096) தலித் இந்துக்களுக்கு கொடுக்கப்படும் இடஒதுக்கீட்டை தலித் கிறிஸ்தவர்களுக்கும் கொடுக்காமல் அரசு அநியாயம் செய்கிறதே!

பதில்: முன்பு சாதியால் பாதிக்கப்பட்டோருக்கும், தற்போது சாதியால் பாதிக்கப்படுவோருக்கும் அந்த பாதிப்புகளுக்கான இழப்பீடாக இன்று இடஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது. அந்தவகையில், அன்று இந்து தலித்துகளுக்கான இடஒதுக்கீடு கிறிஸ்தவ தலித்துகளுக்கு மறுக்கப்பட்ட காரணம்: அந்த நாட்களில் கிறிஸ்தவர்களாக மாறிய தலித்துகள் அன்று வாழ்ந்த சக கிறிஸ்தவர்களால் சமமாக, சகோதரங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கலாம். ஆனால், இன்று சபையில் தலித் கிறிஸ்தவர்களை சக கிறிஸ்தவர்கள் நன்மனதோடு ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஆகவே, இந்து தலித்துகளுக்கு கொடுக்கப்படும் இடஒதுக்கீடு கிறிஸ்தவர்களுக்கு இன்று மறுக்கப்படுவது அநியாயம்தான். கிறிஸ்வர்களுக்குள் சாதிப் பாகுபாடுகளே இல்லாவிட்டால், ஒடுக்கப்பட்டோருக்குரிய இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிடலாம். ஆனால், கிறிஸ்தவர்களுக்குள் சாதிப் பாகுபாடுகளையும், தீண்டாமையையும் தீவிரமாக கடைபிடிக்கிறார்களே! கிறிஸ்தவர்களுக்குள் சாதி பாகுபாடுகளே இல்லை என்று கூறுவது பொய்யல்லவா! ஆக, தலித் இந்துக்களுக்கு கொடுக்கப்படும் இடஒதுக்கீட்டை தலித் கிறிஸ்தவர்களுக்கும் கொடுக்காமல் அரசு அநியாயம் செய்கிறது என்பது மிகச் சரியே. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒருவர் கிறிஸ்தவராக மாறியவுடன் பணக்காரராக மாறிவிடுகிறார் என்று சொல்லிவிடவும் முடியாது. ஆனால், அரசு கிறிஸ்தவர்களுக்கு அநியாயம் செய்தாலும், நாம் அரசிடம் இந்து என்று பொய் சொல்லக்கூடாது. இடஒதுக்கீடு விஷயத்தில் அரசிடம் நாம் ஏதாவது கோரிக்கையை முன்வைக்க விரும்பினால் அதை சட்டப்படி கேட்கலாமேஒழிய பொய் சொல்லக்கூடாது.
முற்காலத்தில் இந்துத்துவக் கொடுமைவாதிகளால் கொடுமைக்கு உள்ளான முன்னோர்களின் கிறிஸ்தவ தலைமுறையினர் இயேசு கிறிஸ்துவின் அன்பை முன்னிட்டு, நம் மூதாதையர்களைக் கொடுமைப் படுத்தியவர்களை மன்னித்து, நமக்கு நியாயப்படி வரவேண்டிய இழப்பீட்டையும் விட்டுவிடுவதே சாலச் சிறந்தது. கிறிஸ்துவின் சீடர்களுக்கும் பிறருக்குமுள்ள மிகப் பெரிய வேறுபாடாக இந்த மாண்பை பிறர் புரிந்துகொண்டு அவர்கள் கடவுளை மகிமைப்படுத்தட்டும்.