082) கிறிஸ்துவே இரட்சகர் என்று நம்பும் ஒருவர் அப்படி நம்பாத ஒருவரைத் சாதி மறுப்புத் திருமணம் செய்வதில் என்ன தவறு இருக்கிறது?

பதில்: பழைய உடன்படிக்கையில், இஸ்ரயேல் மக்கள், இஸ்ரயேலரல்லாதோரை திருமணம் செய்வதை திருச்சட்டம் தடைசெய்கிறது. கடவுள் மணவாழ்க்கையைப் பற்றி இஸ்ரயேலருக்கு கட்டளையிடும்போது,
_நீ அவர்களோடு (இஸ்ரயேலர் அல்லாதாரோடு) திருமண ஒப்பந்தம் செய்து கொள்ளாதே. உன் மகளை அவர்கள் மகனுக்குக் கொடுக்காதே. உன் மகனுக்கு அவர்கள் மகளைக் கொள்ளாதே. ஏனெனில், என்னை பின்பற்றுவதிலிருந்து உன் பிள்ளைகளை அவர்கள் விலக்கி, வேற்றுத் தெய்வங்களை வணங்கும்படி செய்வார்கள். அதனால், ஆண்டவரின் சினம் உனக்கெதிராய் மூண்டு உன்னை விரைவில் அழிக்கும் (இணை. 7:3,4)_ என்று கடவுள் சொல்கிறார்.
இந்த இறைச்சட்டத்தை மனதில் வைத்தே திருத்தூதர் பேதுரு இராணுவ நூற்றுவர் தலைவர் கொர்நெலியு என்பவரின் வீட்டாரிடம், _”ஒரு யூதன் பிற குலத்தவரிடம் செல்வதும், அவர்களோடு உறவாடுவதும் முறைகேடு” (தி.ப. 10:28)_ என்கிறார்.
மேற்கண்ட வசனங்களின்படி, இஸ்ரயேல் மக்கள் உண்மையான தெய்வமாகிய ஆண்டவரை வழிபடாத வேற்று மக்களை திருமணம் செய்தால், இஸ்ரயேலர்களை வேற்று மக்கள் உண்மையான கடவுள் வணக்கத்திலிருந்து விலக்கி, பொய்யான கடவுள்களை (சிலைகளை) வணங்கும்படி மாற்றிவிடுவார்கள் என்ற காரணத்தால்தான் அவர்களைத் திருமணம் செய்யவேண்டாம் என கட்டளையிட்டார் என்பது விளங்குகிறது.
இதையே திருத்தூதர் பவுல், “கணவர் உயிரோடு இருக்கும் காலம்வரை மனைவி அவரோடு இணைக்கப்பட்டிருக்கிறார். கணவர் இறந்துவிட்டால் தாம் விரும்புவோரைத் திருமணம் செய்துகொள்ள அவருக்கு உரிமையுண்டு. ஆனால், அவர் திருமணம் செய்து கொள்பவர் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவராய் இருக்க வேண்டும்”(1கொரி. 7:39) என்று உறுதி செய்கிறார். மற்றபடி வருணாசிரமம் சொல்வதுபோல *உயர்சாதி கீழ்சாதி என கடவுள் பாகுபடுத்தவில்லை* என்பதை நுட்பமாக புரிந்துகொள்ளவேண்டும்.
*அரசர் சாலமோனின் சோகமுடிவுக்கு காரணம்*
தாவீது அரசருடைய மகன் சாலமோனுடைய வாழ்வில், அவர் கடவுளின் வழிகாட்டுதலுக்குக் கீழ்ப்படியாமல் யூதரல்லாத பலரை திருமணம் செய்ததால், அவரது வாழ்வின் பாதைமாறி சீர்கெட்டுப் போன வரலாற்றை ஆராய்வோம்.
_அரசர் சாலமோன் அயல்நாட்டுப் பெண்கள் பலர்மேல் மோகம் கொண்டார். பார்வோனின் மகளை மணந்ததுமின்றி மோவாபியர், அம்மோனியர், ஏதோமியர், சீதோனியர், இத்தியர் ஆகிய பல நாட்டுப் பெண்களையும் மணந்தார். அவ்வேற்றினத்தாரைக் குறித்து ஆண்டவர் இஸ்ரயேல் மக்களிடம், “நீங்கள் அயல் நாடுகளிலிருந்து பெண் கொள்ளவும்வேண்டாம்; கொடுக்கவும் வேண்டாம்; ஏனெனில் அவர்கள் தம் தெய்வங்களை வணங்கும்படி உங்கள் உள்ளங்களை மயக்கிவிடுவார்கள் என்று கூறியிருந்தார். அப்படிக் கூறியிருந்தும் அந்நாட்டுப் பெண்கள்மேல் சாலமோன் காதல் கொண்டிருந்தார். சாலமோனுக்கு எழுநூறு அரசகுலப் பெண்கள் மனைவியராகவும், முந்நூறு பெண்கள் வைப்பாட்டிகளாகவும் இருந்தார்கள். அப்பெண்கள் அவரது இதயத்தைத் தவறான வழியில் திருப்பிவிட்டார்கள். சாலமோன் முதுமை அடைந்தபோது, அவருடைய மனைவியர் அவர் இதயத்தை வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றும்படி மாற்றிவிட்டனர். அதனால் அவர் உள்ளம் தம் தந்தை தாவீதின் உள்ளத்தைப்போல் கடவுளாகிய ஆண்டவருக்கு முற்றிலும் பணிந்திருக்கவில்லை.
சாலமோன் சீதோனியரின் தேவதையான அஸ்தரோத்தையும் அம்மோனியரின் அருவருப்பான மில்க்கோவையும் வழிபடலானார். இவ்வாறு சாலமோன், ஆண்டவர் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தார். தம் தந்தை தாவீது ஆண்டவரை முழுமையாகப் பின்பற்றியதுபோன்று அவர் செய்யவில்லை. சாலமோன் எருசலேமுக்கு எதிரில் இருந்த மலையில் மோவாபியரின் அருவருப்பான கெமோசுக்கும், அம்மோனியரின் அருவருப்பான மோலேக்குக்கும் தொழுகைமேடுகளைக் கட்டினார். இப்படியே தங்கள் தெய்வங்களுக்குத் தூபம் காட்டிப் பலியிடுவதற்காக, வேற்றினத்தாரான தம் மனைவியர் எல்லோருக்கும் சாலமோன் இவ்வாறு செய்து கொடுத்தார். ஆண்டவர் சாலமோன்மீது சினமுற்றார். ஏனெனில், தமக்கு இருமுறை காட்சியளித்திருந்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரிடமிருந்து அவர் இதயம் விலகிச்சென்றது. *வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாமென்று* ஆண்டவர் அவருக்குக் கட்டளையிட்டிருந்தும், அக்கட்டளையை அவர் கடைப்பிடிக்கவில்லை. ஆகையால் ஆண்டவர் சாலமோனை நோக்கி, “நான் உன்னோடு செய்த உடன்படிக்கை யையும், நான் உனக்கு விதித்த நியமங்களையும் மீறி, நீ இவ்வாறு நடந்துகொண்டதால் *உன் அரசை உன்னிடமிருந்து பறித்து* அதை உன் பணியாளனுக்குக் கொடுக்கப்போவது உறுதி” என்றார் (1அர. 11:1-11)._
_”திருமணத்துக்கு பிறகு நான் துணைவரை மீட்புக்குள் நடத்துவேன்”_ என்று பலர் வேற்று மதத்தினரை திருமணம் செய்தனர். ஆனால், அப்படிப்பட்டவர்களிடம், _”மனைவியால் தன் கணவரை மீட்கமுடியுமா முடியாதா என்று அவருக்கு எப்படித் தெரியும்? கணவரால் தன் மனைவியை மீட்கமுடியுமா முடியாதா என்று அவருக்கு எப்படித் தெரியும்?” (1கொரி. 7:16)_ என்று திருத்தூதர் பவுல் கேள்வி கேட்கிறார். அப்படி திருமணம் செய்த பலர், கிறிஸ்தவரல்லாத துணைவரின் தவறான வழிக்கு இணங்கியதால் கிறிஸ்துவைவிட்டே விலகிவிட்டனர் என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.
_திருமணமான பெண்களே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பதுபோல உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பதுபோலக் கணவர் மனைவிக்குத் தலையாய் இருக்கிறார். கிறிஸ்துவே திருச்சபையாகிய உடலின் மீட்பர். திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பதுபோல, மனைவியரும் தங்கள் கணவருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும் (எபே. 5:22-24)_ என்று திருத்தூதர் மணமான பெண்களை போதிக்கிறார்.
திருச்சபை கிறிஸ்துவுக்கு கீழ்படிவது போல, கிறிஸ்துவின்மீது நம்பிக்கையற்ற கணவனுக்கு ஒரு நம்பிக்கையுள்ள மனைவி கீழ்படிய தொடங்கிவிட்டால் நிலைமை எப்படி இருக்கும் சிந்தித்துப் பாருங்கள்! ஆகவே, மறைநெறியின் வழிகாட்டுதலுக்கு மனத்தாழ்மையோடு கீழ்படிவதே நமக்குப் பாதுகாப்பு என்பதே என் நிலைப்பாடு.
மேற்கண்ட வசனங்கள்படி உண்மையான கடவுளை நம்பாதவர்களை வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்வது ஆன்மீக வாழ்வின் முன்னேற்றத்துக்கு மிகவும் இடைஞ்சலானது என்பதால்தான் அவர்களை கிறிஸ்தவர்கள் வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்யக்கூடாது என்று அறிகிறோம். மற்றபடி மதவெறியோ, மதபேதமோ கிறிஸ்தவ திருமணத்தில் இல்லை.