088) சாதி பார்ப்பவர் கிறிஸ்தவரே அல்ல. இரட்சிக்கப்பட்டவர்கள் சாதி பார்க்கமுடியாது.

பதில்: மறைநூலில் காணப்படும் எபிரேய, கிரேக்க பெயர்களையோ, ஆங்கில பெயர்களையோ வைத்திருப்பவர்கள், மற்றும் கிறிஸ்தவ பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகள் எல்லோரும் கிறிஸ்தவர்கள் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் மறைநூல்படி அது சரியல்ல. கிறிஸ்தவர்கள் எந்த மொழியிலும் பெயர் வைத்திருக்கலாம். ஏனெனில், கடவுள் எந்த மொழிக்கும் ஆண்டவராக இருக்கிறார். ஆனால், தங்களைப் ‘பாவிகள்’ என்று ஒத்துக்கொண்டு, தங்களைப் பாவத்திலிருந்து மீட்கும் ஒரு மீட்பர் தேவை என்று புரிந்துகொண்டு, அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே என்று அறிந்து, கிறிஸ்து தன் உயிரை தனக்காக தியாகம் செய்து, உயிர்த்தெழுந்தார் என்று நம்பி (உரோ. 10:9-10), அவரிடம் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு மனப்பூர்வமாக ஒப்புரவு ஆகுவோரே கிறிஸ்துவின் சீடர்கள் (மத். 28:19) என்றும், கடவுளின் பிள்ளைகள் (யோவா. 1:12) என்றும் அழைக்கப்படுகின்றனர். கிறிஸ்துவின் சீடர்கள் அந்தியோக்கியா என்னும் இடத்தில் முதன்முதலில், *’கிறிஸ்தவர்கள்’* என்று அழைக்கப்பட்டனர் (தி.ப. 11:26). அந்த பதத்தை திருத்தூதர் பேதுரு தன் கடிதங்களில் பயன்படுத்துகிறார் (1பேது. 4:16). *கிறிஸ்தவர்* என்ற பதம் ஒரு தவறான சொல் அல்ல. ஆயினும், இயேசுவைத் தன் ஆன்ம மீட்பராக ஏற்றுக்கொண்ட உடனேயே அவர் அப்பழுக்கற்ற, முழு வளர்ச்சியடைந்த மனிதனாக மாறிவிடுவதில்லை. படிப்படியாக அவர் கிறிஸ்துவின் சாயலுக்கு நிகராக தேறினவராக வளர எதிர்பார்க்கப்படுகிறார். _எங்கள் உள்ளார்ந்த இயல்பு நாளுக்கு நாள் புதுப்பிக்கப் பெற்று வருகிறது. எனவே நாங்கள் மனம் தளர்வதில்லை (2கொரி. 4:16)_ என்று திருத்தூதர் பவுல் அதைத் தெளிவாக்குகிறார்.
_நான் இவற்றை ஏற்கெனவே அடைந்துவிட்டேன் என்றோ, நிறைவு எய்திவிட்டேன் என்றோ சொல்வதற்கில்லை. கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத் தொடர்ந்து ஓடுகிறேன் (பிலி. 3:12)_ என்று அவர் உறுதி செய்கிறார்.
அன்புள்ளவர்கள் பிறரை சாதி அடிப்படையில் புறக்கணிக்கமுடியாது. நாம் அன்பின் மேல்நிலைக்கு நகர நகர பிறரை ஏற்றுக்கொள்வது எளிதாகிவிடும்.
_உங்கள் மீது நாங்கள் கொண்ட அன்பு வளர்ந்து பெருகுவதுபோல, நீங்கள் ஒருவர் ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பையும் ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்வாராக! (1தெச. 3:12)_ என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார்.
விசுவாசிகளை ஆன்மீகமாக சகிப்புத் தன்மைகளின் உயர்நிலைக்கு உயர்த்தும் பொறுப்பு திருச்சபையின் மேய்ப்பர்கள் மற்றும் போதகர்களுடையது.
இன்று கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படும் பெரும்பான்மையானவர்கள் இந்துத்துவ சாதி உணர்வோடுதான் இருக்கிறார்கள். அதற்கு மிகப்பெரிய காரணம், அவர்களில் பெரும்பான்மையானோர் கிறிஸ்துவின் மீட்புத் திட்டத்தையே ஏற்றுக்கொள்ளவில்லை. பலர் கடவுளின் வார்த்தையாகிய மறைநூலை வாசிப்பதில்லை. இவர்கள் *’பெயர்க் கிறிஸ்தவர்கள்’* என்று அழைக்கப்படுகின்றனர். கிறிஸ்துவின் மீட்பின் முதல்படியை கடந்த பலர் சபையின் போதனைக்கு தங்களை ஒப்புக்கொடுக்கவில்லை. சாதி மறுப்பைப் பற்றி போதகர் பேசினாலும் இவர்கள் செவி சாய்ப்பதில்லை. போதகர்களே பெரும்பான்மையானோர் சாதி உணர்வாளர்களாக இருப்பதால் அவர்கள் சாதியம் ஒரு பாவம் என்று போதிக்கமுடியாது. சில போதகர்கள், “சாதியம் ஒரு பாவம்” என்று தெளிவாக, உறுதியாகத் தெரிந்தாலும்கூட, சாதி மறுப்பைத் தங்கள் சபையிலுள்ள மீட்கப்பட்ட விசுவாசிகளுக்கு போதிப்பதில்லை. காரணம், *சாதி உணர்வுடைய செல்வந்தர்கள் சபையைவிட்டு வெளியேறி, பாஸ்டருடைய வருமானம் பாதிக்கப்படும்* என்பதே நிதர்சனமான உண்மையாகும். ஆகவே, சாதியம் ஒரு பாவச்செயல் என்று தெரிந்துகொள்ள அவர்களுக்கு வாய்ப்பு இல்லை. அதை மனதில்கொண்டு, நாங்கள் *’கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்’* என்று ஓர் ஊழியம் செய்துகொண்டிருக்கிறோம்.
_கிறிஸ்துவைப் பற்றியே நாங்கள் அறிவித்து வருகிறோம். *கிறிஸ்துவோடு இணைந்து ஒவ்வொருவரும் முதிர்ச்சிநிலை பெறுமாறு ஒவ்வொருவருக்கும் அறிவுரை கூறி முழு ஞானத்தோடு கற்பித்து வருகிறோம்* (கொலோ. 1:28); நீ இவைபற்றிப் பேசு; *முழு அதிகாரத்தோடும் அறிவுறுத்திக் கடிந்து கொள்.* யாரும் உன்னைத் தாழ்வாக மதிப்பிட இடமளிக்காதே (தீத்து 2:15)_ என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார். ஒரு சீடன் முதிர்ச்சிநிலை பெறுமாறு அறிவுரை கூறி முழு ஞானத்தோடு கற்பிக்கவேண்டும் என்று இங்கே பார்க்கிறோம்.
இயேசுதான் மேசியா என்று நம்பி பின்தொடர்ந்த 12 திருத்தூதர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான பேதுரு, பெந்தெகோஸ்து நாளில் பிறமொழியில் பேசும் அடையாளத்தோடு தூய ஆவியாரின் அருட்பொழிவைப் பெற்றவர். ஒரே அருளுரையில் 3000 யூதர்களை கிறிஸ்துவின் மீட்புக்குள் நடத்தியவர். பல அரிய அற்புதங்களை கிறிஸ்துவின் பெயரால் நடப்பித்தவர். அவருடைய நிழல் பட்டு பல நோயாளிகள் குணமடைந்தனர். பலர் தீயஆவிகளிடமிருந்து விடுதலை அடைந்தனர். அவர் இறந்த சடலத்தை உயிரோடு எழுப்பியவர். ஆனால், அவருக்குள் யூதன் என்ற மேலாதிக்க உணர்வு இருந்தது. பெரும்பாலும் யூதர்கள் யூதரல்லாதவர்களை தரம் தாழ்ந்தவர்களாகத்தான் பார்ப்பார்கள். அந்த உணர்வு, மீட்கப்பட்டு, ஆவியாரின் அருட்பொழிவைப் பெற்று, ஊழியத்தில் வல்லமையாகப் பயன்படுத்தப்பட்ட திருத்தூதர் பேதுருவிடம் இருந்தது. ஆகவே, திருத்தூதர் பேதுருவை அந்த பாகுபாட்டு உணர்விலிருந்து விடுவிக்க, திருத்தூதர் 10-ம் அதிகாரத்தில் கடவுள் பேதுருவுக்கு ஒரு காட்சியை காட்டுகிறார். திருத்தூதர் பேதுரு அந்த காட்சியை பார்த்து, *”யாரையும் தீட்டுள்ளளவர் என்றோ, தூய்மையற்றவர் என்றோ புறக்கணிக்கக்கூடாது”* என்ற தெளிவைப் பெற்றுக்கொண்டார். அதற்குப் பிறகுதான் யூதரல்லாத கொர்நேலியு என்ற நூற்றுக்கு அதிபதியின் வீட்டுக்கு பேதுரு நற்செய்தி அறிவிக்கப் போனார். அதுவரை கிறிஸ்து தரும் மீட்பு கிறிஸ்தவர்களுக்கென்று மட்டுமே உரியது என்று நினைத்துக்கொண்டிருந்தார்.
புறவினத்தாரோடு உணவு உட்கொள்வதை யூதர்கள் பார்த்துவிட்டால் அது தனக்கு அவமானம் என்று நினைத்த திருத்தூதர் பேதுருவை, திருத்தூதர் பவுல் வெளிப்படையாக கண்டித்துப் பேசினார் (கலா. 2:12-14).
ஆக, ஒருவர் இயேசுவை ஏற்றுக்கொண்டதாலோ, அபிஷேகிக்கப்பட்டதாலோ, அற்புதங்கள் செய்ததாலோ அவர் சாதி மறுப்பாளராகிவிட்டார் என்று சொல்லிவிடமுடியாது.
ஒருமுறை எத்தியோப்பிய அரசி கந்தகியின் நிதியமைச்சர் மறைநூலிலுள்ள எசாயாவின் இறைவாக்கு நூலை வாசித்துக்கொண்டிருக்கும்போது பிலிப்பு என்ற திருத்தூதர் அவரை அணுகி, _*”நீர் வாசிப்பதின் பொருள் உமக்குத் தெரிகின்றதா?”* என்று கேட்டார். அதற்கு அவர், *”யாராவது விளக்கிக் காட்டாவிட்டால் எவ்வாறு என்னால் தெரிந்துகொள்ள முடியும்?”* என்று கேட்டார் (தி.ப. 8:31,30)._ அவர்தான் மறைநூலை வாசித்துக்கொண்டிருக்கிறாரே! அவருக்கு அதன் அர்த்தம் நிச்சயமாகத் தெரியும் என்று நினைத்து திருத்தூதர் பிலிப்பு கடந்து சென்றுவிடவில்லை. மறைநூலை வாசித்துக்கொண்டிருக்கும் அவரருகில் சென்று அதன் பொருள் உமக்குத் தெரிகின்றதா என்று கேட்டது திருத்தூதர் பிலிப்புவின் பொறுப்புணர்வைக் காட்டுகிறது.
_”நீர் வாசிப்பதின் பொருள் உமக்குத் தெரிகின்றதா?”_ என்ற கேள்வியை இன்று எல்லா போதகர்களும் தங்கள் சபையாரைப் பார்த்து கேட்கவேண்டும். விசுவாசிகளுக்கு புரியாவிட்டால் போதகர்கள் விளக்கிச் சொல்லவேண்டும். போதகருக்கும் தெரியாவிட்டால் சக போதகர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம். அவர்களுக்கும் தெரியாவிட்டால் ஆவியானவரிடம் கேட்கவேண்டும். அவரே நம்மை போதிப்பார். அவரும் உங்களுக்கு போதிக்காவிட்டால் உங்களுக்கு தெரியாது என்று சபையில் ஒப்புக்கொள்ளுங்கள். அதுவே கண்ணியமான ஊழியனுடைய அடையாளங்களில் ஒன்று. ஏனென்றால், _”மறைவானவை நம் கடவுளாகிய ஆண்டவருக்கு உரியவை. வெளிப்படுத்தப்பட்டவையோ, இத்திருச்சட்டத்தின் வார்த்தைகளைக் கடைப்பிடிக்குமாறு, நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவை” (இணை. 29:29)_ என்று மறைநூல் கூறுகிறது.
நீங்கள் உங்கள் கிறிஸ்தவ நண்பர்கள் யாரையாவது 20 பேரை அழைத்து _”உங்கள் பாஸ்டர் சாதியத்துக்கு எதிராக என்றாவது பேசியதுண்டா?”_ என்றும், _”உங்கள் ஊரில் கிறிஸ்தவ பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சாதி பார்க்காமல் மணமக்களைத் தேடுவார்களா?”_ என்றும் கேளுங்கள். அப்போதுதான் விசுவாசிகளின் பரிதாபநிலை உங்களுக்குத் தெரியும். சாதியம் கிறிஸ்தவத்தை மெல்லக் கொன்றுகொண்டிருக்கும் ஒரு ஆபத்தான விஷம் என்று சபையாருக்கு போதகர்கள் போதிக்காமல் சாதி ஒழியவேண்டும் என்று எதிர்பார்ப்பது, விதைக்காமலேயே அறுவடை செய்ய விரும்புவதற்கு சமமல்லவா! கடவுள் எனக்கு கொடுத்த அருளின்படி நான் சாதியத்தை எதிர்த்து பேசுவதால் பலர் சாதி உணர்விலிருந்து விடுதலை அடைந்து அந்த விடயத்தை எனக்குத் தெரியப்படுத்துகிறார்கள்.
*பரிசுத்தவான்*
_எபேசு சபையின் *பரிசுத்தவான்களுக்கு* எழுதுகிறதாவது (எபே. 1:1)_ என்று தன் கடிதத்தை எழுதத் தொடங்கிய திருத்தூதர் பவுல், _”உங்கள் மனப்பாங்கு *புதுப்பிக்கப்படவேண்டும்.* கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள். அவ்வியல்பு உண்மையான நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படும். ஆகவே *பொய்யை விலக்கி ஒருவரோடு ஒருவர் உண்மை பேசுங்கள்.* ஏனெனில், நாம் யாவரும் ஓருடலில் உறுப்புகளாய் இருக்கிறோம். சினமுற்றாலும் *பாவம் செய்யாதிருங்கள்;* பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும். அலகைக்கு இடம் கொடாதீர்கள். திருடர் இனித் *திருடாமல் இருக்கட்டும்.* மாறாக, தேவையில் உழல்வோருக்குப் பகிர்ந்து கொடுக்கத் தங்களிடம் பொருள் இருக்கும் வகையில், தாங்களே தங்கள் “கைகளால் நேர்மையோடு பாடுபட்டு உழைக்கட்டும். *கெட்ட வார்த்தை எதுவும் உங்கள் வாயினின்று வரக்கூடாது.* கேட்போர் பயனடையும்படி, தேவைக்கு ஏற்றவாறு, அருள் வளர்ச்சிக்கேற்ற நல்ல வார்த்தைகளையே பேசுங்கள். கடவுளின் *தூய ஆவியாருக்குத் துயரம் வருவிக்காதீர்கள்.* மீட்பு நாளை முன்னிட்டு உங்கள்மீது பொறிக்கப்பட்ட முத்திரையாக அவர் இருக்கிறார். *மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல்* எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள். ஒருவருக்கொருவர் நன்மைசெய்து பரிவு காட்டுங்கள்; கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் *மன்னியுங்கள்* (எபே. 4:23-32)_ என்று அறிவுறுத்துகிறார்.
இங்கே பரிசுத்தவான்கள் (தூய்மையாளர்கள்) என்று அழைக்கப்படுவோர் குற்றம் செய்யமுடியாது என்று பார்க்கமுடியவில்லை. மாறாக, அவர்கள் குற்றம் செய்யக்கூடாது என்று போதிக்கப்படுவதைப் பார்க்கிறோம்.
*பெயர்க் கிறிஸ்தவர்கள்*
*பரிசுத்தவான்கள் சீர்பொருந்த* சபையில் நியமிக்கப்பட்டுள்ள ஐந்து அலுவலர்களில் ஒருவர் *போதகர்*. அவர் நல்ல மனசாட்சியோடு, “சாதியம் மிகப்பெரிய பாவம்” என்று சபைக்கு போதிக்கவேண்டும். அப்போது சாதியம் ஒழியத் தொடங்கும். அப்படி போதிக்கும்போது சபையாரில் யாராவது அந்த போதனைக்கு எதிர்த்து நின்றால், அவர்களை விட்டுவிடலாம். கடவுளின் ஆவியார் பார்த்துக்கொள்வார். அதற்குப் போதகர் பொறுப்பேற்கமுடியாது.
_சபையில் பிளவு ஏற்படக் காரணமாயிருப்போருக்கு ஒருமுறை, தேவையானால் இன்னொரு முறை அறிவு புகட்டிவிட்டுப் பின் விட்டுவிடு; இப்படிப்பட்டவர் நெறிதவறியோர் என்பதும் தங்களுக்கே தண்டனைத் தீர்ப்பளித்துக்கொண்டு பாவம் செய்கிறவர்கள் என்பதும் உனக்குத் தெரிந்ததே (தீத். 3:10,11)_ என்று திருத்தூதர் பவுல் அறிவுறுத்துகிறார்.
கிறிஸ்து பேசும்போது, _”நான் உங்களுக்குச் சொல்கிறேன்; “தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ ‘முட்டாளே’ என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; ‘அறிவிலியே’ என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார் (மத். 5:22)_ என்று கிறிஸ்து எச்சரிக்கிறார். நம் சகோதரர்களை ‘அறிவிலியே’ என்று நாம் அழைத்தால் எரிநரகத்துக்கு போவோமானால், சகோதரர்களை “கீழ்சாதி” என்று அழைப்பவர் எங்கே போகத் தகுதியானவர்கள் என்ற கேள்வி மேலெழுகிறது என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
ஆக, *”சாதி உணர்வாளர்கள் கிறிஸ்தவர்களே அல்ல”* என்று நாம் பொதுவாக நியாயம் தீர்க்கமுடியாது. அப்படி மறைநூல் கற்பிக்கவுமில்லை. அப்படி யாரையும் நியாயம் தீர்க்கும் அதிகாரம் நம்மிடம் இல்லை. சாதி உணர்வுக்கு எதிராக மறைநூலின் அடிப்படையில் போதிக்கவேண்டும் என்பதே முக்கியம். ஆனாலும், சாதியம் என்பது பிறருக்கு தீங்கிழைக்கும் பாவம் என்று தெரிந்தும் மனப்பூர்வமாக அந்த தவறை செய்வது மீறுதல் என்று அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.