்டாக்கிய என் பெயரால் அழைக்கப்பெற்ற அனைவரையும் கூட்டிக்கொண்டுவா!” (எசாயா 43:7) என்று கடவுள் கூறுகிறார். அதாவது மனிதன் கடவுளின் மாட்சிமைக்கென்று படைக்கப்பட்டுள்ளான் என்று அறிகிறோம்.
_நீங்கள் உண்டாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் *கடவுளுடைய மாட்சிக்காகவே* செய்யுங்கள் (1கொரி. 10:31)_ என்று திருத்தூதர் பவுல் அதை நினைவுறுத்துகிறார். அதாவது நாம் எதைச் செய்தாலும் அதன்மூலம் கடவுளுக்கு மாட்சிமை கிடைக்குமா என்று பார்த்து பார்த்து செய்யவேண்டும் என்று நாம் கற்றுக்கொள்கிறோம்.
_கிறிஸ்து உங்களை ஏற்றுக் கொண்டது போல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது *கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள்* (உரோ. 15:7)_ என்றும் கூறுகிறார். இங்கே கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல நாம் பிறரை ஏற்றுக்கொண்டால் கடவுளுக்கு மாட்சிமை கிடைக்கும் என்று அறிகிறோம். கிறிஸ்து நம்மை ஏற்றுக் கொண்டதைப் போல நாமும் பிறரை ஏற்றுக் கொள்வோமானால் பிறரை சாதி அடிப்படையில் புறக்கணிக்க முடியாதே! ஆக, கிறிஸ்துவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மக்களை இந்துத்துவ சாதியின் அடிப்படையில் புறக்கணிப்பது கடவுளின் பெயருக்கு இழுக்கை உருவாக்குமேதவிர அவருக்கு மாட்சியைக் கொண்டுவராது.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து,
_”என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது (லூக். 14:26)_ என்று கூறுகிறார். ஏனென்றால், அவர் நம்மை படைத்தவர் மட்டுமல்ல. நமக்காக தன் உயிரையே கொடுத்த பேரன்புள்ளம்கொண்ட இறைவன். _நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார் (உரோ. 5:8)._ ஆகவே, இயேசு கிறிஸ்து நமது எல்லா மரியாதைக்கும் மேலான உச்சக்கட்ட மரியாதைக்கும், நமது எல்லா அன்புக்கும் மேலான உச்சக்கட்ட அன்புக்கும் தகுதியானவர் என்று புரிந்துகொள்ளவேண்டும்.
கடவுள் ஏதேன் தோட்டத்திலுள்ள எல்லா கனிகளையும் உண்ணலாம் என்றும், நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை மட்டும் உண்ணக்கூடாது என்றும் ஆதாமுக்குக் கட்டளையிட்டார். ஆனால் ஆதாமுக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட மனைவி ஏவாளின் வார்த்தைக்கு ஆதாம் முக்கியத்துவம் கொடுத்து, கீழ்படிந்து, கடவுளை அவமதித்து விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்டு சாபத்தை சம்பாதித்தார். யாருக்கு ஆதாம் கீழ்படிந்தாரோ அவரையும் சாபத்துக்குள்ளாக்கினார். ஆகவே நாம் கடவுளையும் மனிதனையும் நேசிக்கவேண்டும் என்ற கட்டளையைப் பெற்றிருந்தாலும், மேலான அன்பும், உயர் மரியாதையையும் கடவுளுக்கே கொடுக்கவேண்டும்.
நன்றிப்பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர் (தி.பா. 50:23) என்று மறைநூல் கூறுகிறது. அதாவது கடவுள் நமக்குச் செய்த உதவிகளுக்காக நாம் கடவுளுக்கு நன்றி செலுத்தும்போது அவர் மாட்சியடைகிறார் என்று தாவீது அரசர் கூறுகிறார். அப்படி நன்றி சொல்வதை நம் சாதி உணர்வுள்ள உறவினர்கள் விரும்பவில்லை என்பதற்காக நமக்கு உதவி செய்த கடவுளின் அன்பை புறக்கணிக்கமுடியாது.
_திருச்சட்ட அறிஞர் ஒருவர் இயேசுவைச் சோதிக்கும் நோக்கத்துடன், “போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்டார். அவர், “உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.” இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. “உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக” என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை (மத். 22:35-39)_ என்று கிறிஸ்து அறிவுறுத்துகிறார். “உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!” (இணை. 6:5) என்று கடவுள் அறிவுறுத்துகிறார்.
_கடவுள் சபிக்காதவனை நான் எப்படிச் சபிப்பேன்? கடவுள் பழித்துரைக்காதவனை நான் எப்படிப் பழித்துரைப்பேன்? (எண். 23:8)_ என்று ஒரு இறைபக்தர் கூறுகிறார். கடவுளால் கீழ்சாதி என்று புறக்கணிக்கப்படாதவர்களை நாம் கீழ்சாதி என்று புறக்கணிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? ஏற்கெனவே, இந்துத்துவத்தால் புறக்கணிக்கப்பட்டு காயப்பட்ட விலையேறப்பெற்ற ஆன்மாக்களை, கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட மனிதர்களை நாம் சாதியின் அடிப்படையில் வெறுப்பது கிறிஸ்துவையே வெறுப்பதற்கு சமமாகும்.
_நீங்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல; ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள். அதற்குக் கைம்மாறாக ஆண்டவர் உங்களுக்கு உரிமைப்பேறு அருளுவார் என்பது தெரியும் அல்லவா? நீங்கள் உங்கள் ஆண்டவர் கிறிஸ்துவுக்காகவே வேலை செய்யுங்கள் (கொலோ. 3:23,24)_ என்ற வசனங்களின்படி நாம் மனிதருக்காக அல்ல; கடவுளுக்காக பணி செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம் என்று அறிகிறோம்.
_”மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்? (தி.ப. 5:29)_ என்று திருத்தூதர்கள் கூறுகிறார்கள்.
மேற்கண்ட இறை வார்த்தைகளிலிருந்து நாம் கடவுளுக்கு எல்லா முக்கியத்துவத்துக்கும் மேலான முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று அறிகிறோம். அப்படி கடவுளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதனால் சாதி உணர்வுடைய நம் உறவினர்கள் நம்மை வெறுக்கும் நிலை வந்தால், அதை நாம் ஒரு பொருட்டாக எடுக்கமுடியாது. நமக்காக தன் உயிரைக் கொடுத்த நித்திய நேச மீட்பரை சாதி உணர்வுடைய நம் உறவினர்களுக்காக விட்டுக்கொடுக்கமுடியாது. நம் உறவினர்களையும் நாம் நேசிக்கவேண்டும் என்பது ஏற்புடைய கூற்றாக இருந்தாலும், நாம் சாதி பார்க்காமல் திருமணம் செய்வதன் காரணமும் பிறர்மீது நாம் வைத்திருக்கும் அன்பின் அடையாளமல்லவா! சாதி உணர்வுடைய நம் உறவினரை மகிழ்விப்பதற்காக, நமக்காக உயிரையே தந்த கடவுளை நாம் அவமானப்படுத்துவது எப்படி சரியாகும்?