085) சாதி மறுப்பைப் பற்றி பிறரிடம் பேச, சாதிமறுப்பு T-Shirt அணிய வெட்கமாக இருக்கிறது!

*கிறிஸ்து வெட்கப்படவில்லை!*
பாவம் செய்த நமக்கு தக்கத் தண்டனை கொடுக்காமல், நாம் அடையவேண்டிய தண்டனையை சிலுவை மரணத்தின்மூலம் இயேசு கிறிஸ்து அனுபவித்தார். அதற்கு அவர் வெட்கப்படவோ, பயப்படவோ இல்லையே! அப்படிப்பட்ட அந்த தாயுள்ளம் கொண்ட கருணாமூர்த்தியின் நிமித்தம் *நாம் ஏன் வெட்கப்படவேண்டும்?* அப்படி வெட்கப்படுவது *நன்றியில்லாமையின் அடையாமல்லவா!*
_தூய்மையாக்குகிறவர் (இயேசு), தூய்மையாக்கப்படுவோர் (நாம்) அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே (கடவுள்). இதனால் இயேசு இவர்களை (நம்மை) *சகோதரர், சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை* (எபி. 2:11)_ என்று வேதம் கூறுகிறது.
*திருத்தூதர்கள் வெட்கப்படவில்லை*
_நற்செய்தியை முன்னிட்டு *வெட்கப்படமாட்டேன்;* ஏனெனில், அதுவே கடவுளின் மீட்பளிக்கும் வல்லமை (உரோ. 1:16),_ என்றும், _இதன் பொருட்டே நான் இவ்வாறு துன்புற்று வருகிறேன்; எனினும் *வெட்கமுறுவதில்லை.* ஏனெனில், நான் யாரிடம் நம்பிக்கை கொண்டுள்ளேன் என அறிவேன். அவர் என்னிடம் ஒப்படைத்ததை இறுதிநாள்வரை காத்திட வல்லவர் என்கிற *உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு* (2திமொ. 1:12)_ என்றும் கிறிஸ்துவின் அன்பை நன்கு உணர்ந்த *திருத்தூதர் பவுல்* தைரியமாக அறிக்கையிடுகிறார்.
_”நீ கடவுள்முன் ஏற்புடையோனாக நிற்க முழு முயற்சி செய்; உண்மையின் வார்த்தையை நேர்மையாய்ப் பகுத்துக் கூறும் பணியாளாகிய நீ *வெட்கப்பட வேண்டியதில்லை”* (2திமொ. 2:15), நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ *வெட்கமடையத் தேவை இல்லை.* கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் *துன்பத்தில் என்னுடன் பங்குகொள்* (2திமொ. 1:8)_ என்று திருத்தூதர் பவுல் திமொத்தேயுவிடம் அறிவுரை சொல்கிறார்.
_நீங்கள் கிறிஸ்தவராய் இருப்பதால் துன்புற்றால், அதற்காக *வெட்கப்படலாகாது.* அந்தப் பெயரின் (கிறிஸ்து) பொருட்டுக் கடவுளைப் போற்றிப் புகழுங்கள் (1பேது. 4:16)_ என்று *திருத்தூதர் பேதுரு* அறிவுறுத்துகிறார்.
*நாம் வெட்கப்படும் காரணங்கள்:*
*மிதமிஞ்சிய சுயமரியாதை*
அன்பு சகோதரங்களே, நாம் நமது பார்வையில் சாதாரணமானவர்களாக இருந்தாலும், கடவுளின் பார்வையில் *விலையேறப் பெற்றவர்களாக* இருக்கிறோம் என்பதை வேதத்தின்மூலம் புரிந்துகொண்டோம். நாம் *கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மேன்மை தங்கிய உயிரிகள்* என்று அறிந்துள்ளோம். அது மட்டுமல்ல, இயேசுவின் இரத்தத்தால் கழுவித் *தூய்மையாக்கப்பட்டு, கடவுளுக்கு ஏற்புடையோராக* மாற்றப்பட்டுள்ளோம் என்று வேதத்தின்மூலம் நாம் அறிகிறோம். இந்த அறிவு நாம் எவ்வளவு மதிப்புக்குரியவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. இதன்மூலம் நம்மைப் பற்றிய நமது மரியாதை நமக்குள் அதிகமாகியுள்ளது. அதைத் தான் *சுயமரியாதை* என்று கூறுகிறோம். ஆனால், நாம் எவ்வளவு உயர்வானவர்கள் என்பதை கடவுள் நமக்கு கற்றுக்கொடுத்தது தற்பெருமையோடு வாழ்வதற்காக அல்ல. *தற்பெருமை என்பது நாம் எவ்வளவு மதிப்புக்கு தகுதியானவர்களோ அதற்கும் அதிகமாக நமக்கு நாம் மரியாதை கொடுப்பது ஆகும்.*
சுயமரியாதையை கடவுள் நமக்கு கொடுத்ததில் ஒரு முக்கிய நோக்கம் உண்டு. *”நான் மதிப்பற்ற கால்நடைகளுக்கு ஒப்பானவன்”* என்று நம்மை நாம் நினைத்துக்கொண்டிருந்தபோது, நாம் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்பதை கடவுள் நமக்குக் கற்றுக் கொடுத்தார். அதற்குக் காரணம்: *நம்மை நாம் மதித்து, நேசிக்கவேண்டும்* என்ற முக்கியமான நோக்கம் ஆகும். ஏனெனில், *நம்மை நாம் ஏற்றுக்கொண்டு, மதித்தால்தான் பிறரும் நம்மை மதிக்கவேண்டும்* என்ற எதிர்பார்ப்பும் நமக்கு வரும்.* அந்த எதிர்பார்ப்பு வந்தால்தான் பிறர் நம்மை மதிப்பதற்காக நாம் எப்படி வாழவேண்டுமோ அப்படி வாழவேண்டும் என்ற விருப்பம் நமக்கு வரும்.
கடவுள் சுயமரியைதையை நமக்குத் தந்த வேறொரு காரணம்: நாம் மதிப்புக்குரியவர்கள் என்று தெரிந்துகொள்ளாமலிருந்தால், பிறருக்கு அடிமையாக இருப்போம். ஆனால், மனப்பூர்வமாக பிறரை மதிப்புக்குரியவர்களாக ஏற்றுக்கொள்ளமுடியாது. *தன்னைத் தானே மதிக்காத ஒருவர், பிறர் தன்னிடம் மதிப்பை எதிர்பார்ப்பார்கள் என்பதை எப்படி அறியமுடியும்?*
அதேபோல, நம்மை நாம் நேசித்தால்தான், *நம்மைப் படைத்த கடவுள் தன்னை நாம் நேசிக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்* என்று நாம் புரிந்துகொள்ளமுடியும். எடுத்துக்காட்டு: *நமக்கு தலைவலி வந்தால்தான் பிறருக்கு தலைவலி வரும்போது புரிந்துகொள்ளமுடியும்.*
கடவுள் நம்மிடம் வைத்திருக்கும் அன்பின் உச்சத்தை தன் மகன் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின்மூலம் விளங்கப்பண்ணினார். கடவுள் மனிதன்மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்று ஏன் விளங்கப்பண்ணினார்? அப்படி விளங்கப்பண்ணினால்தான் கடவுள்மீது மிகப்பெரிய அன்பு நமக்குள் உருவாகிறது.
அந்த அன்பின்மூலம் எல்லோரைவிடவும் அதிகமாக கடவுளிடம் அன்பு கூரவேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வளர்கிறது. கிறிஸ்துவின்மீது நாம் பற்று வைத்திருக்கும் காரணத்தால், சிலவேளை நமக்கு *நியாயப்படி வரவேண்டிய மரியாதையை இழக்கும் நிலை வரலாம்.* ஆனால், அந்த இழப்பைத் தாங்கும் தியாக சிந்தையை கிறிஸ்துவின் அன்பு நமக்குத் தருகிறது.
நம்மைப் பெற்ற தாயின் முகம் அழகாக இல்லை என்பதற்காக நமது நண்பர்களிடம் நமது தாயை, _இது என் தாயல்ல; என் வீட்டு வேலைக்காரி”_ என்று மறுதலிப்பதில்லை. நமது சுயமரியாதையை பொருட்படுத்தாமல் தாயைப் பிறருக்கு அறிமுகப்படுத்துவோம். அப்படி மறுதலித்தால் அவர் *மிதமிஞ்சிய சுயமரியாதை (தற்பெருமை)* என்னும் சாத்தானிய வலையில் விழுந்துவிட்டார் என்று அர்த்தம். அதுபோல கிறிஸ்துவின் அன்பை உணர்ந்து ருசித்த, தியாக சிந்தை உடையவர்கள், கிறிஸ்து என்ற தியாக தீபத்தின் பெயரின்பொருட்டு வெட்கப்படமாட்டார்கள். தங்கள் நியாயமான சுயமரியாதையையே கிறிஸ்துவுக்காக விட்டுக்கொடுப்பார்கள். அதுதான் மனத்தாழ்மை. _அனைத்தையும் அன்போடு செய்யுங்கள் (1கொரி. 16:14)_ என்று திருத்தூதர் பவுல் கூறுகிறாரே!
_*”அவரது செல்வாக்கு (மாட்சி, மகிமை) பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்”* (யோவா. 3:30)_ என்று திருமுழுக்கு யோவான் கூறியதுபோல நாமும் சிந்திப்போம்.
_வாழ்வோர் இனி தங்களுக்கென வாழாமல் *தங்களுக்காக இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக வாழவேண்டும்* என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார் (2கொரி. 5:15)_ என்று திருத்தூதர் பவுல் பதிவு செய்கிறார். அதாவது *நமது சுயமரியாதையை நிலைநாட்ட நாம் வாழாமல், கிறிஸ்துவின் மாட்சியை நிலைநாட்ட வாழ* எதிர்பார்க்கப்படுகிறோம்.
நாம் இயேசுவை பிறரிடம் அறிக்கையிடுவதன்மூலம் நமது *சுயமரியாதை பாதிக்கப்படலாம்.* ஆனால், அவர் கொடுத்த அறிவால் நாம் படித்த *படிப்பு,* அவர் கொடுத்தை வலிமையால் நாம் செய்யும் *வேலை,* அதன்மூலம் நாம் சம்பாதிக்கும் *பணம்,* நாம் சம்பாதித்த *சொத்து* எல்லாவற்றையும்விட நமக்காக உயிரையேத் தந்த *இயேசுவை அதிகமாக நேசித்தால், அவர் பொருட்டு நாம் வெட்கப்படமுடியாது.* அப்படி சுயமரியாதையை கிறிஸ்துவுக்காக துறந்த, அவருடைய அன்புக்கு அடிமைப்பட்ட விசுவாசிகள் நாம் சாதிமறுப்பைப் பிறரிடம் எடுத்துரைக்க வெட்கப்படமுடியாது.
கிறிஸ்துவின் நிமித்தம் பிறர் நம்மை அவமானப்படுத்தலாம். ஆனால், அதை பொருட்படுத்தக்கூடாது. ஏனென்றால், *நம்மை மரியாதைக்கு உரியவர்களாக மாற்றும்படி கிறிஸ்து தனது சுயமரியாதையை இழந்தார்.* இயேசு நினைத்திருந்தால் சிலுவை மரணத்திலிருந்து தப்பித்திருக்க முடியுமே! ஏன் தப்பிக்கவில்லை? _”நான் அகிலாண்டத்தைப் படைத்த இறைமகன் அல்லவா!”_ என்று நினைத்து சிலுவை மரணத்தை அவர் புறக்கணிக்கவில்லையே!
*வெட்கம்* என்பது *தற்பெருமையின் அடையாளம்* என்று R. ஸ்டேன்லி என்னும் ஊழியர் குறிப்பிடுகிறார். அதாவது, *மனத்தாழ்மையுடைய* ஒருவர் கிறிஸ்துவின் பெயரின் பொருட்டு வெட்கப்படமுடியாது.
நான் சாதியத்துக்கு எதிராகப் பேசினால் *’நான் கீழ்சாதி’ என்பதை மக்கள் கண்டுபிடித்துவிடுவார்களே!* என்று பலர் நினைக்கிறார்கள். அவர்கள் சாதி உணர்விலிருந்து, அதாவது *சாதித் தாழ்வு மனப்பான்மையிலிருந்து* இன்னும் விடுதலை அடையவில்லை என்றே அர்த்தம். அவர்கள் இந்துத்துவ வைதீக படைப்புக் கொள்கையைத்தான் ஆழ்மனதில் பின்பற்றுகிறார்கள். *நாமே சாதியை மறுக்காமல் பிறரை எப்படி சாதி மறுப்புக்குள் வழிநடத்தமுடியும்?* கடவுள் நம்மை *கடவுளின் பிள்ளைகள்* என்று மகிமையான பெயரால் அழைக்கிறார். ஆனால், நாம் நம்மை *பள்ளர், பறையர், சக்கிலியர்* என்று அழைக்கிறோம். நாம் பிசாசுக்கு அடிமைப்பட்டு சிக்கி நிற்கிறோம் என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
நான் சாதியத்துக்கு எதிராக பேசினால் என்னை *கீழ்சாதிக்காரன் என்று மக்கள் தவறாக நினைத்துவிடுவார்கள்* என்று நினைப்போர் இன்னும் சாதிப் பெருமையிலிருந்து வெளியேறவில்லை என்றே அர்த்தம். அவர்கள் *கடவுளின் மாட்சிக்காக அல்ல, தங்கள் கெளரவத்துக்காகவே வாழ்கிறார்கள்.* அந்த சுயநல சாதி உணர்வு திருச்சபையில் சாதி ஒழிவதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. கிறிஸ்துவின் போதனையில்தான் சாதியே இல்லையே! அப்படியிருக்க நாம் ஏன் அந்த வேதவிரோத கொள்கையைப் பின்பற்றவேண்டும்? அப்படியே கீழ்ஜாதி என்று யாராவது நம்மை நினைத்தால் நினைக்கட்டுமே! இயேசுவுக்காக அந்த சிலுவையை சுமப்போமே! நமக்காக வாழாமல் கடவுளுக்காக வாழ்வதுதான் சிலுவை சுமப்பது என்பதை நாம் நுட்பமாக புரிந்துகொள்ளவேண்டும். “நாம்தான் *நமது கெளரவத்துக்காக* வாழவில்லையே! *இயேசுவின் மகிமைக்காக* அல்லவா வாழ்கிறோம்!” _தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது (லூக். 14:27)_ என்று கிறிஸ்து திட்டவட்டமாக அறிவித்துவிட்டாரே!
பிறரை எப்படியாவது கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றிவிடவேண்டும் என்று நம்மில் பலர் நினைக்கிறோம். நமது மறைப் பரப்புச் செய்தியை கேட்பவர் பலர் இயேசுவை ஏற்றுக்கொள்ள வெட்கப்படுகிறார்கள்.
சாதி மறுப்பு கொள்கையை பிறருக்கு பரப்ப, சாதி மறுப்பு ஆடை அணிய வெட்கப்படுபவர்கள் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ள வெட்கப்படுபவர்களிடம், *”வெட்கப்படாமல்* இயேசுவை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று எப்படிச் சொல்லமுடியும்? தங்களுடைய புகழ்ச்சிக்காக, தங்களுடைய மகிமைக்காக, சுய மரியாதைக்காக வாழ்பவர்கள், பிறரை இயேசுவுக்காக வாழ வலியுறுத்தும் உரிமையற்றவர்களல்லவா!
எனவே, தைரியமாக களமிறங்கும் மனமுதிர்ச்சியை கடவுளிடம் கேட்டு வாங்குவோம். இயேசுவின் நிமித்தம் நாம் அவமானப்படுவதை பாக்கியமாக நினைக்கும் ஆன்மீக வளர்ச்சிக்கு நாம் உயரவேண்டும்.
_என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் *வெட்கப்படும் ஒவ்வொருவரைப்* பற்றியும் மானிட மகன் தமக்கும் தந்தைக்கும் தூய வானதூதருக்கும் உரிய மாட்சியோடு வரும்போது *வெட்கப்படுவார்* (லூக். 9:26)_ என்று கிறிஸ்து கூறுகிறார்.
கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதி பாகுபாடுகளால் சுவிசேஷ அறிவிப்பு பாதிக்கப்படுகிறது என்று அறிந்த நாம், அந்த உண்மையை பிறருக்கு அறிவிக்கத்தான் சாதி மறுப்பு முகப்பு படம் (Profile Picture) வைக்கிறோம். சாதி மறுப்பு பதிவுகளை Status-ல் பதிவு செய்கிறோம். சாதி மறுப்பு புத்தகங்களை பிறருக்கு அறிமுகப்படுத்துகிறோம். *கிறிஸ்துவுக்காக* எல்லாவற்றையும் *பயப்படாமல், வெட்கப்படாமல்* செய்வோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!