பரிசுத்த வேதாகமத்தை பலரும் பலகோணத்தில் பார்த்து, பலவிதத்தில் புரிந்துகொண்டதாலேயே இவ்வளவு சபைப்பிரிவுகள் உருவாகியுள்ளன. ஆனால், கிறிஸ்து மனிதனுடைய பாவத்திலிருந்து அவனை மீட்கவந்தார் என்னும் உண்மையை கிறிஸ்தவர்கள் எல்லாரும் ஏற்றுக்கொண்டு, நம்பிக்கை வைக்கின்றனர். கிறிஸ்துவைப் பின்பற்றும் ஒரு சிலர் தோற்றத்தில் எளிமையாக இருக்க வேண்டுமென நகை, பூ, பொட்டு அணிவதில்லை. ஒருசிலர் தங்களுடைய ஆன்மீக நம்பிக்கையை பிறர் தெரிந்து கொள்ள வேண்டுமென வெண்ணுடை அணிவர். கிறிஸ்தவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்த ஒருசிலர் பகட்டான உடையணிவர். ஒருசிலர் அமைதியான முறையில் கடவுளை ஆராதிப்பர். வேறுபலர் ஆரவார ஆர்பாட்டத்தோடு கடவுளை ஆராதிப்பர். ஒருசிலர் கர்நாடக இசையில் பாடல்களைப் பாடுவதில் முனைப்பாக இருக்கின்றனர். வேறுபலர் ஆங்கிலேய மொழிநடையில் பாடுகிறார்கள். ஒரு சபையின் ஊழியர் அங்கி அணிகிறார். வேறொரு சபையின் ஊழியர் கோட், சபாரி சூட் அணிகிறார். ஒருசிலர் ஜிப்பா, வேட்டி அணிகின்றனர்.
ஒருசிலர் ஜெபவீட்டுக் கட்டடம் பார்ப்தற்கு அழகாக இருக்கவேண்டும் என்பதற்காக அந்த கட்டடத்திற்காக லட்சக்கணக்கில் செலவு செய்கிறார்கள். வேறுசிலர் அதே பணத்தில் அலங்காரமில்லாமல் பல ஜெபவீடுகளைக்கட்டி விடுகிறார்கள். பிராமணர்கள் ஜாதிப்பற்றும் ஆச்சார உணர்வும் உடையவர்கள். அவர்களை கர்த்தர் பக்கம் திருப்ப அவர்களுடைய கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சிலசபைகள் உருவாகி இருக்கின்றன. அண்மையில் ஒரு சகோதரன் என்னிடம், “பாத்திமாவில் மாதா காட்சியளித்ததை நம்புகிறீர்களா?” என்று அன்போடு கேட்டார். “இது பைபிளில் எழுதப்பட்டுள்ளதா? என்று அவரிடம் கேட்டேன். “இல்லை” என்றார். “ஐயா! வேதத்தில் உள்ளதையே முழுமையாக கடைபிடிக்க முடியாமல் இருக்கிறேன் வேதத்தில் இல்லாததை நான் எப்படி நம்பி கடைபிடிக்க முடியும்? என்றேன். உடனே அவர் சிரித்துக்கொண்டே, “நீங்கள் சொல்வதும் சரி தான்” என்றார். இப்படி பல்வேறு வித்தியாசங்கள் இருந்தாலும், இயேசுதான் உலக இரட்சகர் என்பதை எல்லோரும் ஒன்றாக நம்புகிறார்கள்.
பண ஆசையை பாவம் என்று கூறும் கிறிஸ்தவர்கள், ஏன் வரதட்சணையைக் கேட்டு கொடுமைப்படுத்துகிறார்கள் ?