081) ஒரு சாதி மறுப்புக் கிறிஸ்தவர் சாட்சியத்துக்காக தன் பெயருக்குப்பின் தன் சாதிப் பெயரை எழுதுவது எப்படி தவறாகும்?

பவுல்: பொதுவாக தாழ்த்தப்பட்டவர்கள்தான் கிறிஸ்தவர்களாக மாறுகிறார்கள் என்று இந்தியாவில் கிறிஸ்தவர் அல்லாத மக்கள் பெரும்பான்மையானோர். நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே, மேல்சாதி என்று அழைக்கப்படுவோரும் கிறிஸ்துவை பின்பற்றுகிறார்கள் என்று பிறருக்கு நிரூபிக்க, அவர்கள் நாங்கள் இன்ன சாதியிலிருந்து மீட்கப்பட்டோம் என்று சொல்வது கட்டாயமாகிறது. அது கடவுளுக்கு மாட்சியைச் சேர்க்கும்.
“யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை” (கலா 3:28) என்று சொன்ன திருத்தூதர் பவுல், ஒரு சூழ்நிலையில் _”நான் தர்சு பட்டணத்து யூதன்” (தி.ப. 21:39)_ என்றும் சொல்கிறார். அவருடைய பேச்சை எதிரில் நிற்பவர்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளும்படி அவர் அந்த யுக்தியைக் கையாண்டார். அது தவறல்ல. அதை கடவுளின் மாட்சிக்காக சொன்னார். ஆனால், அவர்கள் விட்டுவந்த தங்கள் சாதியின் பெயரை தங்கள் பெயருக்குப்பின் எழுதும்போது, கிறிஸ்தவம் சாதிப் பாகுபாடுகளை உள்வாங்கிய மார்க்கம் என்றும், கிறிஸ்தவர்கள் இந்துத்துவத்தை விட்டு வெளியேறினாலும் இப்போதும் சாதி உணர்வாளர்களாகத்தான் இருக்கிறார்கள் என்று பிறர் தவறாகப் புரிந்துகொள்வதற்கு வழிவகுக்கிறது என்பதே ஒரு நடைமுறை உண்மையாகும். பனை மரத்தடியில் அமர்ந்து பாலையே அருந்தினாலும் அந்த காட்சியைப் பார்க்கும் மக்கள் அவர் கள் குடித்ததாகவே புரிந்துகொள்வார்கள். அது மக்களுடைய தவறும் அல்ல. அதுபோல, நீங்கள் ஒரு நிஜமான சாதி மறுப்பாளராக இருந்தாலும் மக்கள் உங்களை சாதி உணர்வாளர் என்றுதான் கூறுவார்கள். அது மக்களுடைய தவறும் அல்ல.
தற்போது, கிறிஸ்தவர்கள் திருமணத்தில் சாதி பார்ப்பதாலும், சாதி அடிப்படையில் கிறிஸ்தவ சபைகள் பிரிந்துகிடப்பதாலும் கிறிஸ்தவர்கள் சாதி உணர்வாளர்கள் என்று பிறர் கிறிஸ்தவத்தை ஏற்கெனவே சமூக ஊடகங்களில் அப்பட்டமாக விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார்கள். அதனாலேயே கிறிஸ்தவர்களின் சாதிப்பாகுபாட்டுக் கொள்கையால் பாதிக்கப்பட்டவர்கள் இஸ்லாத்திற்கும், பௌத்தத்துக்கும், நாத்திகத்துக்கும் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். சாதிப் பெயரை எல்லா கிறிஸ்தவர்களும் தங்கள் பெயருக்குப்பின் எழுத தொடங்கிவிட்டால், கிறிஸ்தவம் சாதி பாகுபாட்டு மார்க்கம் என்று பிறர் உறுதியாகவே நம்பிவிடுவார்கள்.
ஒரு பெண் விபச்சார பாவம் என்னும் கொடிய பாவத்திலிருந்து மீட்கப்பட்டார் என்பதற்காக அவரது பெயருக்குப்பின் _விபச்சாரி_ என்று எழுதுவது முறையாகுமா? அல்லது கொலைகாரராக இருந்து இயேசுவை ஏற்றுக்கொண்டார் என்பதற்காக அவரது பெயருக்குப்பின் _கொலைகாரன்_ என்று எழுதுவது சரியாகுமா? அப்படி எழுதுவதால் விளையும் நன்மையைவிட தீமையே அதிகமாக இருக்கும் என்பதே அறிவார்ந்த உண்மை.
புதிய உடன்படிக்கையில் வாழும் நாம் இனிமேல் இயேசு கிறிஸ்துவை *_யூத ராஜ சிங்கம்_* என்று அழைப்பதும் தவறாகும். ஏனெனில், _இனிமேல் நாங்கள் எவரையும் மனித முறைப்படி மதிப்பிடுவதில்லை; முன்பு நாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம். ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை (2கொரி 5:16)_ என்று திருத்தூதர் பவுல் வெளிப்படையாக அறிக்கையிடுகிறார்.
நீங்கள் இயேசு கிறிஸ்துவின் மீட்பை பெற்றுக்கொண்டபின் உங்களுக்கும் இந்துத்துவ சாதியத்துக்கும் சம்பந்தம் இல்லையே! அப்படியிருக்க சகமனிதனை அடிமைப்படுத்தி உளவியல் நெருக்கத்தை கொடுக்கும் இந்துத்துவ சித்தாந்தமாகிய சாதி பெயரை உங்கள் பெயருக்குப்பின் எழுதுவது திருச்சபையில் சாதிய ஏற்றத்தாழ்வு உருவாவதற்கும், சகோதரத்துவம் சிதைவதற்கும் வழிவகுக்குமே! குறிப்பாக ஒடுக்கப்பட்ட இந்து மக்கள் கிறிஸ்துவிடம் வருகின்ற வாசல்களை நாமே பூட்டிவிடுவோமே!
_”ஈ.வே. ராமசாமி நாயக்கராகிய நான் இன்றுமுதல் ஈ.வே.ராமசாமி என்று அழைக்கப்படுவேன்”_ என்று கூறி அவர் தன் சாதிப் பெயரை துறந்ததை பாராட்டாமல் இருக்கமுடியாது. கிறிஸ்துவை அறியாத நாத்திகர்கள் யாருமே தங்கள் பெயர்களுக்குப்பின் சாதியை எழுதுவதில்லை. அவர்களைவிட கிறிஸ்தவர்களின் பண்பாடு உயர்ந்ததாக இருக்கவேண்டாமா? சிந்தியுங்கள்!