கிறிஸ்து மக்களுக்கு நற்பண்புகளை கற்றுக்கொடுக்க மட்டும் வரவில்லை. தனது பாவமன்னிப்பு திட்டத்தை நம்பி ஏற்றுக்கொள்பவர்களை *தனியாக பிரித்து ‘சபை’ என்ற அமைப்பாக இணைக்கவும் வந்தார்.*
_ஆண்டவரும் தாம் மீட்டுக் கொண்டவர்களை நாள்தோறும் *அவர்களோடு சேர்த்துக் கொண்டேயிருந்தார்* (தி.ப. 2:47)._
என்று மறைநூல் கூறுகிறது. “இயேசுதான் இரட்சகர்” என்று மக்களை நம்பவைத்து அந்த நம்பிக்கையை வாயால் அறிக்கையிட வைத்தால் போதுமே என்று அன்றைய திருத்தூதர்கள் விட்டுவிடவில்லையே! நம்பிக்கையற்ற பிறரை நம்மைவிட்டு தனிமைப்படுத்துவது தவறல்லவா என்று அன்று திருத்தூதர்கள் சிந்திக்கவில்லையே! நாம் நம்மை கிறிஸ்துவின் சீடர் என்றோ, கடவுளின் பிள்ளை என்றோ அழைத்தால் பிறரை நாம் இழிவுபடுத்துவதாகாதா? என்று அன்றைய திருத்தூதர்கள்கள் சிந்திக்கவில்லை! ஏனென்றால், யாரானாலும் கிறிஸ்துவின் சீடராக மாறலாம். அதேபோல எந்த சாதியை சார்ந்தவராக இருந்தாலும் சாதியற்றோர் என்னும் பிரிவுக்கு நகரலாம். கிறிஸ்துவை
நம்பியவர்களை அவர் சபையாக சேர்த்த காரணம் என்ன என்பதை நாம் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.
மீட்கப்பட்டர்கள் *ஒற்றுமையாக* இருக்க கடவுள் எதிர்பார்க்கிறார். _தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் *அவர்களும் (விசுவாசிகள்) ஒன்றாய் இருப்பார்களாக!* இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும் (யோவான் 17:21)._ அதாவது *விசுவாசிகள் ஒற்றுமையாக இருந்தால்தான் இயேசுவை கடவுள்தான் அனுப்பினார் என்று உலக மக்கள் நம்புவார்கள்* என்று கிறிஸ்துவே சொல்கிறார். நாம் ஒற்றுமையாக இருப்பதன் முக்கியத்துவத்தை இங்கே நாம் தெளிவாக அறிகிறோம்.
சாதி மறுப்பைப் பற்றி யாராவது ஏதாவது கேள்வி கேட்டால் இன்று நாங்கள் அதை ஒரு குழுவாகக் கலந்தாய்வு செய்து, ஆவியானவருடைய வெளிப்பாடுகளைப் பெற்று கண்ணியத்தோடு பதில் சொல்கிறோம். பலரும் இந்த இயக்கத்தில் இணையும்போதுதான் நமது இயக்கத்தின் கொள்கையை மிக வேகமாகப் பிறருக்கு பரப்பமுடியும்.
திருத்தூதர் பவுல் நம்பிக்கையற்ற பிறரிடமிருந்து விலகி வாழ்வதைப் பற்றி என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள்.
_நம்பிக்கை கொண்டிராதவரோடு உங்களைப் பிணைத்துக் கொள்ளவேண்டாம். இறைவனுக்கு ஏற்புடைய நெறிக்கு, நெறிகேட்டோடு என்ன உறவு? ஒளிக்கு இருளோடு என்ன பங்கு? கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும் என்ன உடன்பாடு? நம்பிக்கை கொண்டோர்க்கு நம்பிக்கை கொண்டிராதவரோடு என்ன தொடர்பு? கடவுளின் கோவிலுக்கும் சிலைவழிபாட்டுக் கோவிலுக்கும் என்ன இணக்கம்? வாழும் கடவுளின் கோவில் நாமே. “என் உறைவிடத்தை அவர்கள் நடுவில் நிறுவுவேன். அவர்கள் நடுவே நான் உலவுவேன். நானே அவர்கள் கடவுள்! அவர்கள் என் மக்கள்!” என்று கடவுளே சொல்லியிருக்கிறார் அன்றோ! எனவே, *”அவர்கள் நடுவிலிருந்து வெளியேறுங்கள்; அவர்களை விட்டுப் பிரிந்து செல்லுங்கள்”* என்கிறார் ஆண்டவர். “தீட்டானதைத் தொடாதீர்கள். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொள்வேன் (2கொரி. 6:14-17)_
அதேபோல, சாதி பார்க்கக்கூடாது என்று சமூகத்துக்கு போதிப்பதோடு நின்றுவிடாமல், அந்த கொள்கையை ஏற்றுக்கொள்பவர்களை *சாதியற்றோர்* என்று *தனியாக இணைப்பதும்,* அவர்களுக்குள் ஒரு சகோதரத்துவ புரிதலை உருவாக்குவதும் நாட்டுக்கு மிகவும் பெரிய பலன்களை தரும்.
பொதுவாக இன்று ஒரு சாதியை சார்ந்தவர், அந்த சாதியின் பெயர் பிடிக்கவில்லை என்று வேறொரு சாதிக்கு மாற ஆன்மீக சட்டப்படியோ, அரசாங்க சட்டப்படியோ வாய்ப்பு இல்லை. திருட்டுத்தனமாக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து *’உயர்சாதி’* என்றும், *’தாழ்த்தப்பட்டவர்’* என்றும் சான்றிதழ் வாங்கியவர்கள் உண்டு. அவர்களை இங்கே குறிப்பிடவில்லை. ஆனால், தலைமுறை சாதி இழிவிலிருந்து தப்பிக்க *சட்டப்படி* வழி இல்லை என்பதே உண்மை. *’கீழ்சாதி’* என்று அழைக்கப்படும் ஒருவர் என்ன செய்தாலும் *’மேல்சாதியாக’* மாறமுடியாது. எத்தனை தலைமுறை கடந்தாலும் அவர் *’கீழ்சாதி’* என்றே அழைக்கப்படுவார். அந்த மன உளைச்சலிலேயே பல கோடி மக்கள் அனுதினமும் நடைபிணமாக வாழ்கிறார்கள்.
_”நாங்கள் யாரையும் கீழ்சாதியாக பார்ப்பதில்லை”_ என்று சில வேடதாரிகள் உதட்டளவில் சொன்னாலும், அவர்களுடைய இதயத்தில் சாதிப் பாகுபாட்டு உணர்வுகள் புரையோடியிருக்கின்றன என்பதே யதார்த்த உண்மை. திருமணத்திலே அந்த வன்மத்தை வெளிப்படையாக கண்டுபிடிக்கலாம்.
*சாதியால் பாதிக்கப்பட்டவர்கள்கூட அவர்களுடைய சாதி துர்நாற்றத்திலிருந்து வெளியேற விருப்பமின்றி வாழ்கிறார்கள்.* அதனாலேயே சாதிப் பெயர்களே அழிக்கப்படவேண்டும் என்று ஆதங்கப்படுகிறோம்.
பிற்போக்குத்தனமான பண்பாடுடையவர்கள் *’கீழ்சாதி’* என்றும், அவர்கள் ஆன்மீக விழிப்புணர்வு பெற்று நற்பண்பாளர்களாக மாறினால் *’மேல்சாதியாக’* மாறமுடியும் என்றும் இங்கே ஒரு திட்டம் இல்லையே! அப்படி மேம்பாடு அடையும் வாய்ப்பு இருந்தால் சாதியை ஓரளவு சகித்துக்கொள்ளலாமே! என்றைக்காவது ஒரு நாள் நாம் உயர்சாதியாக மாற வாய்ப்பு இருக்கிறது என்று நாம் சமாதானப்படலாமே! நாம் கடவுளின் பெயர் மாட்சிக்காக எந்த இழிவையும் சகிக்கலாம். நாம் இந்துத்துவ சாதி இழிவை சகிப்பதால் கடவுளுக்கு என்ன மகிமை கிடைக்கப்போகிறது?
‘சாதியற்றோர்’ என்ற பிரிவுக்கு யார் வேண்டுமானாலும் மாறலாம். அப்படி ஒரு சாதி உருவாவது நல்லதுதானே! ஏனெனில், மதிப்புக்குரிய மனிதநேயவாதிகள் சங்கமிக்கும் அந்த மேன்மையான சாதியில் யார் வேண்டுமென்றாலும் இணையலாம் என்பது நற்செய்தியல்லவா! அந்த சாதியற்ற பிரிவில் இணையும் சாதியற்றோரின் எண்ணிக்கை உயர உயர பாகுபாடுகளின் வீரியம் குறைந்துகொண்டே செல்லும். சகோதரத்துவம் தழைக்கும். அவர்களுக்கென்று திருமண தகவல் மையத்தை உருவாக்கி நடத்தலாம். அதன்மூலம் சாதி ஆணவ படுகொலைகள் தடுத்து நிறுத்தப்படும். எனவே, சாதிய இழிவிலிருந்து தப்பிக்க அறிவார்ந்த வழி ‘சாதியற்றோர்’ என்ற ஒரு பிரிவை உருவாக்கி, பிறரை அந்த பிரிவுக்கு வேகமாக நகர்த்துவதே ஆகும்.