பதில்: _”கிறிஸ்தவர்கள் சாதிப் பாகுபாடுகளிலிருந்து விடுதலை அடைய வேண்டுமானால் முதலாவது சாதியை உருவாக்கிய இந்துத்துவத்திலுள்ள சாதியை ஒழிக்கவேண்டும்; அப்போதுதான் கிறிஸ்தவர்கள் சாதி பார்ப்பதை விடுவார்கள்”_ என்று ஒரு ‘கிறிஸ்தவ அறிவாளி’ கூறினார். இது எப்படி இருக்கிறதென்றால், _”பாவத்தை உருவாக்கிய பிசாசு முதலில் பாவம் செய்வதை நிறுத்தினால்தான் கிறிஸ்தவர்கள் பாவம் செய்வதை விடுவார்கள்”_ என்று கூறுவதுபோல் உள்ளது.
“கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதியுணர்வை அழிக்க இந்து மதத்தையே அழிக்கவேண்டும்”_ என்று வேறொரு ‘கிறிஸ்தவ தத்துவஞானி’ கூறினார். இது எப்படி இருக்கிறதென்றால், _”கிறிஸ்தவர்கள் விபச்சாரம் செய்யாமலிருக்க வேண்டுமென்றால் உலகிலுள்ள எல்லா விபச்சாரிகளையும் கொலை செய்யவேண்டும்” என்றும், “கிறிஸ்தவர்கள் மது குடிப்பதை நிறுத்த வேண்டுமெனில், மதுபான உற்பத்தியையே நிறுத்தவேண்டும்”_ என்றும் கூறுவது போலுள்ளது. இந்த பரிசேயத்தனமானக் கொடுமைவாதிகள்தான் கிறிஸ்தவத்தைப் பிறர் வெறுக்கக் காரணமாக இருக்கிறார்கள்.
இந்துக்கள் சாதி உணர்வாளர்களாக இருப்பதற்கு அவர்கள் புனித புத்தகங்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் *மனுதர்மம், பகவத்கீதை, வேதங்கள்* என்பவை காரணமாக இருக்கலாம். ஆனால், இந்துத்துவத்தைவிட்டு வெளியேறிய கிறிஸ்தவர்கள் சாதி உணர்வாளர்களாக இருப்பதற்கு பகவத்கீதை, வேதங்கள், மனுதர்மத்தின்மீது எப்படி பழியை போடமுடியும்?
_இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் (உரோ. 12:2)_ என்று திருத்தூதர் பவுல் நம்மை கற்பிக்கிறார். நாம் இந்த உலகில் வாழ்ந்தாலும் இந்த உலகுக்கு உரியவர்களல்ல. நாம் பரலோகவாசிகள். அதுவே நமது நிலையான வீடு. ஆகவே, இந்துக்கள் சாதி உணர்வோடு வாழ்வதால் நாமும் அவர்களோடு இணைந்து சாதி உணர்வோடு வாழலாம் என்பது குருட்டுத்தனமான கருத்து என்பதை மேற்கண்ட வசனம் நமக்கு உணர்த்துகிறது.
_நீ இளவயதின் இச்சைகளை விட்டு *ஓடிவிடு.* தூய்மையான உள்ளத்தோடு ஆண்டவரது பெயரை அறிக்கையிட்டு வழிபடுவோருடன் நீதி, நம்பிக்கை, அன்பு, அமைதி ஆகியவற்றை நாடித் தேடு (2திமொ. 2:22), எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள் (1தெச. 5:22), தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள் (உரோ. 13:14), நீங்கள் ஆண்டவரோடு இணைந்து, அவர் தரும் வலிமையாலும் ஆற்றலாலும் வலுவூட்டப் பெறுங்கள். பிசாசின் ஏமாற்று வழிகளை எதிர்த்து நிற்கும் வலிமை பெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் அணிந்து கொள்ளுங்கள் (எபே. 6:10,11)_ என்று திருத்தூதர் பவுல் நம்மை கற்பித்து எச்சரிக்கிறார்.
_நெறிகெட்ட இந்தத் தலைமுறையிலிருந்து, *உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்* (தி.ப. 2:40)_ என்று திருத்தூதர் பேதுரு நம்மை அறிவுறுத்துகிறார். பிறர் சாதி உணர்வு உடையவர்களாக இருந்தாலும் நாம்தான் அந்த தீய பண்பாட்டிலிருந்து *விலகி நம்மை காப்பாற்றிக்கொள்ளவேண்டும்* என்று பைபிள் அறிவுறுத்துகிறது. பாவத்துக்கு எதிரான போராட்டத்தின் முதல் நிலையில் பாவத்தைவிட்டு நாம் *விலகவேண்டும்;* அதன் இரண்டாவது நிலையில் பிசாசை *எதிர்க்கவேண்டும்* என்று வேதம் நம்மை அறிவுறுத்துகிறது. _கடவுளுக்குப் பணிந்து வாழுங்கள்; பிசாசை *எதிர்த்து நில்லுங்கள்.* அப்பொழுது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும் (யாக். 4:7)_
_எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு (பிலி. 4:13)_ என்று திருத்தூதர் பவுல் நம்மை ஊக்கப்படுத்துகிறார்.
ஆகவே, _ஆண்டவரையும் அவரது *ஆற்றலையும் தேடுங்கள்; அவரது *திருமுகத்தை* இடையறாது நாடுங்கள்! (1குறி 16:11)_