077) எல்லா சாதியினரும் ஒருங்கே பங்கெடுக்கும் சபைகள் பல இருக்கும்போது, சாதி அடிப்படையில் பிரிந்திருக்கும் சில சபைகளைப் பற்றி விமர்சனம் செய்வது சரியா?

பதில்: உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு தலையில் அடிபட்டு அவரை ஆம்புலன்சில் கொண்டுவந்து நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கும்போது, மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர் உங்களிடம், “அடிபடாமல் ஆரோக்கியமாக இருக்கும் ஆயிரக்கணக்கானோர் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? இவரை ஏன் கொண்டுவந்தீர்கள்” என்று கேட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்? நாட்டில் நோயில்லாதவர்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருப்பதால், நோயாளிகளை மருத்துவரிடம் கொண்டுசெல்லவேண்டிய தேவை இல்லை என்று சொல்லமுடியுமா? நோயில்லாதவர்களுக்கு டாக்டர் தேவை இல்லையே! டாக்டர் ஆரோக்கியமாக இருக்கும் ஆயிரம்பேரைச் சுட்டிக்காட்டி நோயுற்றவர்களுக்கு மருத்துவம் செய்யாமல் தப்பிக்கமுடியுமா? நோயாளிகளைக் குணப்படுத்துவதல்லவா அவருடைய கடமை! அதேபோல கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையில் சீழ்பிடித்திருக்கும் பாகங்களை சீழ்பிதுக்குகிறோம். திருச்சபையின்மீது எங்களுக்கு இருக்கும் அக்கரையை நினைத்து நீங்கள் எங்களைப் பாராட்டவேண்டும். ஆனால், இந்த முக்கியமான பணியை தடை செய்கிறீர்கள். இது அநியாயமல்லவா!
உங்கள் வீட்டிலுள்ள விலையுயர்ந்த பொருட்களை யாராவது திருடிச் சென்றுவிட்டால், அந்த திருடனை பிடிக்க முயற்சி செய்யமாட்டீர்களா? அல்லது திருடாத பலரை நினைத்து, திருட்டு போகாத பிற பல வீட்டை நினைத்து சமாதானப்படுவீர்களா? நீங்கள் பாதிக்கப்படும்போது உங்கள் நிலைப்பாடு தீவிரமாக இருக்கம். பிறர் பாதிக்கப்பட்டால் மெத்தனமாக இருக்கும். இது உங்கள் அநியாய சுயநலத்தை அல்லவா காட்டுகிறது!
சாதி மறுப்பாளர் இயக்கத்துக்கென்று நியமிக்கப்பட்ட பணி கிறிஸ்தவர்களிடையே காணப்படும் சாதி பேதங்களை ஒழித்து சகோதரத்துவத்தை நிலைநாட்டுவதாகும். அந்த பணியை கடமை உணர்வோடு எரிகின்ற இதயத்தோடு செய்கிறோம். எங்களுடன் இணைந்து தாங்கள் பணிசெய்யாவிட்டால்கூட பரவாயில்லை. எங்கள் வழியில் குறுக்கே நிற்காமல் ஒதுங்கி நிற்கலாமே!