097) சாதி உணர்விலிருந்து விடுபடமுடியவில்லையே! அதிலிருந்து விடுபட நான் என்ன செய்யவேண்டும்?

பதில்: சாதிப் பேயிடமிருந்து விடுதலை அடையவேண்டுமென்ற உங்கள் ஆர்வத்தை முதலாவது பாராட்டுகிறேன். நீங்கள் சாதி உணர்விலிருந்து விடுதலை அடைய விரும்புவதால் நிச்சயமாக கடவுள் உங்களை விடுவிப்பார். கேட்கிற எவனும் பெற்றுக்கொள்கிறான் என்று மறைநூல் கூறுகிறது. இயேசு கிறிஸ்து என்னும் இறைமகன் நாம் விடுதலையோடு வாழும்படிக்கு சிலுவையில் துடிக்கத் துடிக்கத் தன் உயிரைக் கொடுத்த காரணம் நிச்சயமாக நம்மை விடுதலையாக்குவதற்காகத்தான் என்னும் சத்தியத்தை அறியும்போது அந்த சத்தியம் நம்மை விடுதலையாக்கும்.
பிறரை நாம் பிறசாதி என்றும் கீழ்சாதி என்றும் கருதுவதன் காரணம் நமது அன்பில்லாமையாகும். இதைக் கற்றுக்கொள்ள பல்கலைக் கழகத்துக்குச் சென்று கற்கவேண்டிய தேவை இல்லை. தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரை நேசிப்பவர்கள் பிறரை கீழ்சாதி என்றோ, பிறசாதி என்றோ புறக்கணிக்கமுடியாது. இன்று சக மனிதனை நேசிக்க முடியாமல், கடவுளிடம் அதீத பக்தி காட்டும் மக்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், கண்ணுக்குத் தெரிந்த சக மனிதனை கீழ்சாதி என்றும், பிறசாதி என்றும் புறக்கணித்துவிட்டு கண்ணுக்கு தெரியாத கடவுளிடத்தில் காட்டும் பக்தியில் அர்த்தம் ஏதுமில்லை என்பதை நாம் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். கடவுளுடைய சாயலாக படைக்கப்பட்ட சக மனிதனை சாதி அடிப்படையில் புறக்கணிப்பது அவரைப் படைத்த கடவுளையே புறக்கணிப்பதற்கு சமம்.
“ஆண்டவராகிய இயேசுவே, சாதி உணர்விலிருந்து என்னைக் காப்பாற்றும்” என்று கடவுளிடம் வேண்டுங்கள். சாதி மறுப்பு கொள்கையுடைய பல கிறிஸ்தவ நண்பர்களோடு நட்புறவில் இணையுங்கள். அவர்களோடு இணைந்து கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். முடிந்தால் உண்ணாநிலை வேண்டல் செய்யலாம்.
நீங்கள் சாதி சங்கத்தில் இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அதன் தொடர்பிலிருந்து வெளியேறுங்கள். சாதி மறுப்பு புத்தகங்களை வாசியுங்கள். நமது இயக்கத்தின் கேள்வி பதில்களை இயக்க இணைய தளத்திற்கு (nimmathi.com) சென்று படியுங்கள். சாதி சங்கப் பத்திரிக்கை படிப்பதை நிறுத்திவிடுங்கள். உங்களைவிட தாழ்ந்த சாதி என்று உலகத்தால் கருதப்படும் மக்களின் வீட்டுக்கு சென்று அவர்கள் தருவதை உண்ணுங்கள். அவர்களுடன் அன்பை பகிருங்கள்.
உங்களுக்காக நாங்களும் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறோம். இயக்கத்தோடு தொடர்பில் இருங்கள்.