இஸ்லாமியர்கள் சாதி பார்ப்பதுபோல நாமும் சாதி பார்த்தால் அவர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? நம் கடவுள் எப்படி மகிமை அடைவார்? இஸ்லாமியர் 4 மனைவிகளை வைத்துக்கொள்வதால் நீங்களும் வைத்துக்கொள்வீர்களா சார்?
“முஸ்லிம்களுக்குள் பிரிவினைகளும் பாகுபாடுகளும் இருக்கின்றனவே!” என்று உடனே கேள்வி கேட்டு நாம் செய்யும் இந்த பெருந்தவறை நியாயப்படுத்தக்கூடாது. இஸ்லாமியர்களுக்குள் ஷியா, அஹமதியா, சன்னி, கவரிஜ், இபாதி என்று சில கொள்கைப் பிரிவுகளும் ஷேக், குரைஷி, கான், கலீபா, லெப்பை, மாப்பிளை, அன்சாரி, சயீது, மரக்காயர், ராவுத்தர், பட்டான், நாயக் என பல சமூக வேறுபாடுகளும் இருக்கின்றன. இவைகளை நான் நியாயப்படுத்த வரவில்லை. ஆனால், ஆறுமுகசாமி நாடார் கிறிஸ்தவராக மாறும்போது, ஆரோக்கியசாமி நாடாராக மாறுகிறார். ஆனால், இஸ்லாமியராக மாறும்போது அப்துல்லா நாடாராக மாறுவதில்லை. இந்துத்துவ நம்பிக்கையாளராக இருக்கும்போது ‘இந்து பறையர்’ என்று அரசுப் பதிவேட்டில் எழுதப்பட்டது, கிறிஸ்தவராக மாறியபின் ‘கிறிஸ்தவப் பறையர்’ என்று எழுதப்படும். ஆனால், இஸ்லாத்துக்குப் போனால் ‘இஸ்லாமியப் பறையர்’ என்று எழுதப்படுவதில்லை. இது முஸ்லீம்கள் இந்துத்துவ வர்ணாசிரம அடிமைத்தன கொள்கையை நிஜமாகவே வெறுக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
இந்துவாக இருக்கும்போது இருந்த இனஇழிவு கிறிஸ்தவராக மாறியபின்பும் அகலாவிட்டால் இயேசுவுக்கு என்ன சிறப்பான மதிப்பு கிடைக்கப்போகிறது? கிறிஸ்தவத்தில் அந்த இந்துத்துவ சாதி அடையாளம் அவரைவிட்டு மறையவில்லை என்பது மறைக்கமுடியாத வரலாற்று உண்மையல்லவா! இதற்கு காரணம் சாதியம் என்னும் புற்றுநோய் எவ்வளவு ஆபத்தானது என கிறிஸ்தவப் போதகர்கள் யாரும் போதனை செய்வதில்லை. காரணம் போதகர்களே சாதி உணர்வுக்கு அடிமைப்பட்டு கிடக்கிறார்கள். ஆனாலும், தாங்கள் கடைபிடிக்காத சமத்துவக் கொள்கையை, அவர்கள் பிறருக்குப் போதிக்காமல் இருப்பதற்காகவே கிறிஸ்தவ ஊழியர்களுக்கு நன்றி செலுத்தவேண்டும்.
சாதியத்திலிருந்து விடுதலையைத் தேடி ஒடுக்கப்பட்டவர்கள் இயேசுவிடம் வரவில்லையே! அவர்கள் இஸ்லாத்துக்கு அல்லவா நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்! இதிலிருந்து ஒடுக்கப்பட்டவர்கள் கிறிஸ்தவர்களின் சகோதரத்துவத்துக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் போட்டுவிட்டார்கள் என்று உங்களுக்கு தெரியவில்லையா? நான் பரீட்சை எழுதிவிட்டு அதற்கு நானே மதிப்பெண் கொடுத்துக்கொள்ளலாமா? அந்த பாடத்தில் வல்லுநராகிய ஒரு ஆசிரியர் அல்லவா மதிப்பெண் தரவேண்டும்! கிறிஸ்தவர்களின் வாழ்க்கைத் தரத்துக்கு கிறிஸ்தவர்களே ‘யோக்கியதைச் சான்றிதழ்’ கொடுத்து திருப்தி அடைவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
ஒரு தாழ்த்தப்பட்டவர் இஸ்லாத்தை ஏற்ற உடனேயே தன்னை இஸ்லாமியர் என்று அரசாங்கத்தில் பதிவு செய்கிறார். அவர் இந்து SC என்று பொய் சொல்வதில்லை. அது தவறு என்று அங்கு போதிக்கிறார்கள். ஆனால், பெரும்பான்மையான கிறிஸ்தவ பாஸ்டர்கள் தங்கள் பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும்போது மனசாட்சியே இல்லாமல் இந்து SC என்றுதான் சேர்க்கிறார்கள். இப்படி 60-வது வயதுவரை தொடர்ந்து இந்து என்று பொய் சொல்லும் ஒரு கிறிஸ்தவரை பரலோகம் ஏற்றுக்கொள்ளுமா?
மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது (மத். 5:16), நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து, எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக (தீத்து 2:7, 8) என்றல்லவா பைபிள் கூறுகிறது.
சாதி ஒழித்து சகோதரத்துவத்தை நிலைநாட்டவேண்டும் என்னும் ஒற்றை நோக்கோடு மட்டுமே உயிர்வாழ்ந்த பெரியார் என்னும் பேரறிஞன், “இன இழிவு நீங்க இஸ்லாம் நன்மருந்து” என்று தன் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். சகோதரத்துவ விஷயத்தில் பெரியார் கிறிஸ்தவத்துக்கு ஏன் மதிப்பளிக்கவில்லை என்பதை மனத்தாழ்மையோடு சிந்திக்கவேண்டுமல்லவா? தவறு யார் செய்தாலும் அதை முதிர்ந்த மனதோடு ஒத்துக்கொண்டு திருந்துவது அல்லவா கிறிஸ்தவ கொள்கை! கிறிஸ்தவரிடம் இல்லாத ஏதோ ஒன்றை* ஒடுக்கப்பட்டவர்கள் இஸ்லாமியரிடம் கண்டதால்தானே இஸ்லாத்துக்கு நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்!
கிறிஸ்தவனாகிய என் பிள்ளை தவறு செய்யும்போது, “பக்கத்துவீட்டு இந்து பிள்ளையும் அதே தவறை செய்கிறதே!” என்று சாக்குப்போக்கு சொல்லி தட்டிக்கழிப்பதுதான் கிறிஸ்தவ கொள்கையா?
இரட்சிக்கப்படாதவனிடம் இருக்கும் மனமுதிர்ச்சிகூட இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்களிடம் இல்லாவிட்டால் இந்த கிறிஸ்தவ இரட்சிப்பை யார் மதிப்பார்கள்?
இந்துத்துவ நிர்வாகத்துக்கு உட்பட்ட, சென்னையிலுள்ள ஒரு பள்ளியிலுள்ள ஒரு ஆசிரியர் அந்த பள்ளியிலுள்ள மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட விவகாரம் விவாதத்துக்கு வந்தபோது, சில இந்துத்துவ அரசியல்வாதிகள், “கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களிலும் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்களே!” என்று பேசி மழுப்ப முயற்சி செய்தார்கள். அதுபோலத்தானே கிறிஸ்தவர்களின் வக்கிர சாதி பேதங்களை மூடி மறைக்க நீங்கள் முயற்சி செய்கிறீர்கள்!