090) சாதிமறுப்பைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல் எல்லாவற்றையும் பற்றி பேசுங்களேன். சாதி மட்டும்தான் கிறிஸ்தவத்துக்குள் பிரச்சனையா?

பதில்: இந்த கேள்வியை தென்னிந்திய திருச்சபையைச் (CSI) சார்ந்த ஒரு சகோதரர் கேட்டார். அதற்கு பதிலாக “CSI-ல் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. ஆயர்களில் சிலர் மதுபானம் அருந்துகிறார்கள்; ஒன்றுக்கு மேற்பட்டோரோடு தாம்பத்தியம் கொள்வோருமுண்டு. விசுவாசிகளில் பலர் இரட்சிக்கப்படவில்லை; பலர் நோயோடிருக்கிறார்கள்; பலர் வறுமையில் வாடுகிறார்கள். அப்படியிருக்க, CSI-ன் logo-வில் *”that they all may be one”* (அதாவது, *அவர்கள் ஒன்றாய் இருப்பார்களாக)* என்ற ஒற்றுமையை வலியுறுத்தும் வாசகம் மட்டும் எழுதப்பட்டுள்ள காரணம் என்ன? மற்ற பிரச்சனைகளை ஏன் Logo-வில் குறிப்பிடவில்லை? என்று கேட்டேன். அவர் பதில் சொல்லவே இல்லை.
ஒருவர் தன் வீடு தீப்பிடித்து எரிவதை பார்த்தவுடன் ஓடிச்சென்று தன் வீட்டிலிருந்த எல்லோரையும் வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டு, பக்கத்து வீட்டிலுள்ளவர்களை உதவிக்கு அழைத்து, தீயணைப்புத்துறைக்கு தொலைபேசிமூலம் தகவல் தெரிவித்துவிட்டு, தீயை அணைக்க முயற்சி செய்துகொண்டிருந்தார். அப்போது ஒருவர் வந்து, *”தீயை மட்டும் அணைக்காதீங்க. உங்கள் பையனுக்கு ஒரு நல்ல வேலை இல்லை; உங்கள் மகளுக்கு நல்ல வரன் கிடைக்கவில்லை; உங்கள் மனைவிக்கு சுகர் இருக்குது; உங்க அம்மாவுக்கு பிரஷர் இருக்கு; உங்கள் அப்பாவுக்கு காது சரியா கேட்காது; இதையெல்லாம் சரிசெய்யுங்க. தீ மட்டும்தான் பிரச்சனையா?”* என்று கேட்டால் அவர் என்ன பதில் சொல்வாரோ அந்த பதிலைத்தான் நாங்களும் உங்களிடம் சொல்ல விரும்புகிறோம்.
ஆபத்தான நோய்களான *புற்றுநோய், காசநோய், சர்க்கரை நோய்* என்று எல்லா நோய்களும் நோய்கள்தான். அப்படியிருக்க, *கொரோணாவுக்கு* மட்டும் ஏன் அவ்வளவு தீவிரமாக அபாய எச்சரிக்கை மணி அடித்தார்கள்? ஒருகாலத்தில் வானொலிகளிலும், தொலைக்காட்சியிலும் முழுநேரமும் கொரோனாவைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்தனர். எல்லா நோய்களைப் போல கொரோனாவும் ஒரு நோய்தானே என்று அரசு ஏன் மெத்தனமாக விட்டுவிடமுடியவில்லை? எல்லா நோய்களும் கொரோனாவைப் போல *கொடிய, எளிதில் பரவும்* நோய்கள் அல்ல. கொரோனா நோய்க்கான வீரியமுள்ள தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நோயைப் பற்றி பயப்படவேண்டிய தேவை இல்லை. முகமூடி, கிருமி நாசினி போன்றவற்றை பயன்படுத்தவேண்டிய தேவை இருக்காது. சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டிய தேவையும் இருக்காது. வெற்றிகரமான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படுவதுவரை அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பியாக வேண்டுமல்லவா!
*வாய்ப்புண், குடல்புண், நகச்சுற்று, சருமத் தேமல், தூக்கமின்மை, ஆண்மை குறைவு, அஜீரண கோளாறு* என்று பல நோய்களால் பாதிக்கப்பட்ட ஒருவர், திடீரென்று ஒருநாள் விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டு அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், உயிருக்கே ஆபத்தை உருவாக்கி இருக்கும் பிரச்சனைக்குத்தானே அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்!
தலையில் அறுவை சிகிச்சை செய்வதல்லவா மிகவும் முக்கியமானது! அதைவிட்டுவிட்டு அவருடைய வாய்ப்புண்ணுக்கு சிகிச்சை செய்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
லட்சக்கக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக அவர்களுடைய சொந்த வாயாலேயே, “கிறிஸ்தவத்திலும் சாதிப் பாகுபாடுகள் இருப்பதால்தான் எங்களால் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை” என்று சொல்வதை நாம் காதாரக் கேட்டபிறகும், அந்த பிரச்சனையைப் பற்றி எந்த அக்கரையும் இல்லாமல் இருப்பது ஒரு முதிர்ந்த ஆன்மீகமா? யார் நரகத்துக்குப் போனால் எனக்கென்ன என்ற நினைப்போடு, பிறருடைய ஆத்துமாக்களைப் பற்றி எந்த அக்கரையும் இல்லாத சுயநலவாதிகள் மெத்தனமாக இருக்கலாம். நிஜமாகவே ஆத்தும பாரமுடைய நற்செய்திப் பணியாளர்களுக்கு ஒற்றை ஆன்மாகூட விலையேறப் பெற்றதாகத் தெரியும். ஊழியத்தை பணம் சம்பாதிக்கும் வியாபாரமாக நினைப்போருக்கு என்ன பொறுப்பு இருக்கப்போகிறது?
கிறிஸ்தவர்கள் பல பாவங்கள் செய்தாலும் அவைகள் எல்லாம் பாவங்கள் என்ற விழிப்புணர்வு கிறிஸ்தவர்களை சென்றடைந்துவிட்டது. விபச்சாரம் செய்யும் ஒரு கிறிஸ்தவர் விபச்சாரம் செய்வது தவறல்ல என்று நிச்சயமாக சொல்லமாட்டார். அது தவறு என்று அவருக்கு உறுதியாகத் தெரியும். அதேபோல எல்லா பாவங்களையும் பாவம் என்று கிறிஸ்தவர்களுக்குத் தெரியும். களவு செய்வது பாவமல்ல” என்று எந்த கிறிஸ்தவரும் சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை. சாதியைத்தவிர மற்ற எல்லா பாவங்களைப் பற்றியும் தாராளமாக கண்டித்துப் பேச பலர் இருக்கின்றனர். ஆனால், சாதியம் பாவம் என்று பெரும்பான்மையானோருக்குத் தெரியவில்லையே! ஏனெனில், சாதியம் என்பது *கிறிஸ்துவுக்கு* எதிராக கிறிஸ்தவர்கள் செய்யும் மகா பாதகம் என்று யாரும் அவர்களுக்கு போதிக்கவில்லையே! சாதியம் யாராலும் கண்டுகொள்ளப்படாத ஒரு ஆபத்தான சமூக தீமையல்லவா!
போதகர்கள் மூர்க்கத்தனமாக எங்களை எதிர்ப்பதைப் பார்க்கும்போது சாதி மறுப்பை அவர்கள் போதிப்பார்கள் என்று எங்களால் நம்பமுடியவில்லையே!
ஒரு போதகர் கெட்ட வார்த்தை பேசினால், அவர் பேசியதைக் கேட்ட விசுவாசிகள் அதன்பின் அவருடைய சபைக்கு போகமாட்டார்கள். ஒரு போதகர் மதுபானம் அருந்தினால், அவர் மது அருந்துவதைக் கண்ட விசுவாசிகள் அதன்பின் அவருடைய சபைக்கு போகமாட்டார்கள். ஒரு போதகர் திருடினால், அவர் திருடியதைக் கண்ட விசுவாசிகள் அதன்பின் அவருடைய சபைக்கு போகமாட்டார்கள். ஆனால், ஒரு போதகர் சாதி உணர்வாளர் என்று தெரிந்தும், சாதியால் பாதிக்கப்பட்ட விசுவாசிகள்கூட அதை ஒரு பாவமாகவே கருதாமல், அவருடைய சபைக்கே போகும் காரணம் என்ன? சாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கே சாதியம் தவறு என்று தெரியவில்லை.
‘சாதி பாகுபாடுகளை கடைபிடிப்பது *ஒரு கொடிய பாவம்’* என்பது பெரும்பான்மையான போதகர்கள், தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்களுக்கே தெரியாதே! மாறாக *”சாதிப் பாகுபாடுகள் தவறல்ல”* என்று அவர்கள் போதிக்கிறார்களே! வேதாகமக் கல்லூரியை தொடங்கி நடத்தும் போதகர்களே சாதிச் சேற்றிலிருந்து வெளியேறமுடியாமல் அதை சுகமாக நினைத்து சொறிந்துகொண்டிருக்கிறார்களே! பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் குற்றவுணர்வே இல்லாமல் சாதிப் பாகுபாடுகளைக் கடைபிடிக்கிறார்கள்.
சில சபைகளில் மருந்து எடுத்தாலே கர்த்தரின் பந்தியாகிய நற்கருணையில் பங்கெடுக்கவிடமாட்டார்கள். ஆனால், சக விசுவாசிகளை சாதி அடிப்படையில் இழிவுபடுத்துவோருக்கு கர்த்தரின் பந்தியில் பங்கில்லை என்று எந்த சபையிலும் சொல்லி நான் கேள்விப்பட்டதில்லையே!
சாதியத்துக்கு எதிராக மட்டுமே நாங்கள் பேசியிருந்தால், *”இந்து சகோதரர்களின் 100 கேள்விகளுக்கு பதில்கள்”* என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டு இருக்கமாட்டோமே! சாதியத்துக்கு எதிராக மட்டுமே நாங்கள் பேசியிருந்தால், “லஞ்சம் வாங்கி சம்பாதிக்கவேண்டாம்; அப்படி சேர்த்து வைப்பது நிலைப்பதில்லையே!”, “வரதட்சணை கேட்டு கொடுமை செய்யாதே நண்பா; பணஆசை எல்லா தீங்குக்கும் காரணமாய் இருக்கின்றது” என்ற பாடல்களை எழுதிப் பாடியிருக்கமாட்டோமே!
பல ஊழியர்களுக்கு சாதியம் பாவம் என்று தெரிந்தாலும் அவர்கள் அதை கண்டித்துப் போதிப்பதில்லையே! இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால் சாதி பார்த்துத்தான் நாம் திருமணம் செய்யவேண்டும் என்றே அவர்கள் போதிக்கிறார்களே! அதனால்தான் சாதி வக்கிர பாஸ்டர்களுடைய கொலை மிரட்டல்களையும், சாதிவெறி கிறிஸ்தவர்களின் அச்சுறுத்தல்களையும் அவதூறுகளையும் கருத்தில் கொள்ளாமல், கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதியத்துக்கு எதிராக இயக்கமாகத் தீவிரமாக பேசுகிறோம். சாதி என்னும் கோலியாத்தைப் பார்த்து போதகர்கள் என்ற சவுல்கள் ஓடி ஒளித்துக் கொள்ளும்போது, எங்களைப் போன்ற சிலரை தாவீதுக்களாக கடவுள் எழுப்பியுள்ளார் என்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறோம். *வயிற்றுப் பிழைப்பு* என்னும் ஈன நோக்கத்திலிருந்து மீட்கப்பட்டு கடவுளுக்கு மகிமை சேர்ப்பதைத் தங்கள் வாழ்வின் உன்னத இலட்சியமாகக் கொண்டு, சாதிக்கு எதிராக முழுவீச்சில் எல்லா போதகர்களும் சபையைக் கண்டித்து போதிக்கும் நாள்வரும்போது கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கமே தேவைப்படாது.