074) நான் சாதி மறுப்பாளர்தான். ஆனால் நான் ஒரு ஏழை. எனவே, நான் இந்து என்று சொல்லி இடஒதுக்கீடு வாங்குவதில் என்ன தவறு இருக்கிறது? யாக்கோபு பொய் சொன்னாரே!

பதில்: யாக்கோபு பொய் சொல்லி தன் அண்ணனுடைய புத்திர சுவீகாரத்தை *திருடினார்.* ஆதாம் *விலக்கப்பட்ட கனியை புசித்தார்.* நோவா குடித்துவிட்டு *போதையில் உருண்டார்.* லோத்து தன் மகள்களோடு *தவறான உடலுறவு கொண்டார்.* யூதா தன் மருமகள் தாமாரோடு *தவறான உடலுறவு கொண்டார்.* மோசே *கொலை* செய்தார். தாவீது உரியாவின் மனைவியை *கற்பழித்தார்.* அவர் உரியாவை சதி செய்து *கொன்றார்.* யூதாஸ் இயேசுவைக் *காட்டிகொடுத்தார்.* பேதுரு இயேசுவை *மறுதலித்தார்.* அவர் தலைமைக் குருவின் வேலைக்காரனுடைய *காதை வெட்டினார்.* பவுல் மார்க்குடன் *சண்டை போட்டார்.* தோமையார் இயேசுவை *சந்தேகப்பட்டார்.*
மேற்கண்ட பாவங்களை அவர்கள் செய்ததால் நாமும் செய்யலாமா?
அந்த பாவங்களெல்லாம் பாவம் இல்லை என்று சொல்லமுடியுமா?
_உலகப்போக்கிலான உங்கள் இயல்புக்குரிய பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், *சிலைவழிபாடான பேராசை* ஆகியவற்றை ஒழித்துவிடுங்கள் (கொலோ. 3:5)_ என்று பைபிள் சொல்கிறது. இங்கே, பண ஆசையை சிலைவழிபாட்டுக்கு சமப்படுத்திப் பேசுகிறார் தூய ஆவியார்.
_”நான் கிறிஸ்தவர் என்று அறிக்கையிட்டால், ₹30,000 வருமானம் தரும் என் அரசாங்க வேலையை இழக்க நேரிடுமே!”_ என்று கூறி, உயிர் கொடுத்து மீட்ட கடவுளுக்கு கிறிஸ்தவர்கள் துரோகம் செய்யும்போது, _”நான் இயேசுவை அறிக்கையிட்டால், ₹50,000 மாதச் சம்பளம் தரும் என் அரசாங்க வேலையை இழக்க நேரிடுமே!”_ என்று ஆஞ்சநேயர் கோயில் பூசாரி அச்சப்படுவதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? இயேசுவைவிட பணம்தான் முக்கியம் என்று வாழ்வது ஒரு முதிர்ந்த கிறிஸ்தவனுக்கே தவறாக தெரியவில்லையென்றால், சிலை வழிபாட்டின்மூலம் வரும் பணத்தைவிட இயேசுதான் முக்கியம் என்று சிலைவழிபாட்டுப் பூசாரிக்கு எப்படி புரியும்? கிறிஸ்தவனுக்கு பணஆசை என்பது சிலை வழிபாடு என்னும் பாவத்துக்கு நிகரானது என்று தெரியாவிட்டால், இந்துக்கள் தங்கள் சிலைவழிபாட்டை கடவுளுக்கு எதிரான பாவமாக எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?
ஒரு சிலைவழிபாட்டுக்காரர் மற்றொரு சிலைவழிபாட்டுக்காரரை எப்படி குறை சொல்லமுடியும்? ஒருவர் தன் கண்ணில் உத்தரம் இருக்கும்போது பிறருடைய கண்ணிலுள்ள தூசியை எடுக்க நினைப்பது எப்படி சாத்தியமாகும்?
திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை அலுவலகத்தில் இந்து தலித் என்று பொய் சொல்லி வாழ்ந்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை “இயேசு போதுமே…., எல்லாம் இயேசுவே….” என்று பாடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இந்து என்று பொய் சொல்லி கிடைத்த வேலையில் 60-வது வயது வரை வேலை செய்து, பணம் சம்பாதிப்பவரையே பரலோகம் ஏற்றுக்கொள்ளுமானால், இந்துக்களை ஏற்றுக்கொள்ளாதா? என்று இந்துக்கள் கேள்வி கேட்கமாட்டார்களா?
நண்பனிடம் தன் மதிப்பு குறைந்துவிடும் என்று நினைத்து பெற்ற தாயை வீட்டு வேலைக்காரி என்று சொல்லமுடியுமா? கிறிஸ்தவன் என்று அறிக்கையிடுவதால் இடஒதுக்கீடு கிடைக்காது என்பதால் உயிர் கொடுத்து மீட்ட இயேசுவை சார்ந்தவனல்ல என்று அறிக்கையிடுவது அவருக்கு செய்யும் துரோகமல்லவா?
_மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன். *மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்*
(மத். 10:32,33)_ என்று ஆண்டவர் தீர்க்கமாக கூறுகிறாரே! _நம் இயேசு நல்லவர். ஒருபோதும் கைவிடார்; ஒரு நாளும் விலகிடார்_ என்று பலர் பாடி கேட்டிருக்கிறோம். ஆனால், பண ஆசையால் கடவுளை மறுதலிக்கும் கொடிய குணம் படைத்த *கிறிஸ்தவனை கடவுள் மறுதலிப்பார்* என்றல்லவா வேதம் கூறுகிறது!
30 வெள்ளிக் காசுகளுக்காக தன்னை காட்டி கொடுக்கப் போகின்ற யூதாஸைப் பார்த்து, “யூதாசே, நீ செய்வது இன்னதென்று அறியாமல் செய்துவிட்டாய்; உனக்கு பணத்தேவை இருக்கும்; அந்த வெள்ளிக்காசுகளை செலவுசெய்” என்று கிறிஸ்து சொல்லவில்லை. மாறாக, “நீ பிறந்ததைவிட பிறவாமல் இருந்திருந்தால் நலமாய் இருந்திருக்கும்” என்று சொன்னார். அதே வார்த்தையை தான் இந்து என்று பொய் சொல்லி இட ஒதுக்கீடு வாங்கும் கிறிஸ்தவர்களை பார்த்தும் கர்த்தர் சொல்வார் என்பதே ஒரு கசப்பான உண்மை.
இந்து என்று பொய் சொல்வதை ஞானம் என்று சொல்வோரும் உண்டு. பேதுரு இயேசுவை பின்பற்றியிருக்காவிட்டால், அவரை தலைகீழாக சிலுவையில் அறைந்து கொன்றிருக்கமாட்டார்களே! *பேதுரு ஞானமில்லாமல் இயேசுவோடு இணைந்துவிட்டாரோ?* இயேசு கிறிஸ்துவின் திருத்தூதர்களில் இயேசுவோடு இணைந்திருக்காவிட்டால் யூதாஸ் நான்றுகொண்டு செத்திருக்கமாட்டார். திருத்தூதர்களில் யோவானையும் யூதாஸையும் தவிர மீதி அனைவரும் கொலை செய்யப்பட்டு இறந்தார்கள். அவர்கள் இயேசுவுடன் இணைந்திருக்காவிட்டால் அப்படி அகால மரணம் அடைந்திருக்கமாட்டார்களே! திருத்தூதர்கள் அறிவாளிகளா அல்லது முட்டாள்களா சொல்லுங்கள்!
இயேசுவை ஏற்றுக்கொண்டதால் கொலை செய்த கொடிய அரசுகளை திருச்சபை சந்தித்திருக்கிறது. பலர் தீக்கிரையாக்கப்பட்டுள்ளனர். பலர் சிங்கங்களுக்கு இரையாயினர். பலர் சிரச்சேதம் செய்யப்பட்டனர். அவர்கள் யாரும் அந்த சூழ்நிலையில் அரசுக்கு எதிராக புரட்சி செய்யவில்லை. ஆனால், அப்போதெல்லாம் விசுவாசிகள் ஆளுநர்களின் கொடுங்கொன்மைக்கு அடிபணியவுமில்லை. தங்கள் நேசமீட்பரை மறுதலிக்காமல், தங்கள் நம்பிக்கைக்காக தங்கள் உயிரையே கொடுத்தனர். அப்படியிருக்க அரசாங்கத்தை சாக்காக வைத்து உயிர்தந்து மீட்ட பாசத் தகப்பனை மறுதலிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
All