100) நான் கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணைந்துவிட்டேன். இனி நான் என்னென்ன செய்யவேண்டும்?

பதில்: உங்கள் அனுதின பிரார்த்தனை நேரத்தில் இயக்கத்தின் வளர்ச்சிக்காக கடவுளிடம் வேண்டுங்கள். அதாவது, கிறிஸ்தவர்கள் சாதி உணர்விலிருந்து விடுதலை அடைய, உறுப்பினர்கள் உற்சாகமாக களமாட வலிமை வேண்டி வேண்டுதல் செய்யுங்கள்.
ஆன்மீகமாக வளரும் நோக்கத்தில் தினமும் மறைநூலை படியுங்கள். “அன்புள்ளவர்கள் பிறரை சாதி அடிப்படையில் புறக்கணிக்கமுடியுமா?” என்ற புத்தகத்தையும், “சாதி உணர்வுக் கிறிஸ்தவர்களின் 100 கேள்விகளுக்குப் பதில்கள்” என்ற புத்தகத்தையும் வாசியுங்கள்.
சாதி மறுப்புக் கேள்வி பதில்கள் www.nimmathi.com என்ற இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை வாசியுங்கள். இயக்கத்தில் உங்களை இணைப்பதற்காக உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளை நீங்கள் சமூக ஊடகங்கள்மூலம் (Whatsapp, Facebook…) உங்களுக்கு தெரிந்த எல்லா கிறிஸ்தவர்களிடமும் கேட்டு அவர்களை நம் இயக்கத்தில் இணையுங்கள். அவர்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் எழுந்தால், அவற்றிற்கு பதில் கொடுங்கள். பதில்கொடுக்க தெரியாவிட்டால் மேற்கண்ட இணையதளத்துக்குச் சென்று அவர்களுடைய சந்தேகங்களுக்குப் பதில் சொல்லும் கேள்வி பதில்களை அவர்களுக்கு அனுப்புங்கள். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் இயக்க வட்ட, மாவட்ட, உயர்மட்ட பொறுப்பாளர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
சாதி மறுப்பு ஆடைகள், தோள்பைகளை வெட்கப்படாமல், பயப்படாமல் பயன்படுத்துங்கள். நம் ஆண்டவர் நமக்காக தன் உயிரையே கொடுத்துள்ளார்.
சாதியம் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு எப்படி பெரிய தடையாக இருக்கிறது என்றும், நீங்கள் சாதியால் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி பாதிக்கப்பட்டீர்கள் என்றும், இயக்க போதனைகள்மூலம் நீங்கள் என்னென்ன கற்றுக்கொண்டீர்கள் என்றும், இயக்கத்தோடு இணைந்து நின்று நீங்கள் என்னென்ன செய்யப் போகிறீர்கள் என்றும் ஒரு சிற்றுரை எழுதி இயக்கத்தின் பொதுச் செயலருக்கு அனுப்புங்கள்.
இயக்கம் நடத்தும் நேரடிக் கூட்டங்களிலும், இணையவழிக் கூடுகைகளாலும், விழிப்புணர்வு நிகழ்வுகளிலும் பங்கெடுங்கள்.
உங்கள் போதகர், சபையார் மற்றும் பிற
கிறிஸ்தவ நண்பர்களிடத்திலும் இயக்கத்தை அறிமுகப்படுத்துங்கள்.
சக உறுப்பினர்களோடு நல்லுறவை வளர்த்துக்கொள்ள முயலுங்கள்.