பதில்: அப்படி எளிதில் நுழையமுடியாது. ஏனெனில்,ஒருவர் *சாதியற்றோர் (Non Caste)* பிரிவுக்கு நகர்வதற்குமுன் அவருக்கோ, அவருடைய பிள்ளைகளுக்கோ, அவருடைய பேரப்பிள்ளைகளுக்கோ திருமணம் வரும்போது அவர் சாதி பார்க்கமாட்டார் என்றும், அவர் சாதி மறுப்பு திருமணம் செய்வதில் அவருடைய பெற்றோருக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், அவர் எந்த சாதி சங்கத்திலும் அங்கமாக இல்லை என்றும், அவர் தன் பெயருக்குப்பின் சாதிப் பெயரை எழுதமாட்டார் என்றும் உறுதிமொழி பத்திரத்தில் அவரும், அவருடைய பெற்றோரும் கிராம நிர்வாக அதிகாரியின் முன்னிலையில் கையெழுத்துப் போட்டபின்பு, அவருக்கு, “சாதியற்றோர்” என்று வட்டாட்சியர் சான்றளிக்கவேண்டும். அதன்பின்தான் அவர் சாதியற்றோர் பிரிவில் சேர்த்துக்கொள்ளப்படுவார்.
சாதியற்றோர் பிரிவில் இணைக்கப்பட்டவர்கள் எல்லோருக்காகவும் திருமண தகவல் மையத்தை அரசு நடத்தவேண்டும். அதனால் சாதி மறுப்புத் திருமணங்கள் தங்குதடையின்றி நடக்கும். NC பிரிவின் கீழ் இருப்போர் செய்யும் திருமணத்தின் மூலம் ஆணவப் படுகொலைகள் தடுத்து நிறுத்தப்படும். இப்பிரிவுக்கு நகர்ந்த இருவர் திருமணம் செய்வதற்கு எதிராக தடை செய்வோருக்குக் கடுமையான தண்டனையை அரசு கொடுக்கவேண்டும்.
BC, MBC, SC, ST என்று ஏதாவது ஒரு பிரிவில் இருப்பவர்கள்தான் NC-க்கு நகரப் போகிறார்கள். விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீட்டுச் சதவீதம் உறுதி செய்யப்படவேண்டும்.
ஒருவர் சாதி மாற்றித் திருமணம் செய்துவிட்டதால் அவர் உண்மையாகவே சாதி மறுப்பாளர் என்று உறுதி செய்யமுடியவில்லை. எடுத்துக்காட்டாக எங்களுக்குத் தெரிந்த பல சாதி சங்கங்களிலும், சாதி கட்சிகளிலும் உறுப்பினராக இருப்போரும், நிர்வாகப் பொறுப்பில் இருப்போரும் பலர் சாதி மாற்றித் திருமணம் செய்தவர்கள்தான். ஆனால், நிஜ வாழ்க்கையில் அவர்கள் சாதி உணர்வாளர்களாகத்தானே இருக்கிறார்கள்! ஆகவே, சாதியற்றோர் என்ற பிரிவில் சாதி மாற்றித் திருமணம் செய்தோரை சேர்க்கவேண்டும் என்று சட்ட நிர்ணயம் செய்வதைவிட, “நான் சாதியத்தைப் பின்பற்றமாட்டேன்” என்று சுய அறிக்கை செய்யும் அனைவரையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.