078) சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வாங்குவதில் என்ன தவறு இருக்கிறது?

பதில்: நம் மூதாதையர்கள் சாதி அடிப்படையில் பல்லாயிரம் ஆண்டுகளாக ஆதிக்க சாதியினரால் ஒடுக்கப்பட்டார்கள் என்னும் வரலாற்று உண்மை நம் உள்ளங்களில் வெட்டவெளிச்சமாக இருக்கிறது. ஆரியர்களால் உருவாக்கப்பட்ட சாதிய அடக்குமுறை கொள்கையாகிய வருணாசிரமம் என்னும் சட்டச்சங்கிலியால் 2000 ஆண்டுகளாக ஒரு பெருங்கூட்டம் அப்பாவி மனிதர்களை சிறைப்படுத்தி, மிருகங்களைவிட இழிவாக கொடுமைப்படுத்தி, அநியாயமாக அவர்கள் செல்வங்களைத் திட்டமிட்டு, அநியாயச் சட்டமிட்டுத் திருடி, உடலாலும் உள்ளத்தாலும் ஒடுக்கி உருக்குலைத்த காட்டுமிராண்டித்தனமான மகாபாதகத்தைப் பற்றிய வரலாற்றை வாசிக்கும்போது நெஞ்சம் பதறுகிறது. அந்த கொடுமைகளை வாசிப்பவர்களால் அதை எளிதில் மறக்கமுடியாது.
அன்று பாதிக்கப்பட்டவர்கள் இழந்த செல்வங்களை, செல்வாக்கை, நிம்மதியை இன்று வாழும் அவர்களுடைய வாரிசுகள் இழப்பீடாக பெற்றுக்கொள்வதே மறுக்கமுடியாத சமூகநீதியாகும். ஆதிக்க சாதியினர் நம் முன்னோர்களை அடிமைப்படுத்தி இழைத்த கொடுமைகளுக்கு இழப்பீடாகத்தான் அரசாங்கம் இன்று இடஒதுக்கீட்டை கொடுக்கிறது. மற்றபடி இது வறுமை ஒழிப்பிற்கான திட்டமல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நம் மூதாதையர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதற்கான இழப்பீட்டை சட்டப்படி வாங்க நமக்கு உரிமை உண்டு.
சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வாங்குவோரில், *சாதி உணர்வாளர்களும், சாதி மறுப்பாளர்களும்* உண்டு. ஆனால், சாதி மறுப்பாளர்களாகிய நாம் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வாங்கிக்கொண்டிருப்பது வரை சாதி ஒழியாது. ஆகவே, தற்போது சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வாங்கும் அனைவருக்குள்ளும் இருக்கும் சாதிமறுப்பாளர்களை தனியாக பிரித்து ஒருங்கிணைத்து *சாதியற்றோர் (Non Caste-NC)* என்ற ஒரு புதுப் பிரிவை உருவாக்கி அப்பிரிவினருக்கு அரசு தனி இடஒதுக்கீடு கொடுக்கவேண்டும் என்று நான் மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன்.
எவ்வளவு விழுக்காடு மக்கள் ‘சாதியற்றோர்’ பிரிவுக்கு நகர்கிறார்களோ அவ்வளவு இடஒதுக்கீட்டு விழுக்காட்டை அதிகப்படுத்தவேண்டும்.
சாதியற்றோர் பிரிவில் இடஒதுக்கீடு வாங்கும் உரிமை கிறிஸ்தவராகிய நமக்கு இருந்தாலும், நமக்கு எதிராக, பல்லாயிரம் ஆண்டுகளாக ஆதிக்க சாதியினர் தீங்கு செய்த கொடியவர்களாக இருந்தாலும், இயேசுவின் அன்பை முன்னிட்டு அவர்களை பழிவாங்காமல், நியாயப்படி நமக்கு வந்துசேரவேண்டிய இழப்பீட்டை கிறிஸ்துவின் சிந்தையோடு விட்டுவிடுவதுதான் இயேசுவின் மரணத்தால் மீட்கப்பட்ட நமக்கு கடவுள் கற்றுக் கொடுத்திருக்கும் உன்னத வாழ்வியல்.
ஆண்டவர் உங்களை மன்னித்ததுபோல நீங்களும் மன்னிக்கவேண்டும் (கொலோ. 3:13, எபே. 4:32) என்று ஆண்டவர் அறிவுறுத்துகிறாரே! நாம் செய்த தவறுகளை கடவுள் மன்னிக்காமல் நம்மை நீதிப்படித் தண்டித்திருந்தால், நாமும் பிறரை நீதிப்படி பழிவாங்கலாம். அந்த உரிமை நமக்கு உண்டு. ஏனெனில், கண்ணுக்கு கண், பல்லுக்குப்பல் என்ற சமூக நீதிச்சட்டத்தை நமக்கு சொல்லிக் கொடுத்ததும் கடவுள்தானே! ஆனால், அன்று தண்டித்த அந்த நீதியின் சூரியன், நிரபராதியான ஒரு எளிய மனித வடிவில் வந்து நம் பாவங்களுக்கான தண்டனையை அனுபவித்து பலியானாரே சகோதரமே! அந்த கருணாமூர்த்தியின் அன்பை நினைக்கையில் மனம் உருகவில்லையா? நாம் செய்த அக்கிரமங்களுக்குத் தக்க தண்டனையை கடவுள் நமக்குக் கொடுத்திருந்தால், நாம் தப்பிப் பிழைத்திருக்கமுடியுமா?
இந்த உயர்ந்த உள்ளம்தான் கிறிஸ்தவர்களின் வாழ்வியல் தரம் மற்றவர்களைவிட உயர்ந்தது என்று பிறருக்கு நிரூபிக்கும் ஒரு கருவியாக இருக்கும் என்று நம்புகிறேன். கிறிஸ்தவ இறையியல்படி நமக்கு துரோகம் இழைத்தோரை கிறிஸ்து எப்படி பார்க்கிறாரோ அப்படித்தான் நாமும் பார்க்கவேண்டும் என்பதுதான் முதிர்ந்த ஆன்மீகம். தன்னை சிலுவையில் அறைந்தாரை மன்னித்து, “தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்கு தெரியவில்லை” (லூக்கா 23:34) என்று சொன்னவர் அல்லவா நம் ஆண்டவர்! அந்த அன்புதான் பிறரைக் கிறிஸ்துவிடம் அழைத்துவரும் காந்தசக்தி என்று என் இதயம் சொல்கிறது. நம் முன்னோர்களைக் கொடுமைப்படுத்திய அவர்களை மன்னிக்கும் அன்பு வலிமையை ஆண்டவரிடம் கேட்போம்.
கிறிஸ்துவை அறியாதவர்கள் பிறரை வஞ்சம் தீர்த்தால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆனால், நமக்காகத் தன் உயிரையே கொடுத்த இயேசுவின் கண்கள் வழியாக நாம் பிறரைப் பார்த்தால் அவர்களை பழிவாங்கமுடியாது அல்லவா!
“அன்பார்ந்தவர்களே! பழிவாங்காதீர்கள்; அதைக் கடவுளின் சினத்திற்கு விட்டுவிடுங்கள். ஏனெனில், மறைநூலில் எழுதியுள்ளவாறு, பழிவாங்குவதும் கைம்மாறு அளிப்பதும் எனக்கு உரியன” (உரோ. 12:19, எபி. 10:30) என்று இறைவன் கூறுகிறார்.
ஒருமுறை இயேசு சீடர்களைப் பார்த்து, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என்பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடுகூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகமாட்டார்” (மாற்கு 10:29,30) என்று கூறினார்.
கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதிப் பாகுபாடுகளை நாம் விரைவில் ஒழிக்கவேண்டுமானால், திருத்தூதர் பவுல் செய்ததுபோல, நமக்கு லாபமாக இருக்கும் சிலவற்றை நஷ்டமென்று கருதியாகவேண்டும் (பிலி. 3:7). ஒருவர் நம்மைக் கெட்ட வார்த்தையால் திட்டிவிட்டார் என்பதற்காக, நாமும் திருப்பி அவரைக் கெட்ட வார்த்தையால் திட்டுவதில் கிறிஸ்தவம் எங்கே இருக்கிறது? மனிதர்கள் யாரும் நமக்கு எதிரிகள் அல்ல. சாத்தான் மட்டுமே நமக்கு எதிரி என்பதை எப்போதும் நம் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும். யார் வேண்டுமானாலும் நம்மை வஞ்சம் தீர்க்கலாம். ஆனால், கிறிஸ்துவால் மன்னிக்கப்பட்ட நாம் யாரையும் பழிவாங்கக் கூடாது. சட்டப்படி நமக்கு தீங்கு இழைத்தவரை நீதித்துறையின் மூலம் தண்டிக்கும் உரிமை நமக்கு உண்டு. சட்டப்படி நம்மை காயப்படுத்தியவர்களை நாம் திருப்பிக் காயப்படுத்தலாம். ஆனால், நாம் செய்த குற்றங்களைக் கிறிஸ்து தன் மனதில் வைத்து நம்மைச் சட்டப்படி தண்டித்தாரா? கிறிஸ்து பழிவாங்கினாரா? அல்லது பழிவாங்கச் சொன்னாரா? இல்லை.
கிரகாம் ஸ்டேன்ஸ் என்னும் ஆஸ்திரேலிய ஊழியரை அவருடைய இரு பிள்ளைகளோடு மதத்தீவிரவாதிகள் அவருடைய வாகனத்தில் வைத்து கொளுத்திக் கொன்றனர். வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றவாளிக்குச் சட்டப்படித் தண்டனை அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்னாருடைய துணைவியார் குற்றவாளிக்கு தண்டனை கொடுக்கவேண்டாம் என நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டதால் அந்த கொலைக் குற்றவாளி விடுதலையடைந்தார். இது நம் எல்லோருக்கும் ஒரு முன்மாதிரிப் பாடமாக இருக்கவேண்டும் என்று நான் இறை மக்களுக்கு ஆலோசனையாகக் கூறுகிறேன்.
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல்” என்று நம் பாட்டன் வள்ளுவப் பெருந்தகையும் இதை வலியுறுத்துகிறார்.