093) யூதனென்றும் இல்லை கிரேக்கன் என்றும் இல்லை’ என்று சொன்ன திருத்தூதர் பவுல் தன்னை பிறருக்கு அறிமுகப்படுத்தும்போது, “நான் தர்சு பட்டணத்து யூதன்” என்று அறிமுகப்படுத்துகிறாரே! அப்படியானால் திருத்தூதர் பவுல் சாதியத்தை எதிர்க்கவில்லை என்றுதானே அர்த்தம்!

பதில்: இது ஒரு அறிவுபூர்வமான கேள்வி. இதற்கான பதிலை *வேதத்திலிருந்து* நுட்பமாக ஆராய்ந்து கண்டுபிடிப்போம். ஏனெனில், ஒருவன் போதித்தால் *தேவனுடைய வாக்கியங்களின்படி* போதிக்கக்கடவன் (1பேதுரு 4 :11) என்று நாம் கற்பிக்கப்பட்டிருக்கிறோமே!
*நாம் எதை செய்தாலும் கடவுளின் மாட்சிக்காக செய்யவேண்டும் (1கொரி 10:31)* என்றும் ஆண்டவர் சொல்கிறார்
கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் ஒருவர் தன் கலாச்சாரமாவது பண்பாடாவது திருச்சபையின் வளர்ச்சிக்கோ, விசுவாசிகளின் பக்தி விருத்திக்கோ தடையாக இருக்குமானால் *அவற்றை விட்டுவிடவேண்டும்* என்பதே கிறிஸ்தவ ஒழுக்கம். அதில் ஒன்றுதான் இந்துத்துவ சாதி வேறுபாட்டு கொள்கை. சாதி அடிப்படையில் இன்று சபைகள் பிரிந்து கிடப்பது மிகவும் அவமானமாக உள்ளது. உலக அரங்கில் கிறிஸ்தவர்கள் தலை குனிந்து நிற்கிறார்கள். கிறிஸ்தவர்களுக்குள் காணப்படும் சாதி பாகுபாடுகளாலேயே கிறிஸ்தவம் *இந்தியா, இலங்கை* போன்ற நாடுகளில் புறக்கணிக்கப்பட்டு கிடக்கிறது. கிறிஸ்தவர்களின் *நிறவெறியாலும், இனவெறியாலும்* மேலைநாடுகளில் கிறிஸ்தவம் புறக்கணிக்கப்படுகிறது.
கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக, ஒரே
தந்தையின் பிள்ளைகள்போல் வாழவேண்டும் என்னும் நோக்கத்தில்
_”இனி உங்களிடையே *யூதர்* என்றும் *கிரேக்கர்* என்றும், *அடிமைகள்* என்றும் *உரிமைக் குடிமக்கள்* என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள *நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்.” (கலா 3:28)*_ என்று சபைக்கு கற்பித்தார் திருத்தூதர் பவுல். ஆனால், அப்படி போதித்த பவுல், _”நான் *யூதன்* (அப் 22:3); “நான் பிறந்த எட்டாம் நாள் *விருத்தசேதனம் பெற்றவன்;* *இஸ்ரயேல்* இனத்தவன்; *பென்யமின்* குலத்தவன்; எபிரேயப் பெற்றோருக்குப் பிறந்த *எபிரேயன்;* திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் *பரிசேயன்.”* (பிலி 3:5)_ என்றெல்லாம் சொல்லி பிறருக்கு தன்னை அறிமுகம் செய்கிறார். கிறிஸ்துவின் சிந்தையுடைய பவுல் இப்படி சொன்னதில் நிச்சயமாக ஒரு *இறையியல் நோக்கம்* இருந்திருக்கவேண்டும். இது திருத்தூதர் பவுல் தன் *தற்பெருமைக்காக* சொல்லியிருக்கமுடியாது. *எல்லாவற்றிலும் இயேசுவின் மூலம் கடவுள் புகழ் பெறும்படியே செய்திருக்கவேண்டும் (1பேதுரு 4:11, 1கொரி 10:31).*
ஒருவேளை இயேசுவை புறவினத்தார் மட்டும்தான் ஏற்றுக்கொள்வார்கள் என்று யூத மதவாதிகள் நினைத்திருக்கக்கூடும்; அந்த எண்ணத்துக்கு மறுப்பாக இப்படி தன் சுய விபரங்களை பவுல் அறிவித்திருக்கவேண்டும். *எதை நாம் செய்தாலும் எதற்காக செய்கிறோம் என்பதே மிக முக்கியமானது.* யூதாஸ் *இயேசுவைத்தான் இயேசு* என்று உண்மையைச் சொல்லிக் காட்டிக்கொடுத்தார். பொய் சொல்லவில்லை. ஆனால், அவர் என்ன நோக்கத்துக்காக அந்த உண்மையை சொன்னார் என்பதைதான் முக்கியமாக கருத்தில் கொள்ளவேண்டும். அன்பில்லாமல் சொல்லப்படும் உண்மை அன்போடு சொல்லப்படும் பொய்யைவிட ஆபத்தானது.
_அக்காலத்தில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, *கிரேக்க மொழி பேசுவோர் (கிரேக்கர்கள்)* தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று *எபிரேய மொழி பேசுவோருக்கு (எபிரேயர்கள்)* எதிராக முணுமுணுத்தனர். (அப். 6:1)._
இங்கே, *சில கைம்பெண்கள்* என்று குறிப்பிடவில்லை. *கிரேக்க கைம்பெண்கள்* என்று குறிப்பாக சொல்லப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் எதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டார்கள் என்பதை குறிப்பாக அறிவிக்க இரண்டு இனப்பெயர்கள் குறிப்பிடப்பட்டது எனக்கு தவறுபோல் தெரியவில்லை. ஆதி சபை விசுவாசிகளுக்கிடையே இன உணர்வு இருந்திருக்கவேண்டும். அதைத்தான் அந்த புத்தக ஆக்கியோன் வெளிப்படுத்தியிருக்கலாம்.
*கிறிஸ்தவர்களுக்கிடையே இன வேறுபாடுகள் இல்லை* என்று சுருக்கமாக பொத்தாம் பொதுவாக சொல்லாமல் *_யூதனென்றும் இல்லை; கிரேக்கனென்றும் இல்லை_* என்று கூர்மையாக தெளிவாக சொல்கிறார்.
அம்பேத்கார் *மஹர்* என்ற தான் சார்ந்திருந்த சாதியின் பெயரைச்சொல்ல வெட்கப்படவும் இல்லை; பெரியார் *நாயக்கர்* என்ற தன் சாதியின் பெயரைச்சொன்னது தற்பெருமைக்காகவும் அல்ல.
அம்பேத்கார் தன்னைத்தான் கீழ்சாதி என்று நினைத்திருக்கமுடியாது. அப்படிப்பட்ட தாழ்வு மனப்பான்மையில் அவர் வாழ்ந்திருந்தால் *இவ்வளவு பெரிய கருத்தியல் சண்டையில் ஈடுபட்டிருக்கமுடியாது.*
*அம்பேத்கர், பெரியார்* போன்றோரின் இடத்தில் ஒரு *பிராமணன்* எழும்பி புரட்சி செய்திருந்தால் சாதி ஒழிப்பு பணி இன்னும் அதிவேகமாக முடுக்கிவிடப்பட்டிருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
*பிராமண* சாதியில் பிறந்து இயேசுவை ஏற்றுக்கொண்ட ஒருவர் இந்தியாவில் எழும்பி சாதிக்கு எதிராக போராடமாட்டாரா என்று நான் காத்திருக்கிறேன்.
*தாழ்த்தப்பட்டவர்கள் மட்டும்தான்* சாதி ஒழியவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் என்று பலர் நினைக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் எல்லாருமே தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள்தான் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது தவறு என்று நிரூபிப்பதற்கு ஆதிக்க சாதியிலிருந்து சாதி மறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள், தங்கள் விட்டுவந்த சாதியின் பெயரை சொல்வது சில சூழ்நிலைகளில் தேவையானதே.
*சிரிப்போம் சிந்திப்போம்* என்ற நமது முதல் செய்தி வெளியீட்டைப் பார்த்துவிட்டு ஜாதி வெறியுடைய ஒரு தூத்துக்குடி பாஸ்டர், *”ஏலே நீ பறையனா?”* என்று என்னிடம் தொலைபேசியில் கேட்டார். தாழ்த்தப்பட்டவர்கள்தான் சாதி மறுப்பு கொள்கை உடையவர்களாக இருக்கிறார்கள் என்ற ஒரு தவறான புரிதல் அவரிடம் இருந்ததால்தான் என்னிடம் அப்படி கேட்டார். அதிலிருந்து, ஒடுக்கப்பட்டவரை ஒடுக்கப்படாதவர்கள் தூக்கிவிடமாட்டார்கள்; கிறிஸ்தவம் என்பது ஒரு அன்பற்ற சமூகம் என்பது தெளிவாக விளங்குகிறது.
நமக்கு ஆண்டவர் செய்த நன்மைகளை நாம் பிறரிடம் சொல்லாமலேயே கடவுள் உலக மக்களை தன்பக்கம் இழுக்கமுடியும். ஆனால், அதனால் உருவாகும் புகழைவிட நாம் அவருக்கு சாட்சிகளாக நிற்கும்போது கடவுளுக்கு உருவாகும் புகழ் அதிகமாக இருக்கும்.
*”யாரும் அரசு கொடுக்கும் இலவச சலுகையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்”* என்று யாராவது சிலர் கூறினால், ஜாதி ஒழிப்பதற்காக அரசு சலுகையை விட்டுக்கொடுத்தவர் ஒருவர், *”நான் விட்டுக்கொடுத்தேன்”* என்று சாட்சி சொல்லவேண்டும். அப்போது நாம் விட்டுவந்த சாதிப்பெயரை சொல்லவேண்டியிருக்கலாம். அது தவறல்ல.
ஒருவர் இயேசுவின்மூலம் புற்றுநோயிலிருந்து குணமடைந்தார் என்று வைத்துக்கொள்வோம்.
*இயேசுவால் நோய்களை குணமாக்கமுடியும்* என்ற உண்மையை இவர்மூலம் பலர் நம்பவேண்டுமானால் *”நான் புற்றுநோயாளியாக இருந்தேன்; இயேசு என்னை முழுவதும் குணமாக்கினார்”* என்று இன்ன நோயிலிருந்து குணமாக்கப்பட்டதை வெளியிடுவது தேவையல்லவா!
*இஸ்லாமியர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்* என்று ஒரு முஸ்லீம் சொன்னால், இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து, இயேசுவை ஏற்றுக்கொண்ட ஒரு நபரை சாட்சியாக நிறுத்தவேண்டியிருக்கலாம். அவருடைய அரபு மொழி பெயரை சொல்லவேண்டியிருக்கலாம்.
*”யாரும் சாதிமாறி திருமணம் செய்யமாட்டார்கள்”* என்று ஒருவர் சொன்னால், சாதி மறுப்பு திருமணம் செய்தவர் தன் சாதியையும் தன் மனைவியின் சாதியையும் சொல்லி நிரூபிக்க நேரிடலாம். அது தவறு அல்ல. நாம் எதை செய்தாலும் எதற்காக செய்கிறோம் என்பதே முக்கியம்.
*தீயவராக வாழ்ந்த ஒருவர் இயேசுவை ஏற்றுக்கொண்டு தூய்மையாக வாழ தொடங்கிவிட்டால், இந்த மாற்றம் இயேசுவால்தான் வந்தது என்பதை நிரூபிக்க அவரோடு வாழ்பவர்களிடம் விசாரித்து உறுதிசெய்ய வேண்டியிருக்கலாம்.*
விபச்சாரம் செய்துகொண்டிருப்பவர்களை நாம் இரட்சிப்புக்குள் கொண்டுவரவேண்டுமானால், *விபச்சாரத்தில் வாழ்பவர்களை இயேசுவால் மனமாற்றமடைய செய்யமுடியும்* என்று நிரூபிக்க, அந்த பாவத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் *விபச்சாரத்திலிருந்து விடுவிக்கப்பட்டேன்* என்று *கடவுளுடைய மகிமைக்காக* சாட்சியம் சொல்லவேண்டியிருக்கலாம். *”அதை எல்லாமா சாட்சியாக சொல்லுவாங்க! எல்லாரும் என்னை தவறாக நினைக்கமாட்டார்களா!!* என்ற தன்னலத்தோடு வாழ்ந்தால் அதே பாவத்தில் கிடக்கும் பிறரை மீட்பது கடினமாகிவிடும் அல்லவா! இப்படி வெட்கப்பட்டே கிறிஸ்தவம் நகர்வதால்தான் கிறிஸ்தவம் பயனற்ற ஒரு மதவாத அமைப்பாக ஒதுக்கப்படுகிறது. பவுலைப்போல தெளிந்த நீரோடையாக வாழ நாம் எதிர்பார்க்கப்படுகிறோம்.
_அவரது செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்” (யோவா. 3:30)_ என்பதே நமது நோக்கமாக, ஏக்கமாக இருக்கவேண்டும். இயேசுவின் புகழ்ச்சிக்காக வாழத் தீர்மானித்தோர், அதை சாதிப்பதற்காக தங்கள் சுயமரியாதையை தியாகம் செய்யவேண்டியிருக்கலாம்.
எனவே நாம் விட்டுவந்த சாதி பெயர்களை கடவுளின் பெயர் புகழ்ச்சிக்காக பயன்படுத்தவேண்டிய சந்தர்ப்பங்களில் மட்டும் தயங்காமல் பயன்படுத்தலாம் என்பதே கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தின் நிலைப்பாடு.