எங்கள் வீட்டு வேலைகள், அலுவலக வேலைகள் அனைத்தையும்; நாங்கள்தான் செய்யவேண்டும். எங்களுக்கு குடும்பங்களும் பொறுப்புகளும் உண்டு. ஆனால், எங்களுக்கு கிடைத்த இரட்சிப்பின் ஆனந்த அனுபவத்தை மற்றவர்களும் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற நல்லெண்ணத்தால் தான் நாங்கள் இயேசுவின் இரட்சிப்புச் செய்தியை மற்றவர்களுக்கு சொல்கிறோம்.
ஐரோப்பாவிலுள்ள ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்து, செல்வச் செழிப்போடு வாழ்ந்து கொண்டிருந்த அன்னை தெரெசா என்னும் தங்க மங்கை, இந்திய நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு, தொழுநோயாளிகளுக்கு, ஆதரவற்ற அநாதைகளுக்கு பணிசெய்ய இந்தியாவுக்கு வந்ததையும், அதன் விளைவாக அவர் பட்ட பாடுகளையும், அந்த புனிதவதி பெற்ற நோபல்பரிசையும் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவருக்கு வேறு வேலையே இல்லையா? அவர் ஐரோப்பாவிலுள்ள ஒரு பணக்கார இளைஞனைத் திருமணம் செய்து, குழந்தைக் குட்டிகளைப் பெற்றுக்கொண்டு தன் பிழைப்பை நடத்தியிருக்கலாமே! ஏன் இல்வாழ்வைத் துறந்து சமுதாயப்பணி செய்யவேண்டும்? எத்தனை ஆயிரம் வாழ்விழந்தவர்கள் அவர்மூலம் மறுவாழ்வைப் பெற்றுக்கொண்டார்கள்! யோசியுங்கள். அன்னைத் தெரெசாவை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டுமென்று எத்தனையோ மதவெறி பிடித்த அரசியல்வாதிகள் முயற்சி செய்தார்கள்! ஆனால், அவர்களுடைய சமுதாயப்பணியை முறியடிக்க முடியவில்லை. யாரோ பெற்றுப்போட்ட வேற்றுநாட்டு அநாதைகளை நான் ஏன் வளர்த்து ஆளாக்க வேண்டுமென்று அந்த தாய் யோசித்திருந்தால், கொல்கத்தா நகரத்தின் நிலைமை எப்படி இருந்திருக்கும்? யோசியுங்கள். அன்னைத் தெரெசாவின் மறைவுக்குப்பின், இயேசுவை ஏற்றுக்கொண்ட நிர்மலா என்னும் ஒரு பிராமண குலத்தில் பிறந்த சகோதரி அந்த அமைப்பை நடத்துகிறார்கள். அவர்களுக்கும் வேறு வேலையே இல்லையா என்று கேட்கப்போகிறீர்களா?
இந்தியாவில் பிறந்து வளர்ந்து, “வந்தே மாதரம், ஜெய்ஹிந்த், பாரத் மாதாகி ஜெ” என்று அடிக்கடி தங்களை தேசபக்தி உள்ளவர்களைப்போல காட்டும் இந்துக்கள் எத்தனைபேர் இந்தியத் தொழுநோயாளிகளுடைய உடலைத் தொட்டு அவர்களுக்கு சேவை செய்வார்கள்? இப்போதைய அவசர தேவை மதவெறியல்ல; மனிதநேயம். எனக்கு தெரிந்த எத்தனையோ பட்டதாரிகள், அறிஞர்கள், தொழில் வல்லுநர்கள் தங்களுடைய எல்லாவற்றையும் துறந்து இந்த அருட்பணி செய்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்து சமுதாயப்பணி செய்பவர்கள் படிப்பறியாதவர்களோ, ஏழைகளோ அல்ல. மாறாக, பெரிய பணக்காரர்களாக, படிப்பறிவுடையவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது இறைஅழைப்பிற்கு கீழ்படிந்து காடுகள், மேடுகள், ஆபத்தான சூழல்களென்று பார்க்காமல் இறைப்பணியாற்ற அர்ப்பணித்தவர்கள். கிறிஸ்தவப்பணி என்பது வேலை ஒன்றும் இல்லாதவர் பொழுதுபோக்கிற்காக செய்யும் விளையாட்டல்ல. தங்கள் வாழ்வில் எல்லாவற்றையும்விட அதிக மதிப்பையும், அன்பையும் இயேசுவின்மீது வைப்பதால், மேலான மதிப்பையும் அன்பையும் மக்களுக்கும் கொடுத்து செய்யும் தன்னார்வத் தொண்டு.
இதை எழுதும் நான் பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஒரு பொறியியல் பட்டதாரி. நான் துபாயில் பணிசெய்து கொண்டிருக்கும்போது கடவுளின் தூண்டுதலால் இறைப்பணி செய்ய இந்தியாவுக்கு வந்தேன். எனது பட்டத்தையும், பதவியையும், அதனால் வரும் செல்வாக்கையும் மனதில் வைக்காமல், கடவுளின் பெயரில் மக்களுக்கு தொண்டுசெய்து, ஆன்மீக விழிப்புணர்வூட்டுவதையே பெரிய காரியமாகக் கருதி இந்த பணிக்கு வந்தேன். நான் பிழைப்பதற்காக இறைப்பணிக்கு வரவில்லை வரவேண்டிய தேவையுமில்லை. பவுல் என்னும் இறைத்தொண்டர் இயேசுவின் அன்பால் ஈர்க்கப்பட்டு, தனக்கு லாபமாயிருந்தவைகள் எல்லாவற்றையும் நஷ்டமென்றும் குப்பை என்றும் தூக்கி எறிந்தார். இரத்ததானம் செய்து ஓருயிரைக் காப்பாற்ற நினைக்கும் உங்களிடம், “உங்களுக்கு வேறு வேலையில்லையா என்று உங்கள் நண்பர் கூறினால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?