அம்பேத்கர் கிறிஸ்தவத்தைப் புறக்கணித்து பௌத்தத்தை தழுவிய காரணம் கிறிஸ்தவம் ஒரு வெளிநாட்டு மதமாகவும், பௌத்தம் இந்தியாவில் தோன்றிய மதமாகவும் இருந்ததாலும், இந்திய தேசப்பற்றுள்ள அம்பேத்கர் இந்திய மதமாகிய பௌத்தத்தை தழுவினார் என்று சாதி உணர்வாளர்கள் சிலர் கருத்து சொல்கிறார்கள்.
அம்பேத்கர் இந்தியாவில் பிறந்தவராக இருந்தாலும், மேற்கத்திய நாட்டு கல்வியின் தரம் எவ்வளவு உயர்ந்தது என்று நன்கு உணர்ந்தவர். அவர் பல அயல்நாடுகளில் படித்து, வாழ்க்கைக்கு பயனுள்ள பல பட்டங்களை பெற்றவர். “நான் நாட்டுப்பற்றுள்ள இந்தியன்; கல்வி கற்பதற்காக நான் வெளிநாட்டுக்குப் போகமாட்டேன்” என்று அவர் அடம்பிடிக்கவில்லை. அம்பேத்கர் தன்னுடைய வாழ்க்கையின் முடிவுவரை மேலை நாட்டுக்காரர்கள் அணியும் கோட் (Coat) அணிந்திருந்தார். அவர் அயல்நாட்டு மொழியான ஆங்கிலத்தில் சரளமாக பேசும் புலமை படைத்தவர். அப்படியிருக்க, ‘கிறிஸ்தவம் வெளிநாட்டு மதம்’ என்று பரந்துயர்ந்த இதயமுள்ள அம்பேத்கர் எப்படி புறக்கணித்திருக்கமுடியும்?
இந்துத்துவ சாதிக்கொடுமைகளை அனுபவித்த அம்பேத்கர், வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கும்போது ஒருமுறை காந்தியிடம், “இந்த நாட்டின் குடிமக்களாகிய நாங்கள் நாய்களையும், பூனைகளையும்விட மோசமாக இழிவுபடுத்தப்பட்டு, குடிப்பதற்குத் தண்ணீர்கூட கிடைக்காமல் வாழ்கிறோம். இந்த கேவலமான நிலையில், இந்த நாட்டை என் சொந்தத் தாயகம் என்றும், இந்துத்துவத்தை என் சொந்த மதமென்றும் எப்படி நான் கூறமுடியும்? சுயமரியாதை உள்ள ‘தலித்’ எவனும் இந்த நாட்டைக் குறித்து பெருமையும் பெருமிதமும் கொள்ளமுடியாது. இந்த நாடு எங்களுக்கு இழைத்துவரும் இடுக்கண்களும், கொடுமைகளும் எண்ணில் அடங்காதவை, எனவே நான் இந்தியாவை சார்ந்தவன் என்பதில் வெட்கப்படுகிறேன்” என்று வேதனையோடு சொன்னார் அம்பேத்கர்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க தீர்மானித்தபோது, “ஆங்கிலேயர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறினால் தலித்துகளுக்கு உயர்சாதி என்று அழைக்கப்படுவோரால் ஆபத்து வரும்; எனவே வெள்ளையர்கள் இப்போது வெளியேறக்கூடாது” என்று அம்பேத்கர் சொன்னார். அந்த கருத்தில் பெரியாரும் உடன்பட்டார். அப்படிப்பட்ட அம்பேத்கர் இந்தியாவில் தோன்றிய மதமாக இருந்ததால்தான் பௌத்தத்தை தழுவினார் என்று எப்படி சொல்லமுடியும்?
நான் இந்திய நாட்டுப் பற்றுடையவன்; ஆகவே, இந்தியர் கண்டுபிடித்த பொருட்களை மட்டும்தான் பயன்படுத்துவேன்; அயல்நாட்டினர் கண்டுபிடித்த பொருட்களை நான் பயன்படுத்தமாட்டேன்” என்று நாம் யாராவது சொல்வோமா?