086) இந்துக்களுக்கும் சாதி மறுப்பை போதனை செய்யலாமே!

பதில்: ஒருமுறை நான் ஓர் இந்து சகோதரரிடம், “சாதியம் ஒரு தவறான கொள்கை தம்பி!” என்று கூறியபோது, “ஐயா, சாதியம் என்பது எங்கள் மதக் கோட்பாடு. அதை நாங்கள் பின்பற்றுகிறோம். கிறிஸ்தவர்கள் நீங்கள் ஏன் எங்கள் மத விவகாரங்களில் தலையிடுகிறீர்கள்?” என்று கேட்டார். அப்போதுதான் எனது தவறை நான் உணர்ந்தேன். ஒரு இந்து மத நம்பிக்கையாளர் கிறிஸ்தவரிடம் வந்து, “திருமுழுக்கு எடுக்காதீர்கள்; அது அசிங்கமாக இருக்கிறது” என்று சொன்னால், நாம் ஏற்றுக்கொள்ளமுடியுமா? நீங்கள் ஒரு இஸ்லாமியரிடம் சென்று, “நீங்கள் விருத்தசேதனம் செய்வது தேவையற்றது. அப்படி செய்யாதீர்கள்” என்று சொன்னால் அவர்கள் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்வாரா? சிந்தித்துப் பாருங்கள்.
_திருச்சபைக்கு வெளியே இருப்பவர்கள் குற்றவாளிகள் என நான் ஏன் தீர்ப்பளிக்க வேண்டும்? கடவுளே அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார். உள்ளே இருப்பவர்களுக்கு நீங்கள்தானே தீர்ப்பளிக்க வேண்டும்? (1கொரி. 5:12,13)_ என்று திருத்தூதர் பவுல் அறிவுறுத்துகிறார்.
_*சாதுர் வர்ண்யம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஷஹ*_ என்று கண்ணன் கூறியதாக இந்துக்களின் ஆன்மீக நூலான பகவத்கீதையில் (4:13) எழுதப்பட்டுள்ளது. இதன் அர்த்தம்: _”நானே மனிதனை அவனுடைய குண கர்மத்தின் அடிப்படையில் நான்கு வர்ணங்களாக பிரித்தே படைத்தேன்”_ என்பதாகும். இந்துத்துவமே சாதியத்தின் பிறப்பிடமாகும். சாதியம் என்பது இந்துத்துவ புனித நூல்கள் கூறும் ‘ஆன்மீக’ சித்தாந்தம். இந்து கடவுளர்களால் உருவான தர்மம். இந்துத்துவ யோகிகள், சித்தர்கள், ஞானிகள் முன்மொழிந்த கொள்கை. குறிப்பாக பகவத் கீதை, மனு ஸ்மிருதி, ரிக் வேதம் போன்ற நூல்கள் போதிக்கும் அடிப்படை வாழ்வியல் தத்துவம்.
இயேசுவை கிறிஸ்து என்று நம்பாதவர்கள் கிறிஸ்தவராக இருக்கமுடியாது. அதேபோல இந்துத்துவத்தை கடைபிடிக்க தீர்மானித்த நிஜமான இந்துக்கள் சாதியத்தை இந்துத்துவ சட்டப்படி மறுக்கமுடியாது. ஏனெனில், சாதியம் இந்துத்துவத்தின் அதிகாரபூர்வமான சட்டம். சாதியம் என்ற ஆபத்தான அஸ்திபாரத்தின்மீதுதான் இந்துத்துவம் என்னும் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஆக, சாதி எனும் துர்நாற்றம் வீசும் இந்துத்துவத்தை விட்டு வெளியேறாமல், “சாதி ஒழிக” என்று கத்துவது, சாக்கடைக்குள் நின்றுகொண்டு, “துர்நாற்றம் ஒழிக” என்று கத்துவதற்கு சமம். சாதி அடுக்கமைப்பின் உச்சத்தில் அமர்ந்திருக்கும் பிராமணர்களுக்கு வேண்டுமானால் சாதியம் நறுமணமாக தெரியலாம். ஆனால், சாதியால் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு சாதியம் துர்நாற்றமாகத்தான் இருக்கும். அவர்கள் இந்துத்துவத்தை பின்பற்றுவது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது போன்றது. அது அஸ்திபாரம் இல்லாமல் வீடுகட்டுவது போன்றது. இந்துத்துவ சாதியத்தால் பாதிக்கப்படும் இந்துக்கள் இந்துத்துவத்தை விட்டு வெளியேறி, “சாதி ஒழிக” என்று கோஷமிட்டால் அது பயன் தரும்.
பகுத்தறிவும், மனிதநேயமுமுடைய கிறிஸ்தவர்களிடம், “சாதியம் கிறிஸ்தவ கொள்கை அல்ல; அது இந்துத்துவ கொள்கை; பைபிளுக்கும் சாதியத்துக்கும் சம்பந்தமில்லை” என்று பைபிளிலிருந்து வசனங்களை சுட்டிக்காட்டி சாதியத்துக்கு எதிராக நாங்கள் போதனை செய்யும்போது அவர்களில் பலர் மனம் திருந்துகிறார்கள். பலர் சாதி மறுப்பு திருமணம் செய்கிறார்கள். பேதகர்களாகவும், பாதகர்களாகவும் இருந்த போதகர்கள் பலர் மனஸ்தாபப்படுகிறார்களே! *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஒரு அமைப்பையே எங்களால் தொடங்கி நடத்தமுடிகிறதே! இந்துவாக இருந்துகொண்டே, ‘இந்துத்துவ சாதி மறுப்பு இயக்கம்’ நடத்த முடியுமா? இந்துத்துவத்தை சரியாக தெரிந்துகொள்ளாதவர்கள்தான் அப்படி தொடங்கமுடியும். மரம் நடவேகூடாது என்று அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஒரு பாலைவனத்தை எப்படி சோலைவனமாக மாற்ற முடியும்? அப்படி செய்வது சட்டத்துக்கு புறம்பானது அல்லவா!
இந்துக்களின் சாதி உணர்வுகளை இயக்கம் விமர்சிப்பதில்லை. ஏனென்றால், *சாதியம் என்பது இந்துக்களின் அதிகாரபூர்வமான கொள்கை.* இயக்கக் காணொலிகளை கூர்ந்து கவனிப்போருக்கு இது தெளிவாகத் தெரியும். கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதிப்பேயை ஓட்டுவதற்கு மட்டுமே நாங்கள் முயற்சி செய்கிறோம். இந்துக்களுடைய சாதி உணர்விலிருந்து விடுவிப்பது இயக்கத்தின் Bye-Law வில் எழுதப்படவில்லை.