பதில்: இந்தியாவின் எல்லா பள்ளிகளிலும் மாணவர்கள் பொதுக்கூடுகையில் உறுதிமொழி எடுக்கும்போது, “இந்தியா எனது தாய்நாடு; அனைத்து இந்தியரும் என் உடன்பிறந்தவர்களே!” என்று சொல்கிறார்கள். மனதுக்கு நெகிழ்ச்சியூட்டும் அருமையான வரிகள் இவை. எல்லா இந்தியர்களும் நம் சகோதரர்களென்றால், எல்லோரிடமும் நாம் அன்புகாட்டவேண்டுமே! அன்புள்ளவர்கள் பிறரை மொழி அடிப்படையில் புறக்கணிக்கமுடியாதே! என்னைப் பொறுத்தவரையில் அனைத்து மனிதரும் ஆதாம் என்னும் ஒற்றை மனிதனிலிருந்து வந்தவர்கள் என்ற, மறைநூல் கூறும் வரலாற்று உண்மையை நான் நம்புவதால், இந்தியர்கள் மட்டுமல்ல; அனைத்து மனிதரும் என் சகோதரங்களே! என் கடவுச்சீட்டில் தேசியம் என்ற இடத்தில் இந்தியன் என்று கண்டிப்பாக எழுதியாகவேண்டும் என்று சட்டம் இருப்பதால் அப்படி எழுதியிருக்கிறேன். ஆனால், அகில உலகத்தையும் என் சொந்த ஊர்போல் நினைக்கும் மனமுதிர்ச்சிக்கு நான் வளர்ந்துவிட்டேன். எந்த நாட்டுக்காரனையும் எந்த நாட்டுக்காரனும் திருமணம் செய்யலாம் என்பதும் முக்கியமான நடைமுறை உண்மையாகும்.
தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் உள்ள இலட்சக்கணக்கான மக்கள் வேலை தேடிச் சென்னைக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். இங்கு அவர்களுக்கு வேலை கிடைக்கிறது. வேலை செய்கிறார்கள்; சொந்த தொழில் தொடங்கி, பணம் சம்பாதித்து, நிலம் வாங்கி, வீடுகட்டி, செல்வச் செழிப்போடு வாழ்கிறார்கள். இந்த ஆக்கிரமிப்பை சென்னை மண்ணின் பூர்வகுடிகள் சகித்துக்கொண்டார்களே! “வந்தேறிகளே எங்கள் மண்ணைவிட்டு வெளியேறுங்கள்!” என்று அவர்கள் போராடவில்லையே!
தமிழ் நாட்டிலுள்ள
லட்சக்கணக்கானோர் உயர் படிப்புக்காக, உயர் வேலைக்காக வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்குமே செல்கிறார்களே! அவர்களுடைய படிப்புக்குத் தக்க வேலை தமிழ்நாட்டில் கிடைக்காததாலும், அப்படியே வேலை கிடைத்தாலும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காததாலும் தமிழ்நாட்டைவிட்டு வெளியே சென்று படிக்கிறார்கள்; வேலை செய்கிறார்கள்; அங்கு சென்று சொந்த தொழில் தொடங்கி, பணம் சம்பாதித்து, நிலம் வாங்கி, வீடுகட்டி, குடியுரிமை வாங்கி, செல்வச் செழிப்போடு வாழ்கிறார்கள். அந்த மண்ணின் மொழியைக் கற்று, அந்த கலாச்சாரத்தை கடைபிடித்து, பலர் அந்த ஊர் மக்களைத் திருமணமே செய்கிறார்களே! இதைத் தவறு என்று எப்படிக் கூறமுடியும்?
அதேபோல, பிற மாநிலத்தவர்கள் உயர் படிப்புக்காகவும், தங்களுடைய மாநிலங்களில் வேலை வாய்ப்புகள் இல்லாததாலும், அப்படியே அங்கு வேலை கிடைத்தாலும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காததாலும், அவர்கள் வேலைதேடி பிற மாநிலங்களுக்கும் பிற நாடுகளுக்கும் போகிறார்கள். அவர்களில் சிலர் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். வேலை செய்கிறார்கள்; சொந்த தொழில் தொடங்கி, பணம் சம்பாதித்து, நிலம் வாங்கி, வீடுகட்டி, செல்வச் செழிப்போடு வாழ்கிறார்கள். வாக்குரிமை வாங்கி, தாம் விரும்பும் அரசியல் கட்சிக்கு வாக்களிக்கிறார்கள். இந்த மண்ணின் தமிழ் மொழியைக் கற்று, இந்த கலாச்சாரத்தை கடைபிடித்து, பலர் தமிழ்நாட்டு மக்களைத் திருமணம் செய்கிறார்கள். இதைத் தவறு என்று நாம் எப்படி கூறமுடியும்?
பிரிட்டன் நாட்டை இந்திய வம்சாவழியினர் ஆட்சி செய்யுமளவுக்கு பிரிட்டன் மக்களின் மனப்பான்மை முதிர்ந்துவிட்டது. தமிழ் நாட்டின் தொழிற்சாலைகளில் தமிழ் நாட்டினரை வேலைக்கு வைத்தால் அதிக சம்பளம் கேட்கிறார்கள் என்றும், அவர்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை என்றும், வட இந்தியர்கள் குறைந்த சம்பளத்தில் ஒழுங்காக வேலை செய்கிறார்கள் என்றும் தமிழ்தேசியவாதிகளே ஒத்துக்கொள்கிறார்கள். அதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
சூழ்நிலை இப்படியிருக்க, வட இந்தியாவினர் தமிழ்நாட்டில் படிப்பதை, வேலை செய்வதை, சொந்த தொழில் தொடங்குவதைத் தவறு என்று எப்படி சொல்லமுடியும்? கிறிஸ்தவ மறைநூலின்படி, வடஇந்தியர்களும் ஆதாம் ஏவாள் என்னும் ஆதிப் பெற்றோரிடமிருந்து வந்த நம் சகோதரர்கள்தானே! அவர்களின் மொழி, சாதி, நிற அடிப்படையில் அவர்களை நாம் வெறுக்கமுடியாதே! ஒட்டுமொத்த வட இந்தியர்களும் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டாலும் எனக்கு வருத்தம் இல்லை. இந்த மண்ணின் சட்டப்படி வாழ்ந்து, இம்மண்ணின் கலாச்சாரத்தை கண்ணியமாகக் கடைபிடித்து சகோதரத்துவ உணர்வோடு யாரும் இம்மண்ணில் வாழலாம்.
“தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் தமிழ் பேசும் தொழிலாளர்களை இந்தி பேசும் தொழிலாளர்கள் மதிப்பதில்லை; ஏமாற்றுகிறார்கள்; துன்புறுத்துகிறார்கள்; அதனாலயே வட இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வருபவர்களை தடை செய்யவேண்டும்” என்று பலர் கோரிக்கை விடுக்கிறார்கள். இந்தியாவில் யார் யாருக்கு எதிராகக் குற்றம் இழைத்தாலும் சட்டப்படி என்ன தண்டனை கொடுக்கப்படவேண்டுமோ அந்த தண்டனையை கொடுத்து சமூகத்தை சீரமைத்து முன்னோக்கிச் செல்லவேண்டுமே தவிர பிற மாநிலத்தவர் தமிழகத்திற்கு வரக்கூடாது என்று கூறுவது சமூக நீதியல்ல. பிற மாநிலத்தவர் தமிழ்நாட்டில் குடியேறுவதைத் தவறு என்று இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படியும் கூறமுடியாது.
தமிழ்நாட்டில் தோன்றிய தத்துவ அறிஞர்கள், ஞானிகள் எழுதிய இலக்கியங்கள் கூறும் முற்போக்கான வாழ்வியல் தத்துவங்களை உலகின் எல்லா மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பு செய்து உலகம் முழுக்க பரப்பவேண்டும். எந்த மண்ணின் அறிஞர்கள் கூறியதையும் பரிசீலனை செய்து அவற்றுள் பயனுள்ள எல்லாவற்றையும் தமிழுக்கும் மொழிபெயர்க்கவேண்டும்.
தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் தமிழர்களே தமிழர்களை மதிக்காமல் துன்புறுத்துகிறார்கள்; ஏமாற்றுகிறார்கள். தமிழர் சக தமிழரை கொலை செய்யும் செய்திகளையே செய்தித்தாளில் பார்க்கிறோம். ஒரு தமிழர் சக தமிழருடைய வீடுபுகுந்து அவருடைய பொருட்களைத் திருடவில்லையா? ஒரு பச்சைத் தமிழன் ஒரு பச்சைத் தமிழச்சியை கற்பழிப்பதை கேள்விப்படுகிறோமே! திருவள்ளுவர் எழுதிய திருக்குறளைப் பற்றி பெருமையாகப் பேசிவிட்டு பிறர்மனை நோக்காமை என்னும் தலைப்பிலான குறள்களை மனப்பாடம் செய்துவிட்டு, அடுத்தவருடைய மனைவியை இச்சிப்பது அநியாயமல்லவா! தமிழ் ஆண்கள் தங்கள் தமிழ் மனைவிகளுக்கும், தமிழ் பெண்கள் தங்கள் தமிழ் கணவர்களுக்கும் துரோகம் செய்து பிறன்மனை நோக்கவில்லையா? அதை சகித்துக்கொள்ளலாமா? அப்படி செய்வது தவறு இல்லையா?
இந்தி பேசுபவர்கள் தமிழர்களுக்கு தீங்கு இழைப்பதுதான் தவறு; தமிழர் தமிழருக்கு தீங்கு இழைப்பது தவறல்ல என்றால் நம்மிடம் இருப்பது சாதிவெறியின் வேறொரு வடிவமாகிய மொழிவெறியல்லவா! யாரும் எந்த மொழியையும் கற்கலாம். பிறருக்கு கற்றுக்கொடுக்கவும் செய்யலாம். தமிழ் மொழி பேசுபவர் பிறமொழி பேசுபவரைவிட நல்லவர் என்று சொல்லிவிடமுடியாது. தாய்மொழி என்று எதுவும் நமக்கு இல்லை. பெங்களுரில் ஒரு தெலுங்கு பேசும் பெண், தமிழ் பேசும் ஒரு ஆணைத் திருமணம் செய்து பிறந்த மகன் 5 மொழிகளில் பேசுகிறான். அவன் தாய்மொழி என்ன?
என் பார்வையில் தமிழ் நாட்டில் வாழும் நாம் நம்மை, ‘தமிழர்கள்’ என்று அழைத்து பிறரிடமிருந்து நம்மை அந்நியப்படுத்துவதைவிட தமிழ் பேச, எழுத, வாசிக்க பிறர் தமிழில் பேசினால் விளங்கிக்கொள்ள முடிந்த மனிதர்கள்” என்று அழைப்பதே அறிவாண்மை என்று சொல்வதே நன்று.